சனாதனம் என்பது சமூக நீதிக்கு எதிரானது மட்டுமல்ல; பெண் உரிமையை முற்றிலும் மறுப்பது. இந்தியச் சமூக அமைப்பில் கோடிக்கணக்கான அபலைப் பெண்கள் அடிமையாக வாழ்ந்த வரலாறு இருக்கிறது. வேத காலத்தில் பேணப்பட்ட பாலினச் சமத்துவம் இடையே மனுதர்மத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஓரளவு சம உரிமை கிடைத்துள்ளது.
ஒரு
காலத்தில் உடன்கட்டை ஏறுதல் என்பது ஒரு மதச் சடங்காக இருந்தது. கணவனை இழந்த மனைவி, தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும்போது, மனைவியும் தீயில்
விழுந்து தன்னை அழித்துக்கொள்ளுதல் ‘உடன்கட்டை ஏறுதல்’ எனக் கூறப்பட்டது. மனைவி தானாக முன்வந்து தீயில் விழலாம்; இல்லையெனில், சில வேளைகளில் உறவினர்கள் கட்டாயப்படுத்தி மனைவியைத் தீயில் தள்ளிவிடுவர்.
உடன்கட்டை
ஏறுதல் குறித்து ஆங்கிலேய அதிகாரிகள், வரலாற்று ஆய்வாளர்கள், தூரதேசப் பயணிகள் எழுதிய பல பதிவுகள் இணையத்தில்
உள்ளன.
‘உடன்கட்டை ஏறுதல்’ எனும் விவரிப்பு, அந்த இளம் மனைவிகளின் கண்ணீர்! படிக்கும் எவரையும் கதற வைக்கும். அவர்களின் அலறல், அவர்களது வேதனைகள், உறக்கம் பிடிக்காத இரவிற்கு நம்மைத் தள்ளும். அவர்களின் அழுகுரல் நம் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும்.
வங்க
இந்துமதப் புரட்சியாளர் இராசாராம் மோகன்ராய் சிறுவனாக இருந்தபோது தன் அண்ணியைக் கட்டாயப்படுத்தி நெருப்பிலிட்டதைப் பார்த்து மனம் புழுங்கினார். தான் பெரியவனான பின் உடன்கட்டை ஏறுதலை ஒழிக்க உறுதி பூண்டார்.
1815-1818 ஆண்டுகளில் வங்க
மாநிலத்தில் 378-ஆக இருந்த உடன்கட்டை
ஏறுதல், அடுத்து வந்த ஆண்டுகளில் 839-ஆக உயர்ந்தது. கிறித்தவ
மறைபரப்பாளர் வில்லியம் கேரி மற்றும் இராசாராம் மோகன்ராய் ஆகியோரின் தொடர் வலியுறுத்துதலால், 1829-இல் அன்றைய ஆங்கில அரசால்
உடன்கட்டை ஏறுதல் வங்க மாநிலத்தில் தடை செய்யப்பட்டது.
சனாதனம்
கோலோச்சாத தமிழ்நாட்டில் முதலாம் இராஜேந்திர சோழனின் மனைவியர் மட்டுமே உடன்கட்டை ஏறி உள்ளார்கள். தமிழர் மரபில் சில இனக் குழுக்களில், சில சாதிப் பிரிவுகளில் மறு மண உரிமை மகளிருக்கு
இருந்திருக்கிறது. ஆனால், சத்திரிய வம்சப் பெண்கள் கணவன் இறந்த பின் உடன்கட்டை ஏறியிருக்கிறார்கள் எனும் வரலாற்றை ‘நடுகற்கள்’
குறிப்பிடுகின்றன.
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினருக்குத் தனித்தெரு இருந்தது. அத்தெரு விதவைகள் வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது. திண்ணைகளில் மட்டுமே தங்கவேண்டும்.
எந்தச் சமூக நிகழ்விலும் கலந்து கொள்ளக்கூடாது என வீட்டுச்சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். குறிப்பிட்ட கால
இடைவெளியில் அதற்கென நியமிக்கப்பட்ட ஆள்கள் அப்பெண்களின் தலையை மழித்து மொட்டையாக்கி விடுவர்.
‘மனுஸ்மிருதி’ பெண்களுக்குச்
சம உரிமை இல்லை என்கிறது. ‘மனுஸ்மிருதி’ 2:36-2:41 மற்றும்
தர்ம சாஸ்திர மரபுகள், ஆண் குழுந்தைகளுக்கான உபநயனத்தை விவரிக்கின்றன. அந்த உபநயனத்தின் மூலம்தான் அவன் ‘த்விஜா’ எனும் இரண்டாம் பிறப்பு என்ற மத அடையாளத்தைப் பெறுகிறான்.
