news-details
சிறப்புக்கட்டுரை
மௌனமே சாட்சியமாய்...

நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய அரசின் ‘உபா’ எனும் பெயர் கொண்ட கொடுங்கோல் சட்டத்தின்கீழ் சிறைவைக்கப்பட்டு, சிறையிலேயே மடிந்துபோன அருள்தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் நம் நினைவில் இருக்கிறார். தமிழ்மண் துறந்து, ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமையைக் காக்க வாழ்ந்தார் என்பதால் ‘நக்சல்’ எனும் நாமகரணம் சூட்டப்பெற்று ‘முடித்து’ வைக்கப்பெற்றார். தன் பணிக்கெனத் தெரிவு செய்யப்பட்ட இடங்களில், தான் வாழ்ந்த பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் அவல வாழ்வைக் கண்டு மௌனியாகாமல் வாழ்ந்தார் இவர். தந்தை அவர்கள் தன் வாழ்வு பயணத்தை ஒரு சிறு நூலாக வெளியிட்டார். அந்நூலின் பெயர்  ‘I am not a silent spectator’. தமிழில் இந்நூல் ‘நான் ஒரு மௌன சாட்சி அல்லேன்’ என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது (வைகறைப் பதிப்பகம்).

அருள்தந்தை அவர்கள் மௌன சாட்சியாக இல்லாமல் துடிப்புமிக்க, உயிர்ப்புள்ள சாட்சியாக வாழ்ந்தார் என்பதனாலேயே பலியானார்; ஆனால், இன்றும் வாழ்கிறார்!

இன்று இக்கட்டுரை எழுதப்பெறும் நேரத்தில் - நாடு மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்பை எதிர்கொண்டு வருகிறது. மத அடிப்படையிலான வகுப்புவாதக் கருத்தியலை மக்களிடம் விதைத்து, அதன் மூலம் முளைவிட்ட பயிரினை அரசதிகாரம் நோக்கி ஒருங்கிணைத்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது ஒரு கும்பல்! மதவாதக் கருத்தியலை உள்ளடக்கமாகக் கொண்ட ஓர் அரசு தனது அதிகாரத்தைத் தக்கவைக்க என்னவெல்லாம் செய்யுமோ, அவற்றையெல்லாம் சர்வாதிகாரத் தோரணையில் செய்ய முயன்றதன் விளைவே இன்றைய இந்தியத் தெருக்களில் நாம் காணும் எதிர்ப்பலைகளின் வெளிப்பாடுகள்.

இந்தியத் தலைநகரில் தன்னெழுச்சியோடு, எவ்வித ஆதாய நோக்கமுமின்றி, வாக்குகளைச் சேகரிக்கும் குறுகிய நோக்கமுமின்றி, சுயநல அரசியல் நோக்கர்களின் தூண்டுதலுமின்றி எழுந்த பெருங்கூட்டம், மோடி அரசினை மண்டியிட வைத்தது. தனக்கென்று கொச்சைப்படுத்தும் நோக்கில் கொடுக்கப்பட்ட நாமத்தையே ஏற்றுக்கொண்ட இக்கூட்டம், ஆள்வோர் கொடுத்த ஏளனப் பெயரைத் தாங்கியே வெற்றியும் பெற்றது.

இன்றைய ஆளும் அரசினை விமர்சிப்போர், போராடுவோருக்கெல்லாம் ‘தேசத்துரோகிகள்’ என்றும், ‘ஊடுருவல்காரர்கள்’ என்றும், ‘பிரிவினை வாதிகள்’ என்றும், ‘அந்நியரின் கைக்கூலிகள்’ என்றும், ‘நகர்ப்புற நக்சல்’ என்றும், ‘திமாகி நக்சல்’ என்றும் புதுப்புது நாமகரணம் சூட்டி, குடிமக்களைத் திசைதிருப்புவதன் மூலம் - எழுப்பப்பட்ட பிரச்சினைகள் எத்துணை அளவு உண்மையாக இருந்தாலும், இல்லாத ஒன்றுபோல் காட்டிக்கொண்டு நகர்ந்து செல்கிறது மோடி அரசும், அவர் அரசின் சகாக்களும். இந்தத் தன்னெழுச்சிக் கூட்டத்தினை யார்? எவர்? என அடையாளம் காட்டக்கூட திராணியற்று அசந்து நிற்கிறது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி தன்னெழுச்சியாய் திரண்ட இக்கூட்டத்தின் தலையீட்டிற்கு நோக்கம் என்ன? ‘தலையீடு’ (intervention) என்ற ஒற்றை வார்த்தையே இவர்களின் நோக்கம்.

