news-details
ஆன்மிகம்
இடர்நிறை காலத்தில் துணைவரும் விண்மீன்

போர்கள், வெறுப்பு, வன்முறை, சாதி, மத மோதல்கள், இயற்கைப் பேரழிவுகள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இன்றைய உலகிற்கு, இயற்கையின் அனைத்தையும் சகோதரத்துவ உணர்வுடன் அணுகிய அமைதியின் தூதுவரான அசிசியாரின் வாழ்வு ஒரு பேரொளி. அறிவியலின் அதிநவீன வளர்ச்சி தூரங்களைச் சுருக்கியது போலவே, இதயத்தையும் சுருக்கி விட்ட சமகாலச் சூழலில் அசிசியாரின் அமைதி முழக்கமே நம் அவசரத் தேவை.

UNHCR அறிக்கையின்படி, 2025 இறுதியில் உலகம் முழுவதும் 117.8 மில்லியன் மக்கள் போர், வன்முறை, துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களுள் தங்கள் சொந்த நாடுகளுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்கள் 68.7 மில்லியன் பேர். மத்திய கிழக்கில் ஏற்பட்ட இராணுவ மோதல்கள் புதிய மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன. பிப்ரவரி 2026-க்குப் பிறகு ஏற்பட்ட மோதல்களில் லெபனானில் மட்டும் சுமார் பத்து இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். வெப்ப அலை, வறட்சி, காட்டுத்தீ, வெள்ளம் ஆகியவை உலகைப் பாதித்துள்ளன.

அமைதிக்கு மற்றோர் அச்சுறுத்தல் சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்புப் பேச்சும், தவறான தகவல்களும்! “சொற்கள் பாலங்களை உருவாக்கலாம், பிளவுகளையும் ஆழப்படுத்தலாம்” என்று UNESCO எச்சரிக்கிறது. வெறுப்புப் பேச்சு சமூக நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் சிதைக்கிறது. இன்றைய உலகின் நிலை அமைதியின் அவசியத்தை அவசரமாக உணர்த்துகிறது. போர்கள் மற்றும் வன்முறைகளால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். அதேவேளையில், வெறுப்புப் பேச்சு, சமூக ஊடகத் தவறான தகவல்கள், மத, இனப்பிளவுகள், சுற்றுச்சூழல் அழிவு ஆகியவை மனிதகுலத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்துகின்றன.

“அமைதி என்பது மோதல் இல்லாத நிலை மட்டுமல்ல; நீதியின் இருப்பு” என்றார் அமைதியியல் அறிஞர் ஜோஹான் கால்டுங். எனவே, அமைதியை விரும்புவது மட்டும் போதாது; சமூகத்தில் நீதி, சமத்துவம், அன்பு ஆகியவற்றை உருவாக்க வேண்டும். அமைதி என்பது வானத்தில் தொங்கும் கனவு அல்ல; மனிதனின் செயலால் உருவாகும் உண்மை. அமைதி முதலில் மனித உள்ளத்தில் பிறந்து, பின்னர் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் உலகிற்குமாக விரிவடைகிறது. புனித பிரான்சிசின் வாழ்வியலோடு திருவிவிலியத்தின் போதனை நெருக்கமாக இணைகிறது. இயேசு, “சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இறைவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” (மத் 5:9) என்கிறார். மேலும், “தீமையை நன்மையினால் வெல்லுங்கள்” (உரோ 12:21) என்று கூறும் இறைவார்த்தைகள் பகையை அன்பாலும் வன்முறையை மன்னிப்பாலும் வெல்லவேண்டும் என்ற இறை வார்த்தைகள் பிரான்சிசின் வாழ்வியல் செய்தியை நமக்கு நினைவூட்டுகின்றன. ஏழைகளுக்கு உதவுவதும், இயற்கையைப் பாதுகாப்பதும் அமைதிக்கான செயல்களே. பிரான்சிசின் அமைதிச் செய்தியை நம் வாழ்வில் செயல்படுத்துவது அவசியம். குடும்பத்தில் அன்பையும் மன்னிப்பையும் வளர்ப்போம்; கருத்து வேறுபாடுகளை வன்முறையால் அல்ல; உரையாடலால் தீர்ப்போம். சாதி, மதம், மொழி, இனம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து மனிதநேயத்தை முன் நிறுத்துவோம். சமூக ஊடகங்களில் வெறுப்பையும் பொய்யையும் பகிராமல், உண்மை மற்றும் நல்லிணக்கத்தைப் பரப்புவோம்.

“இறைவா, நான் அமைதியைத் தேடுவதற்கு முன் அமைதியின் கருவியாக என்னை மாற்றுவாயாக!” - புனித அசிசி பிரான்சிஸ்.