‘உனக்குள்ளே சக்தி இருக்கு; அதை உசுப்பிட வழி பாரு; சுபவேளை நாளை மாலை சூடிடு’ என்கிற திரைப்படப் பாடல் வரிகள் எந்தக் காலத்திற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தற்காலத்திற்குச் சரியாகப் பொருந்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் நித்தம் ஒரு தொழில்நுட்பம் அறிமுகமாகிக் கொண்டே வருகிறது. அதற்கேற்றார் போல, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகிக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் இன்றைய காலகட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் மாணவர்கள், இளைஞர்கள் (ஆண்-பெண் பேதமின்றி) பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்.
ஆம்,
இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது படித்துப் பட்டம் பெறுவது மட்டுமே என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நினைப்புதான் பெரும்பாலான சிக்கல்களுக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்து வருகிறது. இன்று படித்த பெரும்பாலானோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை, கிடைக்கவில்லை என்று புலம்பும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன? என்று யோசித்தால், இன்றையகால மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சரியான திட்டமிடலை மேற்கொள்வதில்லை; தனித்திறன்களை வளர்த்துக் கொள்வதில்லை; வளர்த்துக்கொள்ள எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
உண்மையில்
இக்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகின்றனவா? அப்படி உருவாகிறது என்றால், ஏன் இத்தனை இளைஞர்கள் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்? நமது நாட்டு இளைஞர்கள் தனித்திறன்களில் பின்தங்கி இருக்கிறார்களா? இதற்குக் காரணம் என்ன? இதுபோன்ற பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது?
இன்றைய காலகட்டம்
மனிதனைப்
பண்படுத்தி, அவனது சிந்தனைகளை விரிவுபடுத்தி, ஒரு முழுமையான சுயசார்புள்ள மற்றும் ஆற்றல்மிக்க மனிதனாக மாற்றுவது கல்வி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் கல்லூரி இறுதி ஆண்டு படித்து முடித்து வெளியே வரும் பெரும்பாலான மாணவர்கள் ‘படித்துப் பட்டம் பெற்றுவிட்டோம், இனி வேலைக்குச் சென்றுவிடலாம்’ என
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் படித்த படிப்பு மற்றும் சான்றிதழ்கள் வேலைக்கான நேர்காணலுக்கு மட்டுமே நம்மை வேண்டுமானால் அழைத்துச் செல்லும்; ஆனால், வெற்றிபெற நமது தனித்திறனே கைகொடுக்கும் என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை. அதுதான் பிரச்சினைக்கான முதல் புள்ளி.
உலக
வங்கி அறிக்கை மற்றும் உலகப் பொருளாதார அறிக்கை (Global Economic Report) ஆகியவற்றின்படி, ‘கொரோனா’ பெருந்தொற்றுக்குப் பிறகு டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அசுர வளர்ச்சியால் வேலைவாய்ப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 6 இலட்சம் முதல் 7.5 இலட்சம் மாணவர்கள் பட்டப் படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, பொறியியல் (B.E., B.Tech.) மற்றும்
தொழில்நுட்பம் (Diploma) பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 2.5 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை என்கிறது உயர் கல்வித் துறையின் அறிக்கை.
இந்நிலையில்,
தொழில்நுட்பமும் தொழில்துறையும் வேகமாக வளர்ந்தும் மாறியும் வருகின்றன. அதற்கேற்றாற்போல்தான் பணியாளர்களையும் இதுபோன்ற நிறுவனங்கள் வேலையில் அமர்த்துகின்றன. முன்னொரு காலத்தில் எங்கு வேலை உள்ளது? என்னென்ன பணிகளுக்குப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்? எத்தனை பேர் தேவைப்படுகிறார்கள்? அவற்றுக்கு என்னென்ன தகுதி தேவை? போன்றவற்றைத் தெரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலை மாறியுள்ளது. உலகம் உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிட்டது. இணையம் இன்று உலகைச் சுருக்கியுள்ளது. எந்தெந்த நிறுவனங்களுக்கு என்னென்ன பணியாளர்கள் தேவை? என்னென்ன பணியாளர்களுக்கு என்னென்ன திறன்கள் இருக்கவேண்டும்? என்பதையெல்லாம் தெள்ளத் தெளிவாகத் தற்காலத்தில் பார்த்துவிட முடியும். இதனைப் பின்பற்றி, அதற்கேற்றார்போலத் தங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டாலே மிகப்பெரிய வளர்ச்சியினை அடைய முடியும்.
இன்றைய
காலகட்டத்தில் இதுபோன்ற வாய்ப்புகளைப் பலர் பயன்படுத்துவதில்லை
என்ற குற்றச்சாட்டைத் தொழில்துறையினர் முன்வைக்கின்றனர். 2025 - கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், படித்து முடித்து வேலை தேடும் இந்திய இளைஞர்களில் அதிகமானோர் முறையான தொழிற் பயிற்சி மற்றும் திறன் சார்ந்த படிப்புகளைப்
பெறாமல்தான் வேலை தேடுகின்றார்கள் எனவும், கல்லூரிப் படிப்பினை முடித்து வெளிவரும் மாணவர்களில் 30 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே பணி செய்யத் தயாரானவர்களாக இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. அதேபோல, இந்தியத் திறன் அறிக்கையின்படி (India Skills Report - 2026) நமது நாட்டு இளைஞர்களின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புத் திறன் (Employ-ability Rate) 56.35 விழுக்காடாக உள்ளது. மீதமுள்ள 43.65 விழுக்காடு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தற்போதைய தொழில் துறை மற்றும் வேலைவாய்ப்பிற்குத் தேவையான தகுந்த திறன்கள் இல்லாமல் சவால்களை எதிர்கொள்வதாகக் கூறுகின்றது அந்த ஆய்வு.
‘அவர் சொன்னார், இவர் சொன்னார்; இந்தத் துறையை எடுத்துப் படிக்கச் சொன்னார்கள்; ஆனாலும், எனக்கு வேலை கிடைக்கவில்லையே!’ என்று புலம்பும் முன்பு சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்... ‘நமக்கு என்ன துறை பிடித்திருக்கின்றது?’ என்று நம்மில் பலர் சிந்தித்துள்ளோமா? எல்லாத் துறைகளிலும் எதிர்காலமும் வேலைவாய்ப்பும் கொட்டிக் கிடக்கின்றன. நாம் என்ன செய்கின்றோம்? எந்தத் துறை தற்போது பிரபலமாக உள்ளது? உடனே பிரபலமான அந்தத் துறையில் நுழைகின்றோம்; அந்தத் துறையைப் பற்றித் தெரியாமலே படிக்கின்றோம்; பட்டமும் பெறுகின்றோம்; ‘அதனால் எந்தப் பயனும் இல்லை’ என்றும் புலம்புகின்றோம்.
முதலில்
நாம் என்ன படிக்கின்றோம்? எங்கு படிக்கின்றோம்? அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. ஆர்வத்துடன் படிக்கின்றோமா? அந்தத் துறையைப் பற்றிய புரிதல் நமக்கு உள்ளதா? அது மட்டுமே போதும்.
உடனடித் தேவைகள்
எந்த
ஒரு தனித்திறனையும் வளர்த்துக்கொள்ளாமல், வெறும் கல்லூரி பட்டப் படிப்பினை வைத்துக்கொண்டு ‘வேலையில்லை, அவர்தான் காரணம் - இவர்கள்தான் காரணம்’ என்று அடுத்தவர்மீது பழிபோடுவது அபத்தம்.
கல்லூரி
என்பது பாடம் சொல்லிக் கொடுத்து நம்மை வழிகாட்ட மட்டுமே செய்யும். நாம்தான் நமக்கு என்ன தேவை? நமக்கான எதிர்காலம் என்ன? என்பதனைத் திட்டமிடவேண்டும். அதுவும் இந்தக் காலத்தில் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்து திட்டமிடல் என்பது இருந்திடவேண்டும்; அவ்வாறு இருந்தால் மட்டும்தான் நாளை சிறப்பான எதிர்காலம் என்பது இருக்கும்.
இன்றைய
காலகட்டத்தில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் திறன்கள் இல்லாமல் இருப்பதும் அல்லது திறன்களை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பதும்தான் என்பதை உணர்ந்த மத்திய - மாநில அரசுகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சித் திட்டங்களை உருவாக்கி அதனைச் செயல்படுத்தி வருகின்றன. அதனை முறையாக நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். திறன் மேம்பாட்டு அமைச்சகம் (MSDE-Ministry of Skill Development and
Entrepreneurship of India) மாணவர்கள்,
இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் பயன்பெறும்
வகையில் இதுவரை வரலாறு காணாத வகையில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்க, 2025-ஆம் ஆண்டில் 6,100 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் அந்தத் தொகையை 9885.80 கோடியாக உயர்த்தியுள்ளது.
தமிழ்நாடு
அரசின் சார்பில் வெற்றித் திறன் பயிற்சி என்ற திட்டத்தின் அடிப்படையில் 150 கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து, அதற்கேற்றார்போலச் சிறப்புப் பயிற்சிகள் அளித்து, வேலைவாய்ப்புத் திறன் அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதனைச் சரியான முறையில் பயன்படுத்தித் திறன்களை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
கல்லூரிப்
படிப்பு மற்றும் நமது திறன்கள் ஆகிய இரண்டும் நமது இரு கண்கள் போன்றவை. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இந்த இரண்டும் இருந்தால் மட்டும்தான் சிறப்பான எதிர்காலம் என்பது நமக்குக் கிட்டும். போட்டிகள் நிறைந்த தற்காலத்தில் நல்ல திறன்கள் கொண்டவர்களை மட்டும்தான் தற்சமயம் நிறுவனங்கள் பணியில் அமர்த்துகின்றன.
பணியாளர்களின்
தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன. எந்த அளவிற்குத் தொழில்நுட்பங்கள் வளர்கின்றனவோ, அதற்கேற்றார்போலப் பணியாளர்களின் தேவைகளும் அதிகரிக்கின்றன. உலகம் முழுவதிலும் இதே நிலைதான். இக்காலத்திற்கேற்றார்போலத் திறன்களை வளர்த்துக்கொள்வோம்; வேலையில்லை என்ற கூற்றைப் பொய்யாக்குவோம். பரந்து விரிந்த உலகம் இது! திறன்கள் இருந்தாலே நமக்கான வாய்ப்பு நம்மைத் தேடிவரும். தற்காலத்திற்கேற்றார் போலத் திறன்களை வளர்ப்போம்; சிறகடித்துப் பறப்போம்.