news-details
தமிழக செய்திகள்
சமூகக் குரல்கள்

“அரசமைப்புச் சட்டத்தின் 22(1), 22(2)-இன் படி ஒருவரைக் கைது செய்வதற்கான காரணங்களைக் கூறாமல் அவரைக் கைது செய்ய முடியாது; அவ்வாறு கைது செய்யப்படும் நபரை அருகில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பாக 24 மணி நேரத்திற்குள் ஒப்படைக்கவேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் 22(1) அளித்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்க எந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், அதை நீதிமன்றங்கள் கண்டித்து கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கைதாகும் நபரிடம் அதற்கான காரணங்களைத் தெரிவிப்பது வெறும் சம்பிரதாயத்திற்காக மேற்கொள்ளப்படும் நடைமுறை அல்ல; மாறாக, அது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள பாதுகாப்பாகும். அதைக் கட்டாயம் பின்பற்றவேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படும் காரணங்கள் எழுத்துப்பூர்வமாகவும், கைதான நபர் புரிந்துகொள்ளும் மொழியிலும் இருக்கவேண்டும். கைதிற்கான காரணங்களைத் தெரிவிக்காதது அடிப்படை உரிமை மீறலாகும்.”

நீதிபதிகள் திருமிகு. உச்சல்புயான் மற்றும் ஏ. எஸ். சந்துர்கர், உச்ச நீதிமன்றம் (அமர்வு)

“தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்தும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றியும் வரும் பருவகாலப் பணியாளர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்து உரிய பணிப் பலன்கள் வழங்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து பணி நிரந்தரம், பணிக்காலத்தைக் கணக்கில் எடுத்தல் மற்றும் உரிய பணிப் பலன்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.”

திருமிகு. பிரேமலதா, பொதுச்செயலாளர், தே.மு.தி.க.

“சென்னை பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்வர் இறுதியான முடிவெடுக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் முடிவையே அரசாணை வெளிப்படுத்துகிறது. அந்த அரசாணை முதல்வருக்குத் தெரியாமல் வெளிவந்தது என்றால், அதற்குக் காரணமான அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சென்னையில் பல இடங்கள் இருக்கும்போது, பிடிவாதமாக மீனவர்களை வெளியேற்றி அங்கே தலைமைச் செயலகம் அமைப்பது என்பது தவறானது.”

திருமிகு. பெ. சண்முகம், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி