news-details
தமிழக செய்திகள்
திருச்சியில் இளைஞருக்கான எழுத்தாளர் பயிற்சி முகாம் (அக்டோபர் 04)

தமிழ்நாட்டின் ஒரே கத்தோலிக்க வார இதழான ‘நம் வாழ்வு’ ‘வாசிப்பை நேசிப்போம்’ என்னும் முழக்கத்துடன் பள்ளி, கல்லூரி மாணவரையும் இளைஞரையும் நேரில் சந்தித்து வாசிப்புப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. அவ்வகையில் திருச்சி பிராட்டியூரில் உள்ள பொதுநிலையினர் உருவாக்க மையத்தில், தமிழ்நாடு கத்தோலிக்க இளையோருக்கான ஒருநாள் எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இளைஞர் எழுச்சிப் பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்வில், தமிழ்நாடு அச்சு ஊடகப் பணியகத்தின் இயக்குநரும், ‘நம் வாழ்வு’ இதழின் முதன்மை ஆசிரியருமான அருள்முனைவர் இராஜசேகரன், ‘டிஜிட்டல் யுகத்தில் வாசிப்பு மற்றும் எழுத்தின் முக்கியத்துவம்’ என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, ‘நம் வாழ்வு’ இதழின் துணை ஆசிரியர் அருள்பணி. ஞானசேகரன், கட்டுரைகள், கதைகள் மற்றும் கவிதைகளை எவ்வாறு எழுதுவது என்பது குறித்தும், படைப்பாக்கத் திறனை வளர்ப்பது குறித்தும் இளைஞருக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இப்பயிற்சி முகாமில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்தும் 35-க்கும் மேற்பட்ட இளைஞர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, ‘நாங்களும் சிறந்த எழுத்தாளர்களாக உருவெடுப்போம்’ என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். இளையோரை மையப்படுத்தி வெளியிடப்பட்ட நூல்களையும் வாங்கிப் பயன்பெற்றனர். இந்நிகழ்வில், புதிய எழுத்தாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக செல்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், புனித பிரான்சிஸ் அசிசியாரின் விண்ணகப் பிறப்பின் 800-வது ஆண்டு யூபிலியைக் கொண்டாடும் வகையில், பொதுநிலையினர் உருவாக்க மைய வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இப்பயிற்சி முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குநர் அருள்தந்தை கும. எடிசன் முன்னின்று ஒருங்கிணைத்திருந்தார்.