news-details
ஆன்மிகம்
மரியாவும் மனிதனின் மரண அனுபவங்களும்

1. மரியாவின் மண்ணக வாழ்வின் முடிவைப் பற்றிப் பேசுகையில், இரண்டாம் வத்திக்கான் சங்கம் மரியா விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது பற்றிய நம்பிக்கை கோட்பாட்டை வரையறுத்த திருத்தந்தையினுடைய ஆணையின் (Bull) சொற்களையே பயன்படுத்தி இவ்வாறு கூறுகிறது: “இறுதியாக மாசற்றக் கன்னி தொடக்கப் பாவக்கறை எதுவுமின்றிப் பாதுகாக்கப்பெற்று, தன் மண்ணுலக வாழ்வு மாட்சிக்கு எடுத்துச் செல்லப்பெற்றார்; அனைத்துலக அரசியாக கடவுளால் உயர்த்தப்பெற்றார்” (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 59).

எனது முன்னோடியான வணக்கத்திற்குரிய திருத்தந்தை 12-ஆம் பயஸைப் பின்பற்றி இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் திரு அவை பற்றிய சங்க ஏடான இறைத்திட்டத்தில் திரு அவை, மரியாவின் இறப்புப் பற்றிய கேள்விக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வமான பதிலும் கொடுக்கவில்லை. எனினும், திருத்தந்தை 12-ஆம் பயஸ் மரியாவின் இறப்பு பற்றிய உண்மையை மறுப்பதற்கும் முயலவில்லை; மாறாக, இறைவனுடைய தாயின் இறப்பை எல்லா நம்பிக்கையாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு மறையுண்மையாக முறைப்படி அறிவிப்பதற்கான தருணமாக அவர் கருதவில்லை.

கிறிஸ்து மரணத்தை மீட்பின் சாதனமாக மாற்றினார்

உண்மையில் சிலர் தூய கன்னி மரியா இறக்கவில்லை என்றும், அவர் நேரடியாக மண்ணக வாழ்விலிருந்து விண்ணக மகிமைக்கு உயர்த்தி எடுத்துக்கொள்ளப்பட்டார் என்றும் வாதிட்டுள்ளனர். இருப்பினும், 17-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கருத்து அறியப்பட்டிருக்கவில்லை; மாறாக, மரியாவின் மரணத்தையே அவரது விண்ணக மகிமையின் நுழைவாயிலாகப் பார்க்கும் பொதுவான ஒரு பாரம்பரியமே நடைமுறையில் இருந்து வந்துள்ளது.

2. நாசரேத்தின் மரியா தன் உடலில் மரணத்தை அனுபவித்திருக்க முடியுமா? அவரது மகனோடு மரியாவுக்கிருந்த உறவையும் மரியாவின் முடிவையும் தியானிக்கையில் ‘ஆம்’ என்று பதிலளிப்பதே முறையானதொன்றாகத் தோன்றுகின்றது: ஏனெனில், கிறிஸ்துவே மரணத்தைத் தழுவியிருக்கும் போது, அவருடைய தாயாருக்கு அது நிகழவில்லை என்று வாதிடுவது கடினமானதாகும்.

இவ்விடத்தில் எவ்வித ஐயமும் கொண்டிராத திரு அவைத் தந்தையர்களும் இந்தக் கோணத்தில்தான் சிந்தித்தார்கள். புனித சாருக் நகரத்து ஜேக்கப் (....521) என்பவர், மரியாவுக்குக் காலம் நிறைவுற்றபோது ‘எல்லாத் தலைமுறையினரின் வழியில் நடப்பதற்கு’ இறப்பின் பாதையில், ‘ஆசிர்வதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்வதற்கு பன்னிரண்டு திருத்தூதர்களின் குழுவானது ஒன்று கூடியது’ என்று கூறுகின்றார்

எருசலேம் நகரத்து தூய மொதேஸ்து (....634) என்பவர், ‘மகிமைமிக்க இறைவனுடைய தாயின் புனித உறக்கம்’ பற்றிய மிக நெடிய விவாதத்திற்குப் பிறகு, ‘அவரை அவரின் கல்லறையிலிருந்து எழுப்பி’ அவரையும் அவரது மகிமையில் பங்குபெற அவரோடு எடுத்துச் செல்வதற்கான கிறிஸ்துவின் அதிசயிக்கத்தக்க இடையீட்டைப் புகழ்ந்து அவரது புகழ்ச்சியுரையை முடிக்கின்றார்.

தமஸ்கு நகரத்து புனித ஜான் (....704) அவரின் பங்கிற்கு, “இயேசு கிறிஸ்துவைப் பெற்றதனால் இயற்கையின் எல்லா நியதிகளையும் விஞ்சிய அவர் ஏன் அதனுடைய சட்டத்திற்குப் பணியவேண்டும்? அவரது மாசற்ற உடலானது இறப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்?” என்று கேட்கின்றார். மேலும், அவரே அதற்கான பதிலையும் தருகின்றார்: “இறப்பில்லா மையினால் அணிசெய்யப்படுவதற்கு, இயற்கையின் ஆண்டவர்கூட இறப்பின் அனுபவத்தை மறுக்கவில்லை என்பதனால், இறக்கும் நிலையை உதிர்ப்பது என்பது தவிர்க்க முடியாததொன்றாகும். உண்மையில், அவர் உடலளவில் இறந்தார். மேலும், அவரது இறப்பின் வழியாக அவர் இறப்பைத் தோற்கடித்தார்; அழிவின் மீது அழிவில்லாமையை வழங்கினார்; இறப்பையே உயிர்ப்பின் ஊற்றாகச் செய்தார்” (Panegyric on the Dormition of the Mother of God, n. 10: SC 80, 107).

3. திருவெளிப்பாட்டு நூலில் மரணம் என்பது பாவத்திற்கான தண்டனையாகவே சித்தரிக்கப்படுகிறது என்பது உண்மைதான். இருப்பினும், தனித்துவமான இறைச்சலுகையால் மரியா தொடக்கப் பாவத்திலிருந்து விலக்கப்பெற்றுத் தூய்மையானவராக இருக்கிறார் என்று திரு அவை பறைசாற்றுவது, அவர் உடல் சார்ந்த அழியாமை பெற்றிருந்தார் என்ற முடிவுக்கு நம்மை அழைத்துச் செல்லாது. மரணத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுத்து, அதை மீட்பின் வழியாக மாற்றிய தன் மகனைவிடத் தாய் உயர்வானவர் அல்லர்; கிறிஸ்துவின் மீட்புப் பணியிலும் பலியிலும் பங்கெடுத்த மரியா, மனிதகுலத்தின் மீட்பிற்காக அவரது பாடுகளிலும் மரணத்திலும் பங்கேற்க முடிந்தது. அந்தியோக்கியா நகரத்து புனித செவேருஸ் கிறிஸ்துவைப் பற்றிக் கூறுவது மரியாவிற்கும் பொருந்தும்: “ஓர் ஆரம்பக்கட்ட மரணம் இல்லாமல், உயிர்த்தெழுதல் எவ்வாறு நடந்திருக்க முடியும்?” (Antijulianistica, Beirut 1931, 194f.). கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் பங்கெடுக்க மரியா முதலில் அவருடைய மரணத்தில் பங்கெடுக்க வேண்டியிருந்தது!

4. மரியாவின் மரணம் நிகழ்ந்த சூழ்நிலைகள் குறித்த எந்தவொரு தகவலையும் புதிய ஏற்பாடு வழங்கவில்லை. இந்த அமைதியானது, குறிப்பிடத்தக்க சிறப்புக் குறிப்புகள் எதுவுமின்றி, அவரது மரணம் இயல்பாகவே நிகழ்ந்தது என்று அனுமானிக்க நம்மைத் தூண்டுகிறது. அவ்வாறு ஒரு வேளை இல்லையெனில், அதுபற்றிய தகவல்கள் அவருடைய காலத்து மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கவும், ஏதேனும் ஒரு வழியில் நமக்கு வந்து சேராமல் போயிருக்கவும் எப்படி முடியும்?

