news-details
ஆன்மிகம்
புனித பிரான்சிசின் சமூகப் பொறுப்புணர்வு

புனித பிரான்சிஸ் அசிசியின் ஆன்மிகம் தனிமனித இறையன்பில் மட்டும் முடங்கியதல்ல; கடவுளை நேசிப்பது, மனிதனை நேசிப்பது மற்றும் படைப்பைப் பாதுகாப்பது என்ற ஒருங்கிணைந்த வாழ்வு முறையாக அது வெளிப்பட்டது. ஏழைகள், நோயாளிகள், ஒதுக்கப்பட்டவர்கள், தொழுநோயாளிகள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களிடம் அவர் காட்டிய அன்பே அவரது சமூக அர்ப்பணிப்பின் மையம்.

தொழுநோயாளியைத் தழுவிய மாற்றம்: தொழுநோயாளிகள் சமூகத்தால் வெறுக்கப்பட்டும் ஒதுக்கப்பட்டும் இருந்தனர். அவர்களைக் கண்டாலே வெறுப்புக் கொண்டிருந்த பிரான்சிஸ், பின்னர் கிறிஸ்துவின் அழைப்பை உணர்ந்தபின் ஒரு தொழுநோயாளியை அணுகி அவரைத் தழுவி, உதவி செய்தார். இந்த அனுபவம் அவரது வாழ்க்கையில் பெரிய ஆன்மிக மாற்றத்தை ஏற்படுத்தியது. “நீங்கள் இவற்றில் மிகச் சிறிய ஒருவருக்குச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்” (மத் 25:40).

செல்வத்தைத் துறந்து ஏழைகளுடன் வாழ்தல்: பிரான்சிஸ் தனது சமூக அந்தஸ்தையும், பொருளாதாரப் பாதுகாப்பையும் விட்டுவிட்டு ஏழ்மையைத் தழுவினார். ஏழைகளைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும் அவர்களுடன் வாழ்வதே உண்மையான சகோதரத்துவம் என்று தனது வாழ்க்கையால் காட்டினார். “உன் உடைமைகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு” (மத் 19:21). இது வெறும் தனிப்பட்ட துறவற முடிவு அல்ல; அக்காலச் சமூகத்தின் செல்வம், அதிகாரம் ஆகியவற்றிற்கு மாற்றான ஒரு வாழ்வுச் சாட்சியம்.

சகோதரத்துவம் - சமூக மாற்றத்தின் அடித்தளம்: பிரான்சிஸின் பார்வையில் மனிதர்கள் போட்டியாளர்கள் அல்லர்; சகோதரர்களும் சகோதரிகளும் ஆவர். தனது சகோதரர்களை, ‘எளிய சகோதரர்கள்’ என்று அழைத்தார். “நீங்கள் அனைவரும் சகோதரர்கள்” (மத் 23:8). அதிகாரத்தைத் தேடுவதற்குப் பதிலாகச் சேவையைத் தேர்ந்தெடுத்தது பிரான்சிஸின் சமூக ஆன்மிகத்தின் தனிச்சிறப்பு.

அமைதி மற்றும் சமாதானம்: பிரான்சிஸ் ‘சமாதானமும் நன்மையும்’ என்ற வார்த்தையை முன்னிறுத்தினார். அவரது அமைதிப் பணியின் உச்சநிலைகளில் ஒன்று - எகிப்தில் சுல்தான் அல்-மாலிக் அல்-காமிலைக் சந்திக்கச் சென்ற நிகழ்வு. சிலுவைப் போர்களின் வன்முறைச் சூழலில் அவர் எதிரியாகக் கருதப்பட்ட ஒருவரை உரையாடலின் மூலம் அணுகினார். “அமைதியை உருவாக்குகிறவர்கள் பேறுபெற்றோர்” (மத் 5:9). இன்றைய உலகில் மதங்களுக்கு இடையிலான உரையாடல், சமாதானத்திற்கு  ஒரு வலுவான முன்மாதிரி.

படைப்பைப் பாதுகாத்தல்: பிரான்சிஸின் சமூகப் பொறுப்பு மனிதர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை; பறவைகள், விலங்குகள், சூரியன், நிலவு, நீர், காற்று என முழுப் படைப்பையும் அவர் சகோதர உறவில் பார்த்தார். படைப்புப் பயன் தருவதால் மட்டும் பாதுகாப்பது அல்ல; என் உடன் படைக்கப்பட்டதால். “ஆண்டவர் படைத்த அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தது” (தொநூ 1:31). இன்றைய சுற்றுச்சூழல் நெருக்கடியின் காலத்தில், பிரான்சிஸின் படைப்புப் பார்வை சுற்றுச்சூழல் நீதிக்கும் நிலையான வாழ்வுக்கும் முக்கியமான ஆன்மிக அடித்தளம்.

சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்கான குரல்: பிரான்சிஸ் சமூகத்தின் விளிம்பில் இருந்தவர்களிடம் சென்றார். அவர்களின் துயரத்தைத் தன் துயரமாகக் கண்டார். இதனால் இவரது ஆன்மிகம் ஏழைகளுக்கான பரிவு,  அவர்களுடன் இருப்பது, அவர்களுக்குச் சேவை செய்வது, சகோதரத்துவச் சமூகத்தை உருவாக்குவது என்ற நடைமுறையான சமூகப் பொறுப்பாக மாறியது.

இன்றைய சமூகத்திற்கான பிரான்சிஸின் அழைப்பு: பிரான்சிஸின் வாழ்க்கை நம்மிடம் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன: ‘ஏழைகளையும் ஒதுக்கப்பட்டவர்களையும் நாம் எவ்வாறு பார்க்கிறோம்? நமது செல்வம் மற்றவர்களின் நலனுக்குப் பயன்படுகிறதா? பிற மதத்தவர்களுடன் உரையாடத் தயாராக இருக்கிறோமா? வன்முறைக்குப் பதிலாகச் சமாதானத்தைத் தேர்ந்தெடுக்கிறோமா? படைப்பை நுகர்வுப் பொருளாகப் பார்க்கிறோமா? கடவுளின் பரிசாகப் பார்க்கிறோமா? செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மனித கண்ணியத்திற்கும் பொது நலனுக்கும் பயன்படுகிறதா?

பிரான்சிஸ் ஏழைகளைப் பற்றி மட்டும் பேசவில்லை; அவர்களிடம் சென்றார். அமைதியைப் பற்றி மட்டும் போதிக்கவில்லை; எதிரியாகக் கருதப்பட்டவரைச் சந்தித்தார். படைப்பைப் பற்றி மட்டும் சிந்திக்கவில்லை; அதை ‘சகோதரன்-சகோதரி’ உறவில் அனுபவித்தார்.  எனவே, பிரான்சிஸின் சமூக ஆன்மிகம் என்பது ‘மனிதனை நேசி, ஏழையுடன் நட, எதிரியுடன் உரையாடு, படைப்பைப் பாதுகாத்து, சமாதானத்தை உருவாக்கு’ என்ற வாழ்வின் அழைப்பு.