news-details
ஆன்மிகம்
அசிசியாரும் திரு அவை பங்கெடுப்பும்

‘ஆலயத்தைப் பழுது பார்’ என்ற அசரீரியின் குரலுக்குப் பணிந்த புனித பிரான்சிஸ், பழுதடைந்திருந்த புனித தமியான், புனித வானதூதர்களின் அன்னை, புனித பேதுரு ஆலயம் என, தனது சொந்த ஊரில் இருந்த ஆலயங்களை நேசித்துப் பழுது பார்த்தார்.  பின்னாளில் தன் உடலாகிய ஆலயமான திரு அவையின் ஆன்மிக வாழ்வைப் பழுதுபார்க்க வேண்டியதுதான் தனது முதன்மையான கடமை என்பதை உணர்ந்தார். கடவுளை மட்டுமே பற்றாகக் கொண்டு வாழவேண்டும் என்ற அழைப்பைப் பெற்றவர்கள் இறுதிவரை உலகப் புகழ், பொருள், பதவி இவற்றிலிருந்து விலகியே வாழவேண்டும் என்பதைத் தனது வாழ்வால் கற்றுத்தந்தார். நற்செய்தி வாழ்வுதான் நம் வாழ்வு என்று திரு அவைக்குக் கற்றுத்தந்தவர் புனித பிரான்சிஸ்.

தான் வாழ்ந்த காலத்தில், நிலக்கிழார் போல் செல்வத்திலும் செழுமையிலும் வாழ்ந்த குருக்களைத் தன் வாழ்வால் எச்சரித்தார் புனித அசிசி. உலகப் புகழை வெறுக்கவும், பணம் பதவியை மறக்கவும், ‘கடவுள் நிலையை வலிந்து பற்றிக்கொள்ளாது வெறுமையாக்கிய’ நம் தலைமைக் குருவான இயேசு கிறிஸ்துவை நம் வாழ்வாக்கவும், அவரையே பின்பற்றி வாழவும் தன் எளிய தாழ்ச்சிமிகு வாழ்வால் நம்மை வாழ அழைத்தார். தாழ்ச்சி, எளிமை, கீழ்ப்படிதல் போன்ற புண்ணியங்களில் வாழ அழைப்பு விடுத்த புனித அசிசி, தனது சபையின் அங்கீகாரத்திற்காக முழுமையான கீழ்ப்படிதலை மனத்தில் கொண்டு, காத்திருந்து இறுதியில் திருத்தந்தையின் அனுமதி பெற்றார்.

குருக்களுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, “எனக்கு முன் குருவும் புனிதரும் வர நேர்ந்தால், குருவின் கரங்களை முத்தமிடுவேன்; ஏனெனில், வார்த்தையான ஆண்டவரைத் தம் கரங்களால் நமக்கு வழங்குகிறவர்கள் அவர்களே” என்று கூறுவார் புனித பிரான்சிஸ். கடவுளின் தாழ்ச்சிமிகு நன்மைத்தனத்தைத் தூய நற்கருணையில் தூய்மையான மனநிலையில் ஏற்க அழைத்தார். “ஆன்மிகத்தின் ஆழம் அமைதியான ஆராதனை, நற்கருணை மீதான தாகம், இறைவார்த்தைக்குச் செவிகொடுத்தல். இவையே இன்றைய திரு அவையின் வாழ்வின் மையம்” என்றார் நம் புனிதர்.

திரு அவையை இன்று வழிநடத்துவோர் உலகப் புகழ் மற்றும் பொருள் சார்ந்த சுயநல வாழ்வைத் திரும்பிப் பார்த்து மறுபரிசீலனை செய்யவும், அசிசி பிரான்சிஸைப்போல நற்செய்தியின் எளிமையை தமதாக்கவும், நமது திருத்தந்தையர்கள் புனித அசிசி பிரான்சிஸின் வாழ்வை முன்னிறுத்துகிறார்கள். ஆகாய் இறைவாக்கினர் எச்சரிக்கையின் பார்வையிலும், அசிசி பிரான்சிசின் நற்செய்தி வாழ்வின் வழியிலும் நாம் திரு அவையை நேசித்து, “தூய ஆவியின் வழியாக கடவுளின் உறைவிடமாகக் கட்டி எழுப்பப்படவேண்டும்”  (எபே  2:22) என புனித பவுல் உணர்த்துவதை உணர்ந்து நம் அழைப்பை நேசிப்போம். திரு அவையை நம் வாழ்வால் வளப்படுத்துவோம். நம்மை நாமே வளப்படுத்தும் நாட்டத்தைத் தவிர்ப்போம், துறப்போம் (ஆகாய் 1:5-11).

‘பழுது பார்’ என்ற வார்த்தையைக் கவனமாக ஏற்று வாழ்நாள் இறுதிவரை தன்னைப் பழுது பார்த்து நமக்கு முன்மாதிரியாக, ஊக்கமும் தூண்டுதலுமாக இருக்கும் அசிசி பிரான்சிஸ் இன்றும் நம் வாழ்வால் திரு அவையை நேசிக்க அழைக்கிறார். ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’ என்ற திருத்தூது மடலில் திருத்தந்தை பிரான்சிஸ், அசிசி பிரான்சிஸ்போல, “இறைவனின் அன்பில் சிறியவர்களாகவும் அதேநேரத்தில் வல்லமை மிக்கவர்களாகவும் விளங்கவும் நாம் அனைவரும் கிறித்தவர்கள் என்ற முறையில் நாம் வாழ்கின்ற இந்த நலிவுற்ற உலகையும் அதன் மக்களையும் விழிப்போடு காத்து அரவணைக்க அழைக்கப்படுகிறோம்” என்கிறார்.

தான் வாழ்ந்த காலத்தில் புனித பூமியில் நடந்த 5-ஆம் சிலுவைப்போரை  நிறுத்தவும்,  அமைதியை ஏற்படுத்தவும் 1219-ஆம் ஆண்டு எகிப்துக்கு நடந்தே சென்று, சுல்தான் அல்-கமில் அவர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடல் மூலமாக அமைதி உடன்படிக்கை ஏற்பட வழிவகுத்தவர் புனித அசிசி. இந்த ஒப்பற்ற முயற்சியே இன்று பல்வேறு நாடுகளிடையே திரு அவை மேற்கொள்ளும் பல்சமய உரையாடலுக்கு ஊற்று.

குறிப்பிடத்தக்கதும் தனித்துவமானதும், சிறப்பானதுமான ‘கிறிஸ்துமஸ் குடில்’ என்ற பழக்கத்தை 1223-ஆம் ஆண்டு கிரேச்சியோ என்ற ஊரில் அறிமுகப்படுத்தினார். உயிரோட்டமுள்ள கிறிஸ்து பிறப்புக் காட்சியை ஏற்படுத்தி, கிறிஸ்து இயேசுவின் எளிமையை, தாழ்ச்சியை  உலகிற்கு விளக்கி, அந்த புண்ணியத்தில் நாம் பங்கெடுக்க அழைத்தார். இவ்வாறு திரு அவையை நேசித்து, அது வளர தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்தார். அவருடைய இறப்பின் 800-வது யூபிலி ஆண்டில் நாம் நம் வாழ்வை மறுபரிசீலனை செய்து, நம்மைப் புதுப்பித்து, திரு அவை வளர நம்மையே கையளிக்க முற்படுவோம்.