நற்செய்தியின் அடிச்சுவடுகளை முழுமையாகப் பின்பற்றியதனால் புனித பிரான்சிஸ் அசிசி ‘மறு கிறிஸ்து’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இறைவார்த்தையைத் தன் வாழ்வின் ஒழுங்காகக் கடைப்பிடித்ததனால் தனித்துவம் மிக்க புனிதராகப் போற்றப்படுகிறார்.
மூன்றாம்,
நான்காம் நூற்றாண்டுகளில் இயேசு தம் சீடர்களுக்குக் கற்பித்தவையே பாலைநிலத் துறவிகளின் வாழ்விற்கு மையமாக அமைந்திருந்தது. திருத்தூதர் பணியில் கூறப்பட்டுள்ள எருசலேம் தொடக்கக் கிறித்தவர்கள் வாழ்ந்த வாழ்வு, இவர்களின் கூட்டு வாழ்விற்கு முன்னுதாரணமாக அமைந்தது. தங்கள் உடைமைகளை விற்று பொது உடைமையாக வைத்துக்கொண்டு ஆலயத்திலும் வீடுகளிலும் செபிப்பதிலும், அப்பங்களைப் பகிர்வதிலும், ஏழைகளுக்கு உதவுவதிலும் தொடக்க கிறித்தவர்களின் வாழ்வைப் பின்பற்றித் துறவு மடங்கள் தங்கள் ஒழுங்கை அமைத்துக் கொண்டன. நிறைய சொத்துகள் பொது உடைமையாக இருந்தன. ஆனால், பிரான்சிஸ் அசிசியாருக்கு எருசலேம் தொடக்கக் கிறித்தவர்களின் குழு வாழ்வு தூண்டுதலாக இல்லை; மாறாக, இயேசு தம் சீடர்களோடு வாழ்ந்த எளிமையான, நிலையற்ற, இறைவனைச் சார்ந்த வாழ்வுக்கே தான் அழைக்கப்படுவதாக அசிசி உணர்ந்தார்.
புனித
பிரான்சிஸ் தனது இறுதி சாசனத்தில் தொடக்கக் காலமாற்றத்தை இவ்வாறு பதிவு செய்கிறார்: “ஆண்டவர் சில சகோதரர்களை எனக்குக் கொடுத்தார். அதன்பின் நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்கு யாரும் கூறவில்லை. ஆண்டவரே நான் நற்செய்தியின்படி வாழவேண்டும் என்று எனக்கு வெளிப்படுத்தினார்.” இக்கூற்றின்படி தொடக்க மனமாற்ற காலத்தில் 1208-இல் பிரான்சிஸ் தான் எத்தகைய வாழ்வு வாழவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகின்றார் என்ற தேடலோடு, அசிசி நகர் மலையடிவாரத்தில் தான் பழுதுபார்த்த போர்சியங்குலா சிற்றாலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் பங்குபெற்றார். அன்று இயேசு தம் சீடர்களைப் பணிக்கு அனுப்பும்பொழுது கூறிய அறிவுரை நற்செய்தி வாசகமாக அமைந்திருந்தது: “பொன்,
வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் கைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம்; பயணத்திற்காக பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளையோ, கைத்தடிகளையோ எடுத்துச் செல்ல வேண்டாம்.” இவ்வார்த்தைகளைக் கேட்டவுடனே பிரான்சிஸ் மகிழ்ச்சியின் உச்சத்தில் ‘இதுதான் என் விருப்பம்; இதுதான் என் ஆன்மாவின் தேடல்’ என்று கூறி, தான் அணிந்திருந்த நீண்ட துறவு ஆடையையும் கைத்தடியையும் விட்டுவிட்டு ஆண்டவர் விரும்பிய வாழ்க்கை முறையைப் பின்பற்றினார். பிரான்சிசின் வாழ்க்கை முறையினாலும் போதனையினாலும் தூண்டப்பெற்ற முதல் சகோதரர்கள், புனித நிக்கோலாஸ் ஆலயத்திற்குச் சென்று அக்காலத்தின் வழக்கத்தின்படி செபித்துவிட்டு மூன்று முறை நற்செய்தியைத் திறந்தார். அதில் “நீர் நிறைவு உள்ளவராக இருக்க விரும்பினால் உன் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக்
கொடு” (மத்
19:21), “பயணத்திற்குக்
கைத்தடியும் பணமும் எடுத்துச் செல்ல வேண்டாம்”
(லூக் 9:3), “தன்னலம்
துறந்து தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்தொடரட்டும்” (மத்
16:21) என்ற இறைவார்த்தைகளை - புனித அசிசிக்கும் அருளப்பட்ட அதே வார்த்தைகளைக் கண்டனர். இந்த இறைவார்த்தைகள் சுட்டிக்காட்டும் எளிமை, ஏழ்மை, நிச்சயமற்ற தன்மை, இறைவனைச் சார்ந்த நிலை, பற்றற்ற நிலையில் அந்நியராகவும் பயணியாகவும் பயணிக்கின்ற நிலைகள், இயேசு தம் சீடர்களோடு வாழ்ந்த வாழ்வைப் பிரதிபலிக்கின்றன. பிரான்சிஸ் வகுத்த சபை ஒழுங்குகளில் 141 - நற்செய்தி திருவிவிலிய வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவைகளில் ஏறக்குறைய 120 நற்செய்தி வசனங்கள் இயேசு தம் சீடர்களுக்குக் கற்பித்தவை. அவரவர்
நிலையில் ஆழமான விதத்தில் இயேசுவைப் பின்பற்ற பிரான்சிஸ் அசிசியாரின் நற்செய்தி ஆன்மிகம் மிகவும் உறுதுணையாக இருக்கும்.