அடுத்த நாள் கல்லறைத் திருநாள் என்பதால் எப்போதும் அமைதி பூங்காவாக இருக்கும் பங்குக் கல்லறைத் தோட்டம் பரபரப்பாகவே காணப்பட்டது. பல மாதங்களாக வளர்ந்து வெட்டப்படாமலிருந்த புல், செடிகளைக் கூலி ஆள்கள் வெட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். சில இளைஞர்கள் ஒருநாள் பெயிண்டராக மாறி தங்கள் குடும்பக் கல்லறைக்கு வெள்ளையடித்துக் கொண்டிருந்தனர்.
கல்லறைத்
திருநாளன்று கூட்டம் அதிகமிருக்கும்; மழை பெய்தால் சேறும் சகதியுமாயிருக்கும்; அன்று லீவு எடுக்க முடியாது என்ற காரணத்திற்காக வெளியூரிலிருந்து புறப்பட்டு வந்த சிலர் கல்லறைகளில் பூக்களைப் பரப்பி, மாலைகள் வைத்து மெழுகுதிரி ஏற்றிவைத்துக் கொண்டிருப்பதைக் காணமுடிந்தது.
கல்லறைகளை
உச்சி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்க கல்லறைத் தோட்டத்தில் பிரதான வாயில்முன் வேகமாக வந்து நின்றது ‘இன்னோவா’ கார் ஒன்று. அரைக்கால் டவுசர், டி-சர்ட் அணிந்து
கையில் கோல்ட் பிரேஸ்லெட், கழுத்தில் முறுக்குச் செயினுடன் காரில் இருந்து ஆடம்பரத் தோரணையில் இறங்கி வந்தவரை பிச்சைக்காரக் கும்பல் துரத்திக்கொண்டு வந்தது.
“ஓடு! ஓடு! கல்லறை கேம்பஸ்க்குள்ளே உங்களை யார் உள்ளே விட்டது?” என்று சொல்லிக்கொண்டே கல்லறைத் தோட்டத்தின் நுழைவு வாயிலிலிருந்த உயிர்த்த ஆண்டவர் இயேசு சுரூப மேடைக்கு வந்தவன், தனது குடும்பக் கல்லறையைத் தேட ஆரம்பித்தான். மார்பிள், கிரானைட் கற்களால் உயரமாகச் சில கல்லறைகளும், மண்ணோடு மண்ணாகச் சில கல்லறைகளும், செங்கற்களால் உருவாக்கப்பட்ட சில கல்லறைகளும்... இப்படி இறந்தவரின் வாரிசுகளின் வசதிக்கேற்ப கட்டப்பட்டிருந்த கல்லறைகளில் ஏற்றத்தாழ்வுகளைக் காண முடிந்தது.
எட்டு
வருடங்களுக்கு முன் கொரோனா காலத்தில் இறந்துபோன தந்தையை அடக்கம் செய்து விட்டு குடும்பத்துடன் இலண்டன் பறந்தவன், இன்றுதான் ‘தந்தையைப் பார்க்க’ வந்திருக்கிறான். சுற்றுமுற்றும் தேடியும் தந்தையின் கல்லறையைக் கண்டுபிடிக்க முடியாமல் பொறுமை இழந்து போனான்.
“யாருடா இங்கே வாட்ச்மேன்?”
இலண்டனில்
ஏசியில் வாழ்ந்தவன் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் கத்தியதைக் கேட்டு சுற்றுமுற்றும் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். சற்று நேரத்தில் அழுக்கேறிய அரைக்கால் டவுசருடன் தலையில் முண்டாசு கட்டிய கல்லறைத் தோட்டத்து வாட்ச்மேன் அந்தோணி அங்கு வந்து சேர்ந்தான்.
“யாரு சார், ஏன் இப்படிக் கத்துறீங்க? உங்களுக்கு என்ன பிரச்சினை சார்?”
“யோவ், நீதான் இங்க வாட்ச்மேனா? எவனும் காசு கொடுத்தால் கல்லறையை மாற்றிக்கொடுத்து விடுவியா?”
“சார், கொஞ்சம் பொறுமையா பேசுங்க.” சாந்தமாகவே பேசினான் அந்தோணி. இறந்தவர்களை அடக்கம் செய்ய வரும் சில குடிகார ஜென்மங்கள் கல்லறைப் பணியாளர்களை வாய்க்கு வந்தபடி பேசுவதைப் பலமுறைக் கேட்டுச் சலித்துப் போன அனுபவம் இவனுக்கு.
“எங்க அப்பா கல்லறை இங்கதான் இருந்தது. இந்த லேம்ப் போஸ்ட்தான் லேண்ட் மார்க்.”
“சார் கொஞ்சம் பொறுமையா தேடிப் பாருங்க; கல்லறையை எல்லாம் அவ்வளவு ஈஸியா யாரும் மாற்ற முடியாது. கல்லறைக் கமிட்டியும் அதுக்குப் பர்மிஷன் கொடுக்க மாட்டாங்க.”
