news-details
ஆன்மிகம்
புனித பிரான்சிஸ் அசிசி நுகர்வுக் கலாச்சாரத்திற்கு ஒரு மாற்று வழி!

நாம் விரும்பும் எல்லாவற்றையும் உடனுக்குடன் வாங்குவதற்கும், உலகிலுள்ள அனைத்து ஆடம்பரங்களையும் அனுபவிப்பதற்கும் போதுமான அளவு பணம் நம்மிடம் கையில் இருந்தால், நம் மனம் எந்தவிதமான கவலையுமின்றி எப்போதும் முழு மகிழ்ச்சியோடு மட்டுமே இருக்குமா? இந்த வினாவிற்கு உடனடியாக ‘ஆம்’ என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், இன்றைய உலகம் நம்மிடம் ‘அதிகமாக வாங்கு’, ‘அதிகமாகச் சேமி’, ‘அதிகமாகப் பயன்படுத்து’, ‘நுகர்ந்துகொண்டே இரு’ என்று ஓயாமல் கூச்சலிடுகிறது.

பிரான்சிஸ் தன் இளமைப் பருவத்தில் ஆடம்பர உடைகளையும் விருந்துகளையும் விரும்பிய ஒரு நுகர்வுப் பிரியராகவே வாழ்ந்தார். ஆனால், ஒருநாள் வழியில் கண்ட தொழுநோயாளியை அருவருப்போடு ஒதுக்கித் தள்ளாமல், இறைவனின் அன்பினால் தூண்டப்பட்டு அவரைக் கட்டித் தழுவியபோது, அவரது வாழ்வில் மாபெரும் மனமாற்றம் ஏற்பட்டது. கசப்பாகத் தோன்றிய தொழுநோயாளி அவருக்கு இனிமையானவராக மாறினார். இச்சந்திப்பு அவரது வாழ்வியல் பார்வையையே மாற்றியது. பொருள்கள், வசதிகளைக் குவிப்பதைவிட, பிறரை அன்பு செய்வதற்கான ஆன்மிகச் சுதந்திரத்தைப் பெறுவதே உன்னதமானது என்பதை உணரவைத்தது.

நுகர்வு உலகம் வசதிகளிலும் புகழிலும் மகிழ்ச்சி இருக்கிறது என்று கூறும்போது, புனித பிரான்சிஸ் தன் சீடர் லியோவுக்குக் கற்றுக்கொடுத்த ‘நிறைவு தரும் மகிழ்ச்சி’ (Perfect Joy) முற்றிலும் மாறுபட்ட பாடம் புகட்டுகிறது. கடுங்குளிரில், மழையில் நனைந்து வந்த அவர்களை மடத்தின் சகோதரனே அடையாளம் தெரியாமல் அடித்துத் துரத்தியபோது, பிரான்சிஸ் கூறினார்: “நாம் அற்புதங்கள் செய்வதிலோ, மக்கள் நம்மைப் போற்றுவதிலோ நிறைவு தரும் மகிழ்ச்சி இல்லை; மாறாக, கிறிஸ்துவிற்காக அவமானங்களையும் நிராகரிப்புகளையும் பொறுமையோடு ஏற்றுக்கொள்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.”

நுகர்வுக் கலாச்சாரம், ‘நான் இன்னும் என்ன வாங்கலாம்?’ என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால், பிரான்சிஸ்கன் நெறியோ, ‘நான் இன்னும் என்ன பகிர்ந்து கொள்ளலாம்?’ என்று சிந்திக்கத் தூண்டுகிறது. கப்புச்சின் உருவாக்கப் பாதையில் (Ratio Formationis of Franciscan Capuchins) பிரான்சிஸ்கன் வறுமை என்பது வெறுமனே பொருள்களைத் துறப்பது மட்டுமல்ல; பிறருக்குப் பணியாற்றவும், எளியவர்களை வரவேற்கவும் நம் இதயத்தைச் சுதந்திரமாக்குவது.

புனித பிரான்சிஸ் விண்ணகம் சென்றதன் 800-வது யூபிலி ஆண்டு நினைவு, நமது வாழ்க்கை முறையை மறுபரிசீலனை செய்யக் கிடைத்த வாய்ப்பு. ‘இன்னும் அதிகமாக நுகருங்கள்’ என்ற உலகிற்கு மத்தியில், ‘எளிமையாக வாழுங்கள், ஆழமாக அன்பு செய்யுங்கள், தாராளமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்பதே பிரான்சிஸ் நமக்கு வழங்கும் செய்தி.

இந்த ஆண்டு, வெறும் வரலாற்றைச் அசைபோடும் சடங்கு அல்ல; அது நம்முடைய தற்போதைய வாழ்க்கை முறையைத் தீர ஆராய்வதற்கும், மனமாற்றம் அடைவதற்கும் நமக்குக் கிடைத்திருக்கும் ஓர் அருமையான வாய்ப்பு. ‘பொருள்களைச் சேருங்கள்’ என்று தொடர்ச்சியாக நம்மை உந்தித்தள்ளும் நவீன உலகத்திற்கு மத்தியில், தொழுநோயாளியுடனான அவரது சந்திப்பு, நாம் சக மனிதர்களைப் பார்க்கும் விதத்தை மட்டுமல்லாமல், வெற்றி, செல்வம், வசதி ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தையே மாற்றியமைக்கிறது. நற்செய்தியின் வழி நின்று, கிறிஸ்துவை மையமாகக் கொண்டு, எளிமையையும் சகோதரத்துவத்தையும் ஏழைகளின் அருகாமையையும் தேர்வுசெய்து வாழ்வதே பிரான்சிஸ் அசிசியின் கலாச்சாரம்.

இந்த 800-ஆம் ஆண்டு யூபிலியில் நுகர்வுக் கலாச்சாரத்தை விடுத்து பிரான்சிஸ் அசிசியின் கலாச்சாரத்தைப் பின்பற்றுவோம் என்று உறுதியேற்போம்.