அன்று இரவு திடீரென்று மின்சாரம் போய்விட்டது. வீடு முழுவதும் இருள். சில நொடிகளுக்கு முன்புவரை ஒளியால் நிரம்பியிருந்த அறை, இப்போது எதுவுமே தெரியாத அளவிற்கு இருண்டிருந்தது. கைப்பேசியின் வெளிச்சத்தைத் தேடினார்கள். யாரோ மெழுகுவர்த்தியை எடுத்து வந்தார்கள். சிறிய மெழுகுவர்த்தி. அதை ஏற்றியதும் அறை மெதுவாக வெளிச்சம் பெற்றது. சுவரில் இருந்த கடிகாரம் தெரிந்தது, மேசையின்மீது இருந்த புத்தகம் தெரிந்தது, அறையில் இருந்த மனிதர்களின் முகங்கள் தெரிந்தன. எல்லாரும் அந்தச் சிறிய வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். யாரும் அந்த மெழுகுவர்த்தியைப் பற்றி யோசிக்கவில்லை. அது மட்டும் அமைதியாக எரிந்து கொண்டிருந்தது.
நிமிடங்கள்
நகர்ந்தன. வெளிச்சம் குறையவில்லை; ஆனால், மெழுகுவர்த்தி குறைந்துகொண்டே இருந்தது. அதன் உடல் மெதுவாக உருகிக்கொண்டிருந்தது. அது வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருந்த ஒவ்வொரு நொடியிலும்… தன்னையே
இழந்துகொண்டிருந்தது.
நம்
வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நம்முடைய வாழ்க்கைக்கு வெளிச்சம் கொடுக்கிறார்கள். ஆனால், அந்த வெளிச்சத்திற்காக அவர்கள் எவ்வளவு தங்களை இழக்கிறார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.
ஒரு
தாய், குழந்தைகள் தூங்கிய பிறகுதான் தூங்குகிறார். குழந்தைகள் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடுகிறார். வீட்டில் அனைவருக்கும் என்ன பிடிக்கும் என்று தெரியும். ஆனால், ‘அம்மாவுக்கு என்ன பிடிக்கும்?’ என்று கேட்பவர்கள் எத்தனை பேர்? அவளுடைய சோர்வை யார் கவனிக்கிறார்கள்? அவள் அமைதியாக இருப்பதற்குப் பின்னால் இருக்கும் ஆயிரம் கவலைகளை யார் கேட்கிறார்கள்?
ஒரு
தந்தை, தன் குழந்தைகளுக்காக பல ஆசைகளைத்
தள்ளிப்போட்டிருக்கலாம்.
ஒரு நல்ல கைப்பேசி வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்; ஒரு புதிய சட்டை வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார்; சில நாள்கள் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்திருப்பார். ஆனால், வீட்டில் ஏதாவது தேவைப்பட்டால், ‘பரவாயில்லை,… முதலில் இதை வாங்கிக்கலாம்’ என்று
தன் ஆசையை மீண்டும் ஒதுக்கி விடுகிறார். அவர் பெரிய தியாகங்களைப் பற்றிப் பேசுவதில்லை. அவர் செய்த தியாகங்களுக்கான பட்டியலும் வைத்திருக்கவில்லை. அவர் வெறுமனே… எரிந்துகொண்டிருக்கிறார்.
ஓர்
ஆசிரியர் ஒரு வகுப்பறைக்குள் நாற்பது குழந்தைகள். நாற்பது முகங்கள், நாற்பது வேறுபட்ட குடும்பங்கள், நாற்பது விதமான கனவுகள். சில குழந்தைகள் பாடத்தைப் புரிந்துகொள்வார்கள். சிலர் புரிந்துகொள்ளமாட்டார்கள். சிலர் கேள்வி கேட்பார்கள். சிலர் அமைதியாக இருப்பார்கள். சிலருடைய மதிப்பெண்களுக்குப் பின்னால் ஒரு குடும்பப் பிரச்சினை இருக்கும். சிலருடைய குறும்புக்குப் பின்னால் ஒரு கவலை இருக்கும். ஆசிரியர் பாடத்தை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை; சில நேரங்களில் ஒரு குழந்தையின் வாழ்க்கையைத் தாங்கிக்கொள்கிறார். ஆனால், வகுப்பு முடிந்ததும், அந்த ஆசிரியரின் சோர்வை யார் பார்க்கிறார்கள்?
ஓர்
அருள்தந்தை, நூற்றுக்கணக்கான மக்களுக்காகத் திருப்பலி. யாருக்கோ திருமணம், யாருக்கோ இறுதி அஞ்சலி, யாருக்கோ நோயாளி சந்திப்பு, யாருக்கோ குடும்பப் பிரச்சினை, யாருக்கோ ஒரு மணி நேரம் பேசவேண்டும், யாருக்கோ இரவு நேரத்தில் ஓர் அழைப்பு. அனைவருக்கும் நேரம் கொடுக்க முயற்சிக்கும் ஒருவர்; ஆனால், ‘தந்தையே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்கும் நேரம் நமக்கு இருக்கிறதா?
இவர்களைப்
போலவே மருத்துவமனையில் ஒரு செவிலியர்; ஒரு பராமரிப்பாளர்; ஒரு வயதான பெற்றோரைக் கவனிக்கும் மகள்; குடும்பத்திற்காக ஓயாமல் உழைக்கும் ஒருவர்; காலை முதல் இரவுவரை பிறருக்காக ஓடிக்கொண்டிருக்கும் ஒருவர், இவர்களுடைய வாழ்க்கையிலும் அந்த மெழுகுவர்த்தியின் கதைதான். இவர்கள் வெளிச்சம் கொடுக்கிறார்கள். நாம் அந்த வெளிச்சத்தில் வாழ்கிறோம். ஆனால், அந்த வெளிச்சத்தின் விலையை மறந்து விடுகிறோம்.
இயேசு
ஒருமுறை கூறினார்: “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்” (மத்
5:14). இயேசு ஒளியாக இருக்கக் கூறினார். ஆனால், உண்மையான ஒளி என்பது தன்னைப் பற்றிக் காட்டிக்கொள்வது அல்ல; தன்னைச் செலவழித்து, பிறருக்குப் பாதை காட்டுவது. மெழுகுவர்த்தி எரியும்போது, ‘நான் எவ்வளவு வெளிச்சம் கொடுக்கிறேன் பாருங்கள்’
என்று கூறாது; அது அமைதியாக எரியும். அதன் இருப்பு குறைந்துகொண்டே போகும். ஆனால், சுற்றியிருப்பவர்களின் இருள் குறைந்துகொண்டே இருக்கும். அதுதான் சில மனிதர்களின் வாழ்க்கையும்!
நாம்
பல நேரங்களில் வெற்றியைப் பற்றிப் பேசுகிறோம். பெரிய வீடு, பெரிய வேலை, பெரிய சம்பளம், பெரிய பதவி, பெரிய சாதனை... ஆனால், சில வாழ்க்கையின் அழகு அவற்றின் ‘பெருமையில்’ இல்லை.
அவை எத்தனை பேருக்கு வெளிச்சமாக இருந்தன என்பதில் இருக்கிறது.
ஒரு
தாய் தன் குழந்தையின் வாழ்க்கையில் வெளிச்சமாக இருக்கலாம்; ஒரு தந்தை தன் குடும்பத்தின் நம்பிக்கையாக இருக்கலாம்; ஓர் ஆசிரியர் ஒரு மாணவனின் எதிர்காலத்தை மாற்றியிருக்கலாம்; ஓர் அருள்தந்தையின் ஒரு வார்த்தை ஒருவரை மீண்டும் இறைவனிடம் அழைத்திருக்கலாம்; ஒரு செவிலியரின் ஓர் அன்பான தொடுதல், நோயாளியின் பயத்தைக் குறைத்திருக்கலாம். அவர்கள் செய்ததை உலகம் பதிவு செய்யாமல் இருக்கலாம். அவர்களுக்கு விருதுகள் கிடைக்காமல் இருக்கலாம். அவர்களின் பெயர்கள் செய்தித்தாள்களில் வராமல் இருக்கலாம். ஆனால்,… யாரோ ஒருவரின் இருளில் அவர்கள் வெளிச்சமாக இருந்திருக்கிறார்கள்.
அடுத்த
முறை உங்கள் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றும்போது… அதை
மட்டும் பார்க்காதீர்கள். உங்கள் வாழ்க்கையில் மெழுகுவர்த்தியாக இருக்கும் ஒருவரை நினைத்துப் பாருங்கள். உங்களுக்காகத் தன்னை மறந்த அம்மாவை, உங்களுக்காக உழைத்த அப்பாவை, உங்களை நம்பிய ஆசிரியரை, உங்களுக்காகச் செபித்த அருள்தந்தையை, உங்களைப் பராமரித்த ஒருவரை, உங்கள் வாழ்க்கையின் இருண்ட நேரங்களில் அமைதியாக உங்களுடன் நின்ற ஒருவரை... அவர்களிடம் ஒருமுறை கூறுங்கள்: “நீங்கள் எனக்காகச் செய்ததை நான் கவனித்திருக்கிறேன்.” சில நேரங்களில் இந்த ஒரு வாக்கியம் கூட… பல ஆண்டுகளாக எரிந்துகொண்டி
ருக்கும் ஓர் இதயத்திற்கு ஓய்வாக இருக்கலாம்.
மின்சாரம்
வந்துவிட்டால் மெழுகுவர்த்தியை நாம் அணைத்துவிடுகிறோம். அதன் தேவை முடிந்துவிட்டது என்று நினைக்கிறோம். ஆனால், அதன் மெழுகு மட்டும் அங்கே கிடக்கும். அது எவ்வளவு எரிந்தது என்பதற்கான அமைதியான சாட்சி. நம் வாழ்க்கையிலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்று நம்முடன் இருக்கிறார்கள். அவர்களின் குரல் கேட்கிறது. அவர்கள் நம்முடன் சிரிக்கிறார்கள். அதனால் அவர்கள் எப்போதும் இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள்.
சில
வெளிச்சங்கள் அணைந்த பிறகுதான் அவை நமக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர்கிறோம். அதனால்… அவர்கள் எரிந்துகொண்டிருக்கும்போதே அவர்களைப் பாருங்கள். அவர்கள் கொடுத்த வெளிச்சத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். அவர்கள் சோர்வாக இருக்கும்போது
அவர்களுக்காக ஒரு சிறிய வெளிச்சமாக இருங்கள்.
ஏனெனில்,
தன்னைச் சுருக்கிக்கொண்டு பிறருக்கு வெளிச்சம் கொடுப்பதே சிலரது வாழ்க்கையின் அழகு. அந்த அழகை அது அணைந்த பிறகு அல்ல; அது எரிந்துகொண்டிருக்கும்போதே கவனித்துவிடுவோம்.