news-details
ஆன்மிகம்
‘இறை ஊழியர்’ அருள்தந்தை டி.எஸ். அமலோற்பவதாஸ்

புனிதர் பட்டத்திற்கான நடைமுறை தொடங்கும் வேளையில், இவரது வாழ்வையும் ஆன்மிக மரபையும் நினைவுகூர்தல்

அருள்தந்தை டி.எஸ். அமலோற்பவதாஸ் இறை ஊழியராகத் திரு அவையின் முறைப்படி அறிவிக்கப்படும் இவ்வேளையில், இவரது வாழ்வை நன்றியுடன் நினைவுகூரவும், இறைவேண்டலில் ஆழமாக ஈடுபடவும் திரு அவை அழைப்பு விடுக்கிறது. இவரது பணிவாழ்வு, நற்பண்புகள், புனித வாழ்வு குறித்த மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை ஆராய்ந்து தெளியும் பயணத்தின் தொடக்கமாக இந்நிகழ்வு அமைகிறது. இவரது சாதனைகளைக் கடந்து, இவரது பணியைத் தாங்கிய இறைநம்பிக்கையையும், இந்தியத் திரு அவைக்கு அளித்துள்ள ஆன்மிக மரபையும் சிந்திக்க இது நம்மை அழைக்கிறது.

அன்போடு ‘அருள்தந்தை அமலோர்’ என்று அழைக்கப்பட்ட இவர், திரு அவையின் மறுமலர்ச்சியை ஓர் ஆன்மிகப் பொறுப்பாகக் கருதினார். போதனை, வழிபாடு, மேய்ப்புப்பணி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், கிறிஸ்துவை நோக்கிய உள்ளார்ந்த மனமாற்றத்திலிருந்து மலரவேண்டும் என்று நம்பினார். தனது பணிக்காலம் முழுவதும் இறையியல் சிந்தனையையும் மேய்ப்புப் பணியையும் இணைக்க முயன்றார். நற்செய்திக்கும் தான் வாழும் மக்களின் வாழ்வுக்கும் செவிசாய்க்கும் திரு அவையை உருவாக்க உழைத்தார்.

குருத்துவ அழைப்பின் வேர்கள்

1932, ஜூன் 15 அன்று, புதுச்சேரி உயர்மறைமாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் கல்லேரியில் அமலோற்பவதாஸ் பிறந்தார். தமிழ் மொழி, பண்பாடு, கிறித்தவ நம்பிக்கை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு பெரிய கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்ந்தார். இவரது பெற்றோர் துரைசாமி சிமியோனும் அன்னமரியும் தங்களது பன்னிரண்டு பிள்ளைகளையும் திரு அவையின் வாழ்வுக்கேற்ப வளர்த்தனர். இவரது மூத்த சகோதரர் டி.எஸ். லூர்துசாமியும் அருள்பணியாளராகி, பின்னர் கர்தினாலாக உயர்ந்தார்.

திண்டிவனம் மற்றும் கடலூரில் பள்ளிக் கல்வியை முடித்த அமலோர், பெங்களூரிலுள்ள புனித பேதுரு குருமடத்தில் குருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்தார். உடல்நலக் குறைபாடுகள் இருந்தபோதிலும், சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். தமிழில் சிறுநூல்களை வெளியிடத் தொடங்கியதுடன், உடன் பயின்ற குருமாணவர்களின் படிப்பிற்கும் உதவினார். பின்னாளில் இவர் ஆற்றவிருந்த கற்பித்தல் மற்றும் கருத்துகளைப் பகிரும் பணிகளுக்கு இவை முன்னோடியாக அமைந்தன.

திருத்தந்தை 23-ஆம் யோவான், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தை அறிவித்த அதே ஆண்டில், 1959, ஏப்ரல் 12 அன்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். திண்டிவனத்தின் மண்டல மறைக்கல்வி மையத்தில் இவருக்கு வழங்கப்பட்ட முதல் பணி, அருள்பணியாளர்கள், துறவியர், ஆசிரியர்கள், மறைக்கல்விப் பணியாளர்கள் ஆகியோருக்குப் பயிற்சியளிப்பதாக அமைந்தது. திருவிவிலியம் மற்றும் திருவழிபாட்டைக் கற்பித்ததும், மேய்ப்புப்பணிப் பயிற்சிகளை ஏற்பாடு செய்ததும், பல்வேறு சமூகங்களுக்குள் இறைநம்பிக்கையைப் பகிர்வதற்கான நடைமுறை அனுபவத்தை இவருக்கு அளித்தன.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்தால் வடிவமைக்கப்பட்ட வாழ்வு

1962-ஆம் ஆண்டில், மறைக்கல்வி மற்றும் இறையியலில் மேற்படிப்பிற்காக அருள்தந்தை அமலோர், பாரிசிலுள்ள கத்தோலிக்கக் கல்வி நிறுவனத்திற்குச் சென்றார். இவர் வெளிநாட்டில் பயின்ற ஆண்டுகளில்தான் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கமும் நடைபெற்றது. உரோமைக்குச் சென்றபோது, சங்கத்தில் பங்கேற்ற இந்திய ஆயர்களைச் சந்தித்து, அவர்கள் ஆராய்ந்து வந்த கருத்துகள் குறித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றார். சங்கத்தின் தொலைநோக்கு இவரது பணிக்கு நிலையான உந்துதலாக அமைந்தது.

இந்தியாவில் திரு அவையின் பணி மற்றும் பயனுள்ள நற்செய்தி அறிவிப்பிற்குத் தேவையான சூழல்கள் ஆகியவற்றை இவரது ஆய்வுகள் ஆராய்ந்தன. திரு அவைக்குள்ளேயே உள்ளார்ந்த மனமாற்றம் தேவை என்பதை வலியுறுத்தினார். நற்செய்தியை நம்பகத்தன்மையுடன் அறிவிக்க, கிறித்தவர்கள் தாங்கள் அறிக்கையிடும் இறைநம்பிக்கையைத் தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தும் சமூகமாக மாற வேண்டும் என்று கருதினார்.

இந்தியா திரும்பியதும், விரியூரிலுள்ள அடைக்கல அன்னை பங்கிலும், அதைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் பணியாற்றினார். தான் கற்றவற்றைப் பங்கு மக்களின் வாழ்வோடு இணைத்தார். இறைவனைச் சந்திக்கவும், தங்களைச் சுற்றியுள்ள தேவைகளுக்குப் பதிலளிக்கவும் இறையியல் மக்களுக்கு உதவவேண்டும் என்ற இவரது உறுதியை இந்த அனுபவம் மேலும் வலுப்படுத்தியது. பின்னாளில், இவரது பணிகளை வழிநடத்திய அடிப்படை நம்பிக்கையாக இது அமைந்தது.

இறைநம்பிக்கையில் புதுப்பிக்கப்படும் திரு அவை

1967-ஆம் ஆண்டில் பெங்களூரில் தொடங்கப்பட்ட தேசிய மேய்ப்புப்பணி மையத்தின் நிறுவுநர் இயக்குநராக அருள்தந்தை அமலோர் பொறுப்பேற்றார். பின்னர் இம்மையம் தேசிய விவிலிய மறைக்கல்வி திருவழிபாட்டு மையமாக வளர்ந்து, NBCLC என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டது. இந்திய ஆயர்களின் முயற்சியால் நிறுவப்பட்ட இம்மையம், பொதுச்சங்கத்தின் மறுமலர்ச்சியை நடைமுறைப்படுத்துவதற்கான முக்கியக் கருவியாக விளங்கியது.

பயிற்சிகள், கருத்தரங்குகள், வெளியீடுகள் ஆகியவற்றின் வழியாக திருவிவிலியம், இறைநம்பிக்கை வளர்ப்பு, திருவழிபாடு குறித்த புரிதலை ஆழப்படுத்த அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகியோருக்கு இம்மையம் உதவியது. அமலோரின் தலைமையில் இப்பணிகள் இந்தியக் கிறித்தவ ஆன்மிகம், உரையாடல், சமூகப் பொறுப்பு ஆகியவற்றுடன் நெருங்கி இணைந்தன. மையத்தின் முதல் 15 ஆண்டுகளில் 25,000-க்கும் மேற்பட்டோர் அதன் பயிற்சிகளில் பங்கேற்றதாக மூல ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.

‘Word and Worship’ இதழின் ஆசிரியராகவும் இவர் இப்பணியைப் பரந்த வாசகர் வட்டத்திற்குக் கொண்டு சென்றார். இறையியல் கருத்துகளை மேய்ப்புப்பணிக்குப் பயனுள்ளவையாக மாற்றுவது இவரது சிறப்பாக இருந்தது. திரு அவையின் பணியில் தங்களுக்குரிய இடத்தை உணர பொதுநிலையினரை ஊக்குவித்தார். பிறரிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்த விரும்பும் பணியாளர்கள், முதலில் தாங்களே அம்மறுமலர்ச்சியை அனுபவிக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். இவரது பணி இந்தியாவையும் கடந்து உலக அளவில் விரிந்தது. 1974-ஆம் ஆண்டு நற்செய்தி அறிவிப்பு குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் சிறப்புச் செயலர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டார்.

இந்திய மண்ணில் வேரூன்றும் நற்செய்தி

அருள்தந்தை அமலோரின் முக்கிய அக்கறைகளில் ஒன்று பண்பாட்டுமயமாக்கல். ஒரு மக்களின் பண்பாட்டில் நற்செய்தி வேரூன்றி, அவர்களது வாழ்வை வடிவமைக்கும் செயல்முறையே இது. இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டிருப்பதுடன், இந்திய மக்களின் உள்ளங்களோடு இயல்பாகப் பேசக்கூடிய கிறித்தவ இறைவேண்டல், திருவழிபாடு, இறைநம்பிக்கை வெளிப்பாடுகள் ஆகியவற்றை இவர் நாடினார்.

இவரது பார்வையில் இது வெளிப்புற மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக இருந்தது. தங்களது இறைநம்பிக்கை, மொழி, மரபுகள், உறவுகள், இறை அனுபவம் ஆகியவை எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதைப் பற்றிக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டியிருந்தது. ஆழமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாழ்வில் உண்மையாக வெளிப்படும் இறைநம்பிக்கையை திரு அவையின் வாழ்வு வெளிப்படுத்தவேண்டும் என்று அவர் விரும்பினார்.

இப்பணி பாராட்டுகளோடு சேர்த்து கருத்து வேறுபாடுகளையும் எதிர்கொண்டது. ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுச் சூழலில் நற்செய்தி புரிந்துகொள்ளப்படவேண்டும் என்று முயலும்போது தேவைப்படும் பொறுமையையும் துணிவையும் இவரது அனுபவம் நமக்கு நினைவூட்டுகிறது.

உரையாடலும் செப வாழ்வும்

இந்தியாவின் ஆன்மிக மரபு குறித்த அருள்தந்தை அமலோரின் அக்கறை, கல்விப்பணியிலும் தியான வாழ்விலும் வெளிப்பட்டது. 1979-ஆம் ஆண்டில் மைசூர் பல்கலைக்கழகத்தில் கிறித்தவ ஆய்வுக்கான இருக்கையை நிறுவினார். அது 1981-ஆம் ஆண்டில் கிறித்தவத் துறையாக வளர்ந்தது. பல்வேறு சமய மற்றும் பண்பாட்டுப் பின்னணிகளைச் சார்ந்தவர்கள் ஆய்வு செய்யவும், கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும் அது வாய்ப்பளித்தது.

1979-ஆம் ஆண்டில் மைசூரில் அஞ்சலி ஆசிரமத்தையும் இவர் நிறுவினார். அங்கு இவரது இறையியல் பார்வையானது இறைவேண்டல், உள்ளார்ந்த ஆன்மிக வாழ்வு, ஆன்மிக வழிகாட்டுதல் ஆகியவற்றுடன் இணைந்தது. ஆழமான இறையனுபவத்தை நாடியவர்கள் ஆலோசனைக்கும் ஆதரவுக்கும் ஆசிரமத்திற்கு வந்தனர். அமைதி, தியானம், கவனமுடன் செவிமடுத்தல் ஆகியவை இறைநம்பிக்கையைப் பற்றிய கல்வியை எவ்வாறு வளப்படுத்த முடியும் என்பதை இவரது பணி எடுத்துக்காட்டியது.

உரையாடலுக்கான இவரது திறந்த மனப்பான்மை, இயேசு கிறிஸ்துவின் தனித்துவமான மீட்புப் பணியில் இவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டுடன் இணைந்திருந்தது. பிற சமயத்தினரை மரியாதையுடனும், அவர்களைப் புரிந்துகொள்ளும் விருப்பத்துடனும் அணுகினார். பன்முகச் சமூகத்தில் நல்லிணக்கத்தை வளர்க்க இறைநம்பிக்கையாளர்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கான வழிகளைத் தேடினார்.

பணியில் வெளிப்படும் நம்பிக்கை

அருள்தந்தை அமலோரின் புதுப்பித்தல் குறித்த பார்வையில் சமூக நீதியும் இடம்பெற்றிருந்தது. தலித் மக்கள், பழங்குடியினர் உள்ளிட்ட ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் வாழ்வோர் மீதான அக்கறை, திரு அவையின் பணி குறித்த இவரது புரிதலின் ஒரு பகுதியாக இருந்தது. பெண்களின் மாண்பு, மனித உரிமைகள், சமூகத்தின்மீது கிறித்தவர்கள் கொண்டