இரண்டு காலங்கள், ஒரே தேடல்: 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித பிரான்சிஸ் அசிசி. 21-ஆம் நூற்றாண்டில் வாழும் நாம் ‘Gen Z’ தலைமுறையினர். பிரான்சிஸ் வாழ்ந்த காலத்தில் ஸ்மார்ட்போன், இணைய தளம், சமூக ஊடகம், செயற்கை நுண்ணறிவு என எதுவும் இல்லை. ஆனால், இன்றைய ‘Gen Z’ இளம் தலைமுறையினர், டிஜிட்டல் உலகம், சமூக ஊடகம், உடனடித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் நடுவில் வாழ்கின்றனர். இருவருக்கும் காலம் வேறுபட்டாலும், மனிதனின் அடிப்படைத் தேடல்கள் ஒன்றாகவே இருக்கின்றன. இந்தத் தேடலின் அடிப்படைக் கேள்விகளான ‘நான் யார்?’, ‘என் வாழ்க்கையின் பொருள் என்ன?’, ‘நான் ஏன் பிறந்தேன்?’, ‘உண்மையான மகிழ்ச்சி எங்கே?’ போன்ற கேள்விகளுக்கு புனித பிரான்சிஸின் வாழ்க்கை ஆழமான பதிலைக் கொடுக்கின்றது.
பேசுவதைக் காட்டிலும் வாழ்வது - உண்மைத் தன்மையின் மனிதர்: புனித பிரான்சிஸின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று அவரது உண்மைத்தன்மை. இவர் நற்செய்தியைப் பற்றி வெறுமனே பேசவில்லை; நற்செய்தியையே தன் வாழ்க்கையாக வாழ்ந்தார். பிரான்சிஸ், “கடவுள் எனக்குச் சில சகோதரர்களைத் தந்தார்; யாரும் நான் எப்படி வாழவேண்டும் என எனக்குக் கற்றுத்தரவில்லை. உன்னதரான ஆண்டவரே நான் நற்செய்தியின்படி வாழவேண்டும் எனக்
கற்பித்தார்” எனக் கூறுகின்றார். பிரான்சிஸ் உண்மையைத் தேடி அலைந்தார், கண்டுபிடித்தார், உண்மையை வாழ்வாக்கினார்.
இன்றைய ‘Gen Z’ தலைமுறை, ‘உண்மையா... அது என்ன?’ எனக் கேள்வி எழுப்பும் தலைமுறை. போலித்தனத்தை எளிதில் அடையாளம் காணும் தலைமுறை. போலியெனத் தெரிந்தும் உண்மைத்தன்மையை மறுக்கும் தலைமுறை. சமூக ஊடகங்களில் ஒரு முகமும், உண்மையான வாழ்க்கையில் வேறொரு முகமுமாக உள்ளது.
இன்றைய உலகில் புகைப்படங்களை ‘filter’ செய்து அழகாக்கலாம்; சமூக ஊடகப் பக்கங்களை அழகாக வடிவமைக்கலாம்; ஆனால், கடவுளுக்கு முன்பாக நாம் ‘filter’ இல்லாத மனிதர்களாக, உண்மையான மனிதர்களாக வாழவேண்டும். இந்த உண்மையான முக வாழ்க்கையை வாழ்ந்து நமக்கு முன்னுதாரணமாக இருக்கின்றார் பிரான்சிஸ். நாம் பேசுவதைக் காட்டிலும் வாழ்ந்து காட்டுவதே நமது உண்மையான அடையாளம்.
‘Likes’-லிருந்து
‘Love’ நோக்கி: ‘Gen Z’ சமூக ஊடகங்களுடன் பிறந்து வளரும் தலைமுறை. ஆயிரக்கணக்கான followers இருக்கலாம்; நூற்றுக்கணக்கான friends இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் உள்ளுக்குள் தனிமையோடு வாழும் நிலையும் இருக்கின்றது. மனம் விட்டுப் பேச ஓர் உறவுகூட இல்லாத நிலை; நம்பி மனத்தில் உள்ள கருத்துகளைக் கூற முடியாத ஒரு சமூகம். Love இருக்கின்றது; நம்பிக்கையில்லை. Likes இருக்கின்றன; Trust இல்லை.
ஆனால், புனித பிரான்சிஸ் வேறோர் உறவை நமக்குக் கற்றுக் கொடுக்கிறார். சகோதரத்துவம் மற்றும் அன்பு என்ற உறவு. அவர் படைப்புகள் அனைத்தையும் ‘சகோதரர்-சகோதரி’என்று அழைத்தார். ஏனெனில், ஒவ்வொரு படைப்பிலும் கடவுளின் சாயலைக் கண்டார். ஒவ்வொரு மனிதரையும் கடவுளின் கொடையாகவே கருதினார். இன்றைய ‘Gen Z’ தலைமுறையினர் தம்மிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும்: ‘எத்தனை பேர் என்னை Like செய்கிறார்கள்?’ என்பதற்குப் பதிலாக, ‘நான் எத்தனை பேரை உண்மையாக நேசிக்கிறேன்?’ இதுவே Likes-லிருந்து Love-க்குச் செல்லும் பயணம்.
Digital Noise-லிருந்து Divine Silence நோக்கி: புனித பிரான்சிஸ் அமைதியையும் செபத்தையும் நேசித்தார். ஆனால், Gen Z வாழும் உலகில் Notification, Message, Reel, Video, Comment, Like என்று தொடர்ந்து சத்தம் நிறைந்திருக்கிறது. பிரச்சினை technology-யில் இல்லை; technology
நம்மை ஆட்கொள்வதே பிரச்சினை. எனவே, இளையோருக்கு Digital Silence தேவை. ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களாவது Phone இல்லாமல் அமைதியாக இருக்கவேண்டும்;
கடவுளோடு பேசவேண்டும்; நம்முடைய உள்ளத்தைக் கேட்கவேண்டும்; இயற்கையை இரசிக்கவேண்டும்; மற்றவர்களுடன் நேரடியாக உரையாடவேண்டும். புனித பிரான்சிஸ் இன்று வாழ்ந்திருந்தால் அவர் கேட்கக்கூடிய கேள்வி: “நீ கடைசியாக எப்போது phone-ஐ பார்க்காமல் கடவுளைப் பார்த்தாய்?” இந்தக் கேள்விக்கானப் பதில் இருக்கிறதா உங்களிடம்?