news-details
சிறப்புக்கட்டுரை
மரணம் தரும் செய்தி (நவம்பர் 2 - மரித்தோர் நினைவு)

‘மரணம்’ என்ற வார்த்தையைக் கேட்டுப் பயப்படாதவர் எவருமில்லை. ஒருவர் உடல் அல்லது விபத்திலே சிக்கிக் காயமடைந்து ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதும் சாவை நினைத்து கலக்கமடைகிறார். மரண பயம் அவரைச் சூழ்ந்துகொள்கிறது. மரணத்தைப் பற்றி திருவிவிலியம் என்ன கூறுகிறது?

கடவுள் இந்த உலகத்தைப் படைத்தபொழுது மனிதர் உயிர் வாழ்வதற்கு எவையெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் முதலில் படைத்தார். கடைசியாகத்தான் மனிதரை அதாவது ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கினார். ஏனெனில், மனிதர் எக்குறையுமின்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்பதற்காகவே அப்படிச் செய்தார். கடவுள் தாம் படைத்த ஏதேன் தோட்டத்தில் அவர்களை வைத்து, “இங்குள்ள மரங்களின் பழங்களை யெல்லாம் நீங்கள் உண்ணலாம்; ஆனால், தோட்டத்தின் நடுவிலுள்ள மரத்தின் பழத்தை மட்டும் உண்ணக்கூடாது” என்று கட்டளையிட்டு, “அதை உண்ணும் நாளில் நீங்கள் சாவீர்கள்” என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், அவர்கள் பாம்பின் சூழ்ச்சியில் சிக்குண்டு கடவுள் உண்ணக்கூடாது என்று கட்டளையிட்டிருந்த மரத்தின் கனியை உண்டு கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படியாததால் கடவுள் அவர்களை ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். ஆதாமும் ஏவாளும் செய்த பாவத்தினால் சாவு நுழைந்தது.

“கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால், அலகையால் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்பிற்கு உள்ளாவர்” (சாஞா 2:23-24). “சாவை கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டுமென்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; நெறி தவறிய வாழ்வால் சாவை வரவேற்றுக்கொள்ளாதீர்கள்; உங்கள் செயல்களாலேயே அழிவை வருவித்துக் கொள்ளாதீர்கள்” (சாஞா 1:12-14).

சிலர் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இரவு-பகல் என்று பாராமலும், சரியான உணவு உட்கொள்ளாமலும் உறக்கமில்லாமலும் அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் நிலங்களையும் வயல்களையும் வீடுகளையும் அடுக்குமாடிக் கட்டடங்களையும் கார்களையும் வாங்கிவைத்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஆண்டவர் இயேசு கூறிய உவமை: “செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன் ‘நான் என்ன செய்வேன்? என் விளை பொருள்களைச் சேர்த்துவைக்க இடமில்லையே’ என்று எண்ணினான். ‘ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்; பின்பு என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பல வகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு’ எனச் சொல்வேன்’ என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால், கடவுள் அவனிடம், ‘அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?’ என்று கேட்டார்” (லூக் 12:16-20)

“தன் சாவு நாளைத் தள்ளிப்போட எவனாலும் இயலாது; சாவென்னும் போரினின்று நம்மால் விலகவும் முடியாது” (சஉ 8:8).

மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுச் செல்கின்றனர்.

அதாவது, “நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” (தொநூ 3:19).

மரணத்தைப் புரிந்துகொள்வோம்.