“யோவ், எங்க அப்பாவைப் புதைச்ச இடம் எனக்குத் தெரியாதா? இந்த இடத்துல மண்ணு கல்லறைதான் இருந்துச்சு; மேல வேற எவனோ பெரிசா கல்லறை கட்டியிருக்கான்.”
“இறந்து போன உங்க அப்பா பேரு என்ன?”
“எங்கப்பா பேரு தைரியநாதன். இந்தப் பங்கிலே ‘கணக்கு வாத்தியார்’ என்று
சொன்னாலே அவரைத் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது.”
“அவரு பையனா சார் நீங்க. நானும் அவர்கிட்ட படிச்ச ஸ்டூடன்ட்தான் சார். நீங்க நிக்கிறீங்களே அவரு கல்லறைதான் அது!”
“யோவ், கவுண்டமணி செந்தில் வாழைப்பழம் ஜோக்குல வர்ற மாதிரி ஜோக் அடிக்கிறியா?”
“சார், கொஞ்சம் கல்லறை மேல பதிச்சிருக்கிற மார்பிள் கல்லைப் பாருங்க. என்ன பேரு எழுதியிருக்குன்னு படிச்சுத்தான் பாருங்களேன்.”
பல
வண்ணப் பூக்கள் அலங்கரிக்கப்பட்டிருந்த கல்லறை மேடையில் பூக்களைத் தள்ளிவிட்டுப் பார்த்தவன் ஒரு கணம் அதிர்ந்து போனான்; தந்தையின் பெயரும், தாயாரின் பெயரும் அழகாகப் பொறிக்கப்பட்டிருந்தது.
“சார், நீங்கதான் அவரு பையனா?”
“ஆமாம்!”
“ஏன் சார், இத்தனை வருஷம் எங்க போனீங்க? வருசத்துல ஒருநாள் கூட வந்து கல்லறைக்குப் பூ போடத் தெரியாதா
உங்களுக்கு?”
கல்லறை
வாட்ச்மேனின் கேள்வி இவனுக்கு ‘சுருக்’கென்று குத்தியது போலிருந்தது. வரும்போது இருந்த ஆணவப் பேச்சு அடங்கிப் போயிருந்தது.
“இல்லப்பா! நான் வெளியூர் போய் செட்டிலாயிட்டேன். எனக்கு லீவு கிடைக்கிறது சிரமம்.”
“எங்க சார்! நீங்கதான் வரலை, உங்க நண்பர்கள், உறவினர்கள் யாரையாவது வரச்சொல்லி பூ போடச் சொல்லி
இருக்கலாமே...” அவனிடம் பதில் ஏதும் இல்லை.
“ஒவ்வொரு வருசமும் இந்தக் கல்லறைக்கு மட்டும்தான் யாரும் வரமாட்டாங்க. கல்லறைக் கமிட்டிதான் மாலை போட்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பாங்க.”
பணக்கார,
பாசக்கார மகன் பதில் ஏதும் கூற முடியாமல் சிலையாக நின்றுகொண்டிருந்தான்.
“எங்க அப்பாவைப் புதைக்கும்போது இது மண் கல்லறை. அப்போ, இதைக் கட்டினது யாரு?”
“போன வருஷம் நாலு பசங்க வந்தானுங்க. இவருடைய மாணவர்களாம். இப்போது துபாயில் வேலை பார்க்கிறாங்களாம். இந்த வாத்தியாரால்தான் ப்ளஸ் டூவில் சென்டம் வாங்கினதா சொன்னாங்க. அவங்க நாலு பேரும் சேர்ந்துதான் இந்தக் கல்லறையைக் கட்டிக் கொடுத்தானுங்க.”
தான்
செய்ய வேண்டிய கடமையைத் தந்தையின் மாணவர்கள் செய்திருந்ததை எண்ணி மனம் உடைந்து போனான். கைப்பையைத் திறந்து சில நோட்டுகளை எடுத்து வாட்ச்மேனிடம் நீட்டினான்.
“சார், எதுக்கு சார் உங்க காசு! எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் இவரு. முதல்ல பெத்த தகப்பனை மதிக்கக் கத்துக்கோங்க. அவர் இல்லைன்னா நீங்க இந்த அளவுக்கு உயர்ந்திருப்பீங்களா? போங்க சார், போய் உங்கக் காசை அந்தப் பிச்சைக்காரர்களுக்குத் தர்மம் பண்ணுங்க.”
சொல்லிவிட்டு
நகர்ந்த அந்தோணியைப் பார்த்தான். கண்ணீர் விழிகளுடன் மீண்டும் ஒரு முறை கல்லறையைப் பார்த்தான். கல்லறையில் எழுதப்பட்டிருந்த ‘இன்று நான், நாளை நீ’ வாசகம் இவனுக்காகவே எழுதப்பட்டதுபோல இருந்தது.