‘தலையீடு’ எனும் மதிப்பீடு

‘தலையீடு’ என்பது ஒரு வெற்றுச்சொல் அல்ல; ‘தலையீடு’ என்பது மிக உயர்ந்த மதிப்பீடு. இம்மதிப்பீட்டை வெறும் திறனால் (Skill) வளர்க்க முடியாது. அநீதி கண்டு, அவமானம் கண்டு பதைக்கின்ற நெஞ்சத்தினை அளவுகோல் கொண்டு அளக்கமுடியாது. தலையீடு செய்யும் மானுடருக்கான இயல்பு இயற்கையானது, தன்னெழுச்சியானது. தலையீடு செய்யும் மானுட இயல்பு இயற்கை என்பதனால்தான் இச்சமூகம் வாழ்கிறது. தலையீடு செய்யும் மானுட இயல்பில் தன்னலம் இல்லை; ஆனால், தன்னை இழக்கும் தியாகம் உண்டு.

‘உண்டாலம்ம இவ்வுலகு’

புறநானூற்றுப் புலவனின் மேற்கண்ட வரிகள் இங்குப் பொருத்தமாக இருக்கும். இவ்வுலகில் நாம் காணும் பேதங்கள், பிளவுகள், பாகுபாடுகள்... இவையெல்லாம் உண்மையே. எனினும், ‘இவ்வுலகம் இன்னும் ஏன்?’ என்ற கேள்விக்கு, ‘தமக்காக வாழாமல், பிறருக்கென வாழ்வோர் இன்னும் உலகில் இருப்பதும் உண்மை என்பதனால்தான் உலகம் இயங்குகிறது’ என்பார்.

‘தலையீடு’ என்ற சொல் உள்ளடக்கிய மதிப்பீட்டை இயேசுவை ஏற்றுக்கொண்டோரைக் காட்டிலும் ஏனையோர் அதிகம் அறிய வாய்ப்பில்லை. இயேசுவின் உயிர்ப்பலி எனும் தலையீட்டால் உலகம் உய்வுபெற்றது என்பதுதானே நம் நம்பிக்கை! உலக வரலாற்றில் அவ்வப்போது தோன்றிய ஒருசிலரின் தலையீட்டால்தான் உலகம் இன்னும் சிறிய நம்பிக்கையோடு வாழ்கிறது.

‘தலையிடாமை’ ஒரு பாவச்செயல்

அறிஞர் பெர்னாட்ஷாவின் அருமையான கூற்று ஒன்றினை இங்குக் கையாள முடியும். அவர் கூறுவார்: ‘மானுடரின் மிகப்பெரிய பாவம் (Greatest Sin) எது?’ என்ற கேள்விக்கு அவர் கூறுவார்... “மாந்தர் ஒருவர் மற்றவர்மீது கொள்ளும் பகை (Haterd) பெரிய பாவமன்று; ஆனால், மற்றொருவர் படும் இன்னலைக் கண்டும், கண்டுகொள்ளாமை (Indifference) என்பதுதான் மிகப்பெரிய பாவம்” என்று. கண்டுகொள்ளாமை நிலவும் சமூகத்தில் தலையீடு இல்லை. தலையீடு என்னும் மதிப்பீடு வளர்க்கப் பெறாத சமூகம், மானுடரை உள்ளடக்கிய சமூகமாக இராது.

கிறித்தவமும் தலையீடும்

இயேசுவின் தலையீட்டுக் கொள்கைக்கு வடிவம் கொடுக்க உருவான திரு அவை, தன் பணிவாழ்வால் உலகில் தலையீடு செய்தது. திரு அவை உலகு சார்ந்த பணிகளால் மக்களை அதிகாரப்படுத்தியது. குறிப்பாக, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இலக்கு மக்களை அடையாளம் கண்டு, தன் பணி வாழ்வில் அவர்களை மேம்படுத்தத் தலையீடு செய்தது. வர்க்கபேதமும், வர்ண பாகுபாடும் மிக வலுவாகக் கட்டப்பட்டிருந்த இந்தியச் சமூகத்தினுள், கணிக்கவே முடியாத அளவில் தன் ‘பணி’ என்னும் ஆயுதத்தால் தலையீடு செய்தது கிறித்தவம்.

இந்தியச் சமூகம் மிகக் கவனத்தோடு கட்டிக் காத்த சனாதனக் கோட்டைத் தகர்ந்து போகும் வகையில் கிறித்தவத்தின் தலையீடு இருந்தது என்பதாலேயே, இந்தியக் கிறித்தவத்தை உள்நாட்டு எதிரிகள் மூவருள் முதல்வராக இந்துத்துவம் அடையாளம் காட்டுகின்றது. எதிரியாக, அந்நியச் சக்திகளின் முகவர்களாகத் தொடர்ந்து அடையாளம் காட்டப்படுகின்ற கிறித்தவம், அனைத்தையும் தாங்கி நிற்பதன் காரணம், அது செய்துவரும் தலையீட்டுப் பணிகளால்தான்.

இன்று ஏன் இப்படி?

இந்திய மக்களுக்கான ஒரு சனநாயக அரசும், சனநாயகத்தின் அரணான அரசமைப்புச் சட்டங்களும், சட்டங்களின் பயன்கள் மக்களைச் சென்றடைய உருவாக்கப்பட்ட சனநாயக நிறுவனங்களும், ஏற்கெனவே திரு அவை சார்ந்த நிறுவனங்களால் மக்களை நோக்கிச் செய்யப்பட்ட பணிகளுக்குக் காவலாய் அமைந்தன. அரசமைப்புச் சட்டங்கள் தந்த அந்தப் பாதுகாப்பு அரண்கள் திரு அவையின் பணிகளுக்கு மேலும் வலுசேர்த்தன.

‘மதச்சார்பற்றக் குடியரசு’ என்று அறிவிக்கப்பெற்ற இந்தியா, மதச்சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தைப் பாதுகாத்தது. ஆனால், எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் உறுதியளிக்கப்பட்ட மதச்சார்பற்றக் கொள்கைகள், குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள், இவை அனைத்திற்கும் மேலான சனநாயகம் என்னும் அரசமைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இன்றைய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. இவை நம்மவரின் செவிகளுக்கு எரிச்சலைத் தரவில்லையானால்... திரு அவை எப்போதும் எங்கும் தளராமல் நடத்திக்கொண்டிருக்கும் கருத்தரங்குகள், ஆலயத்துள் அரங்கேறும் மறையுரைகள், ஆடம்பரத் திருப்பலிகள்... இங்கெல்லாம் கேட்கப்பெற வேண்டிய முழக்கங்கள்... குறிப்பாக, ‘ஒரு முழக்கம்’ கேட்கப்பெறவில்லையே! “சனநாயகம் காப்போம்!”, “அரசமைப்பைக் காப்போம்!” - இவ்விரு முழக்கங்கள் அடங்கிய பதாகைகளைப் பிறர் ஏந்துவது நம் கண்களுக்குத் தென்படவே இல்லையா?

மேற்கண்ட முழக்கங்களின் உள்ளடக்கத்தில் நாம் செய்யும் பணிகளின் உள்ளடக்கம் இருக்கிறது அல்லவா? நாடு விடுதலை பெறும் முன் இம்மாதிரியான பாதுகாப்புக் கவசங்கள் இல்லாத காலத்திலும் நாம் பணிகளைச் செய்தோம். நம் முன்னோர் கண்ணீர் விட்டு வளர்த்த சுதந்திரப் பயிரின் மூலம் கிடைத்த இக்கவசங்களுக்கு உண்மையாகவே இன்று ஆபத்து நேரிட்ட வேளையில், ஏன் மௌனிக்கின்றோம்? மௌனமே நம் கலாச்சாரமானால், நாம் நம்மை இழந்துவிடமாட்டோமா?

திரு அவையும், அந்த அவை முன்னெடுக்கும் நிறுவனங்களும் நற்செய்தியை மக்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய களங்கள்! உலகில் இயங்கினாலும், உலக மாயைகளுக்கு ஆள்படாமல் தனித்து இயங்க வேண்டியவை அவை. மக்களை அவமதிக்கும் ஓர் அரசின்மீது மக்கள் நம்பிக்கை இழந்துபோகையில், மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய கிறித்தவர்களின் நிலைப்பாடு என்னவாயிற்று?

இன்றைய ஒன்றிய அரசு சனநாயகத்தை நம்பாத ஓர் அரசு; அரசமைப்புச் சட்டத்தை ஏற்காத ஓர் அரசு; சனநாயகத்தின் முக்கியக் கூறாகிய தேர்தலை மட்டும் கையில் வைத்திருக்கும் அரசு; மதப்பெரும்பான்மை மூலம் ‘மதப்பெரும்பான்மை வாதத்தை’ நிறுவ முயலும் அரசு; தேர்தல் முறையைக் கேவலப்படுத்தும் வகையில் அனைத்து வகை மீறல்களையும் துணிவாகச் செய்துவரும் ஓர் அரசு!

குடிமக்களுக்கு எதிரான இவ்வரசு, கல்வியில், தேர்வு முறையில் தவறு செய்தபோது நாடெங்கும் கல்வி நிறுவனங்களை நடத்தும் பெருமை மிக்க நாம் அப்போது மௌனச் சாட்சிகளானோம். அரசமைப்புச் சட்டங்கள் தாறுமாறாக மீறப்படுகையில் மௌனிகளானோம்.

நம் ஆயர் பேரவைக் கூட்டங்கள், துறவறச் சபைகளின் ஆண்டுக் கூட்டங்கள் எல்லாம் வெறுமனே கூடிக்கலையும் கூட்டங்களா?

அரசமைப்பு நூல் ஒன்றினை எப்போதும் கரத்தில் ஏந்தியுள்ளார் இராகுல் காந்தி. கர்நாடக மாநிலத்தின் முசுலிம் சமாத்துகளில் தினமும் அரசமைப்பின் முகப்புரையை வாசிக்கின்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றிய அறிவை நம் பள்ளி மற்றும் கல்லூரி அளவில் கொண்டு செல்லும் முயற்சி ஏதாவது நடக்கிறதா?

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் குறிப்பாக, துறவியர் நடத்தும் பள்ளிகளில் மனித உரிமைகளைப் பாடமாக நடத்திய அனுபவமே எனக்கெல்லாம் உண்டு. இப்போது இந்திய அரசமைப்புச் சட்டத்தை நம் பள்ளிகளில் கொண்டு செல்வதற்கான வாய்ப்பை நாம் கண்டறிய வேண்டும்.

கிடைத்த வாய்ப்பையெல்லாம் தலையீட்டுக்கான கவசமாகக் கொண்டு பயன்படுத்தவில்லையானால், நாம் மக்களோடு இல்லையென்றுதான் அர்த்தம்.

எனவே, நம் நிறுவனங்கள் அனைத்தையும் - சனநாயகத்தையும் அரசமைப்பையும் காக்கும் கவசங்களாக்குவோம்; தலையீட்டை வாழ்வாக்குவோம்.