news-details
ஞாயிறு மறையுரை
பொதுக்காலத்தின் 29-ஆம் ஞாயிறு (18.10.2026) எசா 45:1, 4-6; 1தெச 1:1-5; மத் 22:15-21 (சீசருக்குச் சொல்லுங்கள், நான் கடவுளுக்கு உரியவன் / உரியவள்)

சீசருக்கு வரி செலுத்துவது முறையா? என்ற கேள்வியுடன் இன்றைய நற்செய்தி தொடங்குகின்றது. ஏரோதை ஆதரிப்பவர்களும், உரோமைக்கு வரி செலுத்துபவர்களும், பரிசேயரின் சீடர்களும் இணைந்து இக்கேள்வியை இயேசுவிடம் எழுப்புகின்றனர். இக்கேள்வியில் ஒரு சூழ்ச்சி அமைந்திருந்தது.

உரோமையின் கைப்பாவையாக இருந்த ஏரோதின் சீடர்களின் கூட்டமும் பரிசேயரும் எதிரெதிர் அணியில் இருப்பவர்கள்; பரிசேயர் சீசருக்கு வரி செலுத்துவதை எதிர்த்தவர்கள்; ஏரோதின் செயல்பாடுகளை விமர்சனம் செய்தவர்கள்; ஆனால், ஏரோதுவோடு ஒன்றாய் கூடிவந்து, பொதுப் பகைவனாக அவர்கள் கருதிய இயேசுவை எதிர்க்கின்றார்கள். எல்லாராலும், வரவேற்கப்பட்ட போதகரான இயேசு, மக்கள் மத்தியில் புகழ்பெற்றுக் கொண்டிருந்த தருணம் அது.

வல்லமையோடு செயல்பட்ட இயேசுவை, குணமளிப்பவரை மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச் செய்ய, சூழ்ச்சியில் சிக்கவைக்க இக்கேள்வி எழுப்பப்படுகின்றது. இயேசு யார் சார்பாக இருக்கின்றார்? ஏரோதின் நலம் விரும்பியவர்கள் / ஆதரிப்பாளர்களுடன் இருக்கின்றாரா? சீசருக்கு வரி செலுத்துவதை எதிர்த்த யூத மக்களின் சார்பாக இருக்கின்றாரா? வரி செலுத்துவதைக் கட்டாயப்படுத்துவது சரியா? வரி செலுத்துவது அவசியமா? என்ற கேள்விகளுக்கு இயேசுவின் பதில்  எவ்வாறு அமைந்திருக்கும் என்பதே அவர்களின் சூழ்ச்சி. எப்படிப்பட்ட பதிலைக் கூறினாலும் ஒரு குழுவிற்கு அவர் எதிரானவராவே கருதப்படுவார். இயேசு மிகவும் சரியாகத் தேர்ந்து அறிந்து, ஞானத்துடன் பதில் அளிக்கின்றார். தமது பதில் வழியாக இயேசு மாற்று மனநிலையை முன்வைக்கின்றார். வரி செலுத்துதல் என்ற வார்த்தையை இயேசு, ‘சீசருக்கு உரியவற்றைக் சீசருக்குக் கொடுங்கள்; கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள். ‘செலுத்தவேண்டும்’ என்ற சொல்லாடலை மாற்றி ‘கொடுங்கள்’ என்று நற்செய்தியில் குறிப்பிடுகின்றார்.  

சீசருக்குக் கொடுங்கள்; அதுவே சமூகப் பொறுப்பு: நாம் சீசருக்குக் கொடுக்கவேண்டும். ஆனால், சில சில்லரை நாணயங்களைக் கொடுங்கள் என்று இயேசு கூறவில்லை. நாம் பலவற்றைப் பெற்றுக் கொண்டுள்ளோம். நமது ஆசிர், திறமை, ஆற்றல், நேரம் இவற்றைக் கொண்டு திரும்பி அளிக்க / கொடுக்க நற்செய்தி அறிவுறுத்துகின்றது. பொது உலகிற்காக, பொது நன்மைக்காக, பொது செயல்பாடுகளுக்காக நாம் வழங்கவேண்டும் என்பதையே சீசருக்கு உரியதைக் கொடுங்கள் என்று அறிவுறுத்துகின்றார். 

சீசர் என்பவர் யார்? அரசியல் பலம் படைத்த தலைவர் மட்டுமா? அனைவரும் அறிந்திருந்தும், அன்பு செய்யப்படாத நபரா? அல்லது சீசர் என்ற பெயர் தனிமனிதனைச் சுட்டிக்காட்டுகிறதா? திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ‘இறைவா உமக்கே புகழ்’(Laudato Si) என்னும் திருத்தூது மடல், இவ்வுலகிற்கு என்ன நடந்து கொண்டிருக்கின்றது? என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. கடல், நிலம், காற்று, உயிரினங்கள் இவற்றில் ஏற்படும் மாற்றங்கள், பருவநிலைச் சீர்கேடுகள் குறித்த அபாயச் சங்கினை உரக்க ஒலிக்கின்றன. மனிதரின் வாழ்வும், உயிரினங்களின் வாழ்வும் இயற்கையும் இணைக்கப்பட்டுப் பிணைக்கப்பட்டு இருக்கின்றது. நாம் அனைவரும் ஒன்றாய் ஒரே குடும்பமாய் இணைக்கப்பட்டிருக்கின்றோம். சீசருக்கு உரியது எது? என்று இன்றைய காலச்சூழலில் நாம் கேள்வி எழுப்பினால், இவ்வுலகமும் இயற்கையும் காற்றும் கடலும் நுண்ணுயிர்களும் உயிரினங்களும் இன்றைய காலச் சீசர்கள். படைப்பு என்னும் கடவுளின் அழகான அன்புச் செய்தியைப் பாதுகாக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு. அவற்றைச் சீரழிக்காமல் இன்றுவரை பெற்றுக்கொண்ட நாம், இப்பூமிக்கு அவ்வாறே திரும்பத் தர வேண்டும். ‘எல் நினோ’ என்னும் இவ்வுலக பருவநிலை மாற்றச் சீர்கேடுகளை மாற்றிட மனமுவந்து இயற்கையைப் பாதுகாக்கும் அரணைத் திரும்பத் தரவேண்டும்.

வளங்களைச் சுரண்டாமல் அடுத்த தலைமுறையினருக்கு வாழ்வு தரும் இடமாக இப்பூமியை விட்டுச் செல்லவேண்டும். அதற்கான விழிப்புணர்வையும், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும் தரவேண்டும். இயற்கைக்கு உரிய மதிப்பைத் தரவேண்டும். அழிகின்ற உயிரினங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்; இவ்வுலகிற்கு உரியதை இவ்வுலகிற்குத் தந்திடவேண்டும்;

நியாயமான சட்டங்களை மதிப்பதும், பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பதும், பிறருடைய உரிமைகளை மதிப்பதும் கடைநிலையின் மக்களை வாஞ்சையோடு உயர்த்திவிடுவதும், நேர்மையாக உழைப்பதும், சமூகத்தின் நலனில் பங்கெடுப்பதும் சீசருக்குக் கொடுப்பதன் செயல்பாடுகள்.

நாம் இறைவனுக்கு உரியவர்கள்: இயேசு சீசருக்கு உரியதைச் சீசருக்குக் கொடுங்கள் என்று நிறுத்திக்கொள்ளவில்லை; மாறாக, ‘கடவுளுக்குரியதைக் கடவுளுக்குக் கொடுங்கள்’ என்கிறார். இங்குதான் சவால் தொடங்குகிறது. சீசர், கடவுள் அல்லர்; இவ்வுலகின் பதவியும் ஆற்றலும் பணமும் கடவுள் அல்ல. நாம் மனிதர்கள், கடவுளுக்கு உரியவர்கள். பணத்திற்கும் போதைக்கும், கலாச்சார சீரழிவுக்கும் உரியவர்கள் அல்லர்; பிற மனிதர்களை அடக்கி ஆள்வதும், நம் வாழ்வின் தரத்தையும், அடையாளத்தையும், இவ்வுலகின் கவர்ச்சிக்காக இழப்பதும் முறையல்ல. பலவற்றை நாம் கடவுளிடமிருந்து பெற்றுள்ளோம். இன்றளவும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறோம். இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் குறிப்பிடுவது போன்று, சைரசு அரசனுக்கு இறைவன் தந்தவற்றை நமக்கும் தருகின்றார். சைரசு அரசன் இஸ்ரயேலின் இனத்தைச் சார்ந்தவர் அல்லர்; ஆனால், இறைவன் அவருக்கு அனைத்தையும் வழங்கி, தமது திட்டத்திற்கு அவரைக் கருவியாகப் பயன்படுத்துகின்றார். உண்மையான ஆண்டவர் இறைவன் மட்டுமே. புகழ், வலிமை, வெற்றி, ஆற்றல், வாழ்வு இக்கட்டான சூழ்நிலையில் இறைவன் தம் கரங்கள் கொண்டு தாங்கிப்பிடித்த தருணங்கள் அனைத்தும் நமது அனுபவங்களே. இறைவனுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? திபா 96:1,3,10 குறிப்பிடுவது போல, ஆண்டவருக்கு மாட்சியையும் நன்றியுணர்வையும் தருவோம்.

நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கு: தெசலோனிக்க நகரம் உரோமைப் பேரரசின் ஒரு முக்கிய வணிக நகரமாய் அன்றைய காலகட்டத்தில் செயல்பட்டது. பவுல் அவர்கள் மத்தியில் பணியாற்றிய பிறகு அவர்களின் நம்பிக்கையின் செயல்களையும், அன்பு கலந்த உழைப்பினையும், கிறிஸ்துவில் அவர்கள் கொண்ட எதிர்நோக்கின் நிலைத்தன்மையும் குறித்து மகிழ்கின்றார். அவர்களின் நம்பிக்கை செயலாக மாறியது. அன்பு, பிறர் சேவையாக உருவெடுத்தது. எதிர்நோக்கு பொறுமையின் வெளிப்பாடாக மாறியது.

பிற மனிதர்களை, கடவுளின் முகமாய் கண்டு, மதிப்பளித்து, அன்பு செய்து, அவர்கள் அனைவருமே கடவுளின் அன்பு பரிசு என்பதை உணர்ந்து, செயல்படுவதெல்லாம் நாம் கடவுளுக்கு உரியதை அவர் அன்பு பிள்ளைகளுக்கு, அவரின் முகங்களுக்கு, அவரின் சாயலாக இருப்பவர்களுக்கு நிறைவாகத் தருகிறோம்.

கேள்விக்குள்ளாகும்  நாணய உருவம்: ‘நாணயத்தில் யாருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது?’ எனும் கேள்வியை இயேசு எழுப்புகின் றார். மக்களின் அன்றாடச் செலவுகளில் பயன்படுத் தப்படும் நாணயத்தில் சீசரின் உருவம் இருந்ததால், இயேசு அதைச் சீசருக்குக் கொடுக்கச் சொல்கின்றார். ஆனால், மனிதர்களாகிய நாம் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கின்றோம் (தொநூ 1:27). இங்கு தான் இயேசுவின் வார்த்தையின் ஆழம் பொதிந் துள்ளது. நாணயத்தைச் சீசருக்குத் தரலாம். ஆனால், நம்மை நாம் கடவுளுக்கு மட்டுமே தர வேண்டும். நாம் கடவுளுக்கு உரியவர்கள். ஏனென் றால், நமது உள்ளத்தினால் இறைவனின் உருவம் பொதிந்துள்ளது. நமது உடல் இறைவன் வாழும் ஆலயம் (1கொரி 3:16-17); நமது மனச்சான்று இறைவனின் குரல் (எபி 10:16, உரோ 2:15, திப 17:27-28). நமது அறிவு இறைவனின் கொடை, நமது திறமைகள், நமது குடும்பம், நமது எதிர்காலம் அனைத்தும் இறைவனுக்குரியது. இவ்வுலகின் பொறுப்புகளைப் பொறுப்புடன் நிறைவேற்றுவோம்.

மூன்று கேள்விகள்: 1. நான் ஒரு நல்ல குடி மகனாக, என் சமூகப் பொறுப்புகளை நிறைவேற்று கின்றேனா? சீசருக்குரியதை நான் கொடுக்கின் றேனா? 2. என் வாழ்வு, மனச்சான்று, சிந்தனை, நம்பிக்கை, எதிர்நோக்கு இவற்றை இறைவனுக்குக் கொடுக்கின்றேனா? இறைவனுக்கு உரியதைக் கொடுக்கின்றேனா? 3. என் வாழ்வின் சீசர் யார்? இறைவன் யார்?

நாணயத்தைச் சீசருக்குக் கொடுப்போம். நம் மையே கடவுளுக்குக் கொடுப்போம். உலகில் வாழ் வோம், ஆனால், இவ்வுலகின் கவர்ச்சிகளும் காந்தச் செயல்பாடுகளும் நம் இதயத்தின் இறைவனாக மாற அனுமதிக்க வேண்டாம். சீசருக்குச் சொல்வோம், உலகிற்குச் சொல்வோம், நான் கடவுளுக்கு உரிய வன்/ உரியவள் என்று. அவருக்கு உரியதை அவருக்கே நிறைவாகத் தருவோம்.