மரியாவின் மரணத்திற்கான காரணத்தைப் பொறுத்தவரையில், அவர் இயற்கை மரணத்திலிருந்து விலக்கப்பட்டவர் என்று கூற விரும்பும் கருத்துகள் போதிய ஆதாரமற்றவையாகவே தோன்றுகின்றன. இந்த உலகத்திலிருந்து அவர் விடைபெற்ற தருணத்தில், தூய கன்னி மரியாவின் ஆன் மிக மனநிலையை நோக்கிக் கவனிப்பதே மிகவும் முக்கியமானதாகும். இது தொடர்பாக ‘மரியாவின் மரணம் அன்பின் மிகுதியால் நிகழ்ந்தது’ என்று புனித பிரான்சிஸ் தெலசால் (St. Francis de Sales) வாதிடுகிறார். அவர் ‘அன்பில், அன்பிலிருந்து, அன்பின் வழியாக’ நிகழ்ந்த ஒரு மரணத்தைப் பற்றிப் பேசுகிறார். இறைவனின் தாய் தன் மகன் இயேசுவின் மீது கொண்ட அன்பினாலேயே இறந்தார் என்றும் கூறுகிறார் (Treatise on the love of God, bk. 7, ch. XIII-XIV).

மரியாவினுடைய இறப்பானது அன்பின் நிகழ்வாக இருக்கின்றது

உடலியல் நோக்கில், அவரது பூவுலக வாழ்வின் முடிவிற்கான உயிர்ப்பரிமாண (Organic) மற்றும் உயிரியல் காரணம் எதுவாக இருப்பினும், மரியாவைப் பொறுத்தவரை இந்த வாழ்விலிருந்து அடுத்த வாழ்விற்கான பயணமானது, மகிமையில் அருளின் முழுமையான வளர்ச்சியாகவே இருந்தது என்று கூறலாம். எனவே, வேறு எந்தவொரு மரணத்தையும்விட மரியாவின் மரணத்தையே ‘ஆழ்நிலை உறக்கம்’ (Dormition) என்று அழைப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

5. திரு அவைத் தந்தையர்கள் சிலரது படைப்புகளில், மரியாவின் மரண நேரத்தில் தமது தாயை வானக மகிமைக்கு எடுத்துச் செல்வதற்காக இயேசுவே இறங்கி வந்ததாக விவரிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இவ்வாறாக, அவர்கள் மரியாவின் மரணத்தை, அவரைத் தம் தெய்வீக மகனிடம் அவரது சாகா வரமளிக்கும் வாழ்வில் பங்கெடுக்க வழிநடத்திய ஓர் அன்பின் நிகழ்வாக முன்னிறுத்துகின்றனர். தன் மண்ணக வாழ்வின் முடிவில், கிறிஸ்துவோடு என்றென்றும் இருக்கும் பொருட்டு, இந்த உடலிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் என்ற விருப்பத்தை பவுலைவிடவும் மிக வலுவாக மரியா அனுபவித்திருக்கவேண்டும் (ஒப்பிடுக. பிலி 1:23).

மரணத்தின் அனுபவம் தூய கன்னி மரியாவைத் தனிப்பட்ட முறையில் வளப்படுத்தியது. பொதுவான மனிதகுலத்தின் மூலம், அனுபவித்ததை ஏற்று தாமும் விதியைத் தங்கள் வாழ்வின் இறுதித் தருணத்தை நெருங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தனது ஆன்மிகத் தாய்மையை மேலும் திறம்பட வெளிப்படுத்த அவரால் முடிகிறது.