சுகி சிவம் நாடறிந்த ஆன்மிகப் பேச்சாளர், எழுத்தாளர், தமிழ் மொழியியல் அறிஞர், பட்டிமன்ற நடுவர், வாழும் கலை பயிற்சியாளர், தொலைக்காட்சி தன்னம்பிக்கைப் பேச்சாளர். இவர் ஒரு பெண்கள் கல்லூரியில் மாணவிகளைப் பார்த்துக் கேட்கிறார்: “குறிப்பிட்ட நான்கு நடிகர்களின் பெயரைக் கூறியவுடன் நீங்கள் அலை அலையாய் கைத்தட்டுவது ஏன்? இந்த வாலிபக் கிழவர்கள் உங்களுக்கு வாரி வழங்கியது என்ன? இது உங்களுக்காக உடல், பொருள், ஆவியை அர்ப்பணிக்கும் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செய்கிற துரோகம் அல்லவா? ‘ரீல்’ ஹீரோக்களிடம் மயங்கி, ‘ரியல்’ ஹீரோக்களை மறந்துவிடுகிறீர்கள்” என்றார்.
விட்டில் பூச்சிகள் இருளில்
வெளிச்சத்தைத் தேடுகின்றன. நெருப்பருகே சென்றால் கருகி அழிந்துவிடுவோம் எனத் தெரிந்தும் அருகில் சென்று, நெருப்பில் விழுந்து அழிகிறது. மனிதர்களும் நம்பிக்கை எனும் வெளிச்சம் தேடி, மாயத் திரை வெளிச்சத்தை நம்பி, உள்ளே விழுந்து வாழ்வைத் தொலைக்கிறார்கள்.
நாம் தமிழ்நாடு அரசியலைப் பேசவில்லை; பேசக்கூடாது; பேசுவது பெருந்தவறு. தமிழரின் தரம் தாழ்ந்த திசை மோகமே திசை மாறிய, திசை தெரியா, தமிழ்நாட்டு அரசியல் சூழலாக இன்று அமைந்துள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்களான டொனால்ட் ஹார்டன், ரிச்சர்ட் வோல்
ஆகியோர் மனித உளவியலின் முக்கியக் கூறுகளாகத் தங்கள் ஆய்வறிக்கையை வெளியிட்டனர். அவர்களின் ‘துணைச் சமூகத் தொடர்பு’ (Parasocial
Interaction) என்ற ஆய்வறிக்கை இவ்வாறாகக் கூறுகிறது: “ஒரு நபர் தனக்குத் தெரியாத ஓர் ஊடகப் பிரபலத்துடன் தனது உண்மை வாழ்க்கையில், கற்பனையில் அவரை நெருக்கமான உறவாகக் கொண்டாடும் ஒருதலைப்பட்ச உறவைத் தினம் மனத்தில் வளர்த்துக்கொள்ளுதல் என்பதாகும்.”
மனிதர்களின் இவ்வாறான மனநிலை, சமூக ஒழுங்குமுறை வாழ்விலிருந்து விலகிச் செல்லத் தூண்டுகிறது. தம் கதாநாயகர்களைப் போல, சமூகப் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் மனப்பிறழ்வை ஊக்குவிக்கிறது. அது ‘அவருக்கு நான் என்ன வேணாவாக இருப்பேன்’; மற்றொன்று ‘நான் அவரை 30 வருடமாகக் காதலிக்கிறேன்; இந்தச் செய்தி என் கணவருக்கும், நடிகரின் அப்பாவுக்கும் தெரியும்’ என்பதாக வெளிவருகிறது.
திரைப்படங்கள் என்பது கூட்டு முயற்சி. அது இயக்குநருக்கு உயிர் வதை; ஆனால், கதாநாயக நடிகன் பெரும் பணம், புகழ் என்பதில் எல்லாப் பெருமைகளையும் தகுதியின்றி மனச்சான்று இல்லாமல் தன் கீரிடத்தில் வைத்து மகிழ்கிறான். இங்கு அரசியல்படுத்தப்பட்ட, சந்தைப்படுத்தப்பட்ட, கவர்ச்சிவயப்பட்ட,
இரசிகர் கூட்டம் அலைமோதும் நிலை மாறும் வரை எதுவும் மாறப்போவதில்லை.
நம் சமூகம் தோல்வி அடைந்த சமூகமாக மாறிவிட்டது. ஒரு தோல்வி அடைந்த சமூகம் எப்படி இருக்கும்? என இரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் விளக்குகிறார்: “தோல்வி அடைந்த சமூகங்களில் ஆரோக்கியமாகச்
சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள். சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக, தீவிரமானதும் முட்டாள்தனமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தாலே உருவாக்கப்பட்டிருக்கும். எந்தச் சமூகத்தில் அற்பமான விசயங்கள் பெரும் தலைப்புகளாக
மாற்றப்பட்டு, நல்லுணர்வான சிந்தனைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டதாகக் கருதி தள்ளிவைக்கப்படுகிறதோ, எந்தச் சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்துள்ளார்களோ, அது தோல்வி அடைந்த சமூகம்” என்றார்.
தமிழ்ச் சமூகம் தோல்வி அடைந்த சமூகமாக மாறிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. கல்வி, சுகாதாரம், நாகரிகம், தனிநபர் வருவாய் என மேலைநாடுகளோடு ஒப்பிடப்பட்ட தமிழினம், திரை மயக்கத்தில் விட்டில் பூச்சிகளாக மெல்ல அழிந்து வருவது கண்கூடானதாகும். தமிழரின் திரை மயக்கம் நாளைய நாள்களைக் கேள்விக்குறியாக்கி உள்ளது என்பதே கசக்கும் உண்மையாகும்.
சினிமாவும் அரசியலும் வேறு வேறானவை. ஆனால், இன்று இவற்றை இணைக்கும் கதாநாயகப் பிம்பம் வெற்றி பெற்றது ஏன்? எனும்
கேள்வி எழுகிறது. நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள். பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், குடிமைப்பணி, காவல்பணி உயர் அதிகாரிகள் அதிகபட்சம் ஆண்டிற்கு 20 இலட்சம்வரை சம்பாதிக்கிறார்கள். ஆனால், ஒரு நடிகருக்கு ஒரு திரைப்படத்திற்கு 200 கோடி ஊதியம் எதற்கு? இவர்கள் தரமின்றியும் ஆபாசமாகவும் திரைப்படங்களை எடுக்கிறார்கள். மக்கள் இவர்களைத் தலையில் தூக்கிவைத்து ஆடுவதால் இவர்கள் தங்களைக் கடவுளாகக் கருதி வாழ்கிறார்கள்.
நமது அரசின் புதிய தாராளமய முதலாளித்துவ கொள்கை முடிவுகளே ‘ஜென் ஷி’ இளைஞர்களின் அரசியல் குறித்த புதிய பார்வைக்கு மாற்றுகிறது. அரசு பொருளாதாரக் கொள்கைகளில் அரசின்
தலையீட்டைக் குறைத்து, தடையற்ற சந்தை மற்றும் தனியார் மயத்திற்கு அடிகோலும் முறையே நாளைய நாள்கள் குறித்து இளைஞர்களை அவ நம்பிக்கைக்குத் தள்ளுகிறது. புதிய முதலாளித்துவ அமைப்பு கல்வி, தொழில், வேலைவாய்ப்பு என்பதில் அதிக வெல்ல முடியாத போட்டிகளை உருவாக்குகிறது.
ஆளும் அரசுகளின் தோல்வி, ஒவ்வோர் இளைஞனின் தோளிலும் சுமத்தப்படுகிறது. புதிய தலைமுறையினருக்கு அரசியல் தீண்டத்தகாத ஒன்றாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மறைக்கப்படுகிறது. 1990-களுக்குப் பிறகு மாணவர்கள் அரசியல் பேசுவதை அரசுகள் பாவச்செயலாக அறிவித்துவிட்டன. கேரள மாநிலத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் மாணவர் சங்கத் தேர்தல்கள் தொடர்ந்து நடக்கின்றன. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக உத்திரப்பிரதேசம், குசராத், பஞ்சாப், அரியானா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் மாணவர் சங்கத் தேர்தல்கள் தற்காலிகமாகத் தடை அல்லது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசும் கர்நாடக அரசும் 2026-2027 கல்வியாண்டில் தம் மாநிலப் பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தலை நடத்த முனைப்புக் காட்டுகின்றன.
அரசியல் வயப்படாத இளைஞர்கள் 30 நொடி ஓடுகிற ‘ரீல்ஸ்’ மூலம் பெறுகிற சமூக ஊடகச்
செய்தியைத் திரும்பத் திரும்பப் பார்த்து, அதைத்தான் அரசியல் என நம்புகிறார்கள். அவர்களுக்குப் போதிய சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்றை, செய்திகளை அறியும் வாய்ப்புகள் அமைவதில்லை. அமைந்தாலும் அவர்கள் அரசியலை ஆழமாக அறிய விரும்புவதில்லை. நுனிப்புல் மேய்பவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தேர்தல் காலக் கடைசி வார அரசியல் மாயபிம்பங்களை நம்புகிறார்கள். இவர்கள் தனிமனித
வழிபாட்டுமுறை அரசியலில் பயணம் செய்யத் துணிகிறார்கள். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சமூகத்தொடர்பு உதவுகிறது. தன் பணம் சம்பாதித்தது போதாதது; புகழ், அதிகாரம், சுவைக்க விரும்பும் கதாநாயக நடிகர் இந்த வெற்றிடத்தைத் தன் வருகையால் நிரப்பி விடுகிறார். அவரது சுகதுக்கங்கள், வெற்றி-தோல்விகளைத் தமதாக நேசிக்கும் இளைஞர்கள்
கூட்டம்,
அவர் பின் ஆர்ப்பரிக்கிறது. ஆதரவு அலை பெருகிறது.
சமூக அக்கறையற்ற சிறு கூட்டத்தால் பிம்ப அரசியலால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. நாடு பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அந்நாட்டில் ஊழல்வாதிகள், சமூக விரோதிகள் பெருகுவார்கள். அப்பாவி, பொதுமக்கள் கடுமையான வாழ்க்கை வாழவேண்டிய
கட்டாயத்தில் தள்ளப்படுவார்கள். நம் சமூகம் சவாலான, சமூக அக்கறையுள்ள, திறமையான, மனச்சான்றுள்ள, கல்வி அறிவுமிகு புதிய இளைஞர்களை உருவாக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்குப் போதிய அரசியல், ஊடக
விழிப்புணர்வை உருவாக்குவது நமது தார்மிகக் கடமையாகும்.