அதன் வழியே வேதம் படிக்கும் உரிமை, காயத்ரி மந்திரம் செபிக்கும் உரிமை, யாகம் நடத்தும் உரிமை, மத அதிகாரம் ஆகியவற்றைப்
பெறுகிறான். ‘பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ என மனுஸ்மிருதி 9:3 கூறுகிறது: “பெண்
ஒருபோதும் சுயாதீனமாக இருக்கக்கூடாது. மனு தர்மப்படி பெண் என்பவள் தகப்பன், கணவன், மகன் என்போரைச் சார்ந்தே இருக்கவேண்டும்.” ஆணின் அடையாளத்தோடு, பெண் வாழவேண்டும். பெண்களுக்குக் கல்வி, வேலை, சொத்துரிமை மறுக்கப்பட்டன. அவர்கள் அடிமையாக வாழ இந்த மனுஸ்மிருதி கட்டளையிட்டது.
கிறித்தவ
மிஷனரிகள், பெருநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் என எல்லாப் பகுதிகளிலும்
தங்கள் தொடர் முயற்சிகளால் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கிறார்கள். சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள். பெண் கல்வியை ஊக்குவிக்கிறார்கள்; உணவு தந்தார்கள்; உடை தந்தார்கள்; தங்க இடம் தந்தார்கள்; கல்வி தந்தார்கள்; அறிவு புகட்டினார்கள்; பெண்களுக்கு உரிய அடையாளத்தைத் தந்தார்கள். வீடுகளில் அடைபட்டிருந்த பெண்களை வேலைக்குச் செல்லும் வரை உடன் அழைத்து வந்தார்கள்.
மனுதர்மம்
படியாத தமிழ் மண்ணில்தான் தேசிய அளவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் 43 விழுக்காட்டினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்தியப்பிரதேச மேனாள் பா.ச.க.
முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மனுதர்ம அடிமைத்தனத்தை “பெண்கள் வேலைக்குச் செல்லும்போது அவர்கள் கண்காணிக்கப்படவேண்டும்” என்கிறார்.
இவரைவிட ஒருபடி மேலே சென்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “பெண் என்பவள் எப்பொழுதும் இல்லத்தரசியாக இருக்கவேண்டும்” என்கிறார்.
சமூக நீதியின் தாய் மண்ணான தமிழ்நாட்டில், 1989 -ஆம் ஆண்டு முதல் பெண்களுக்குப் பூர்வீகச் சொத்தில் சம உரிமை பெறும்
சட்டம் நடைமுறைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
பா.ச.க. அரசு
மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மனுதர்மம் சார்ந்த கோட்பாட்டு நெறிகளையும்,
பெண் உரிமை மறுப்பையும் எல்லா ஆட்சி அதிகார, அரசு, நீதி பரிபாலன, ஊடகத் தளங்களில் திணிக்க
முயல்கிறது. 2021-ஆம் ஆண்டின் விவசாயிகள் போராட்டத்தின்போது, “பெண்கள் ஏன் போராட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று
அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கேட்கிறார்.
அரசியல் சட்டம் வழங்கிய பெண்களுக்குப் போராடும் உரிமையை உச்ச நீதிமன்ற நீதிபதியே கேள்விக்குறியாக்கலாமா? என்ற ஐயப்பாடு எழுகிறது.
அவர்மீது காவிச்சாயம் பூசப்படும் ஆபத்தும் இதில் உள்ளடங்கியதாகும்.
2029-இல் பா.ச.க. பிரதமர்
வேட்பாளராகக் கூடும் என எதிர்பார்க்கப்படும் உ.பி.
முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘கோவிட்’ காலத்தில் பிணங்களைப் புதைக்க வழியின்றி கங்கையில் மிதக்க விட்டார். அவர் கூறுகிறார்: “இந்துப் பெண்கள் வெவ்வேறு மதத்தினரிடையே திருமணம் செய்யக்கூடாது” என்று.
இது மதம் ரீதியான தனி மனித, பெண் சுதந்திரத்தை மறுப்பது அல்லவா?
பா.ச.க.வைப்
பொறுத்தவரை எல்லா நிலையிலும் மனுதர்மம் காப்பாற்றப்படவேண்டும்; ஆர். எஸ்.எஸ். அதைத்தான் அடிப்படைப் பாடமாக அவர்களுக்குக் கற்றுத்தந்துள்ளது. அதற்காக ‘இந்திய மக்களைக்
கற்காலத்திற்குள் மீண்டும் தள்ள முடியுமா?’ என்பதே இங்கு எழும் பெருங்கேள்வி.
தேசத்தின்
சரிபாதி மக்கள்தொகையாக உள்ள மகளிருக்கு, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், உள்ளாட்சி
அமைப்புகளில் தேர்தலில் போட்டியிட இடஒதுக்கீடு உள்ளது. மாநிலச் சட்ட சபைகளிலும், இந்தியப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் 50% மகளிர் இடஒதுக்கீடு
கொண்டு வரப்படவேண்டும். மனுதர்மத்தால் மறுக்கப்பட்ட மகளிர் உரிமையைச் சமூக நீதியால் மீட்டெடுத்ததுபோல, ஆட்சி அதிகாரப் பகிர்விலும் மகளிருக்கு உரிய சம பங்களிப்புக்
கிடைக்கவேண்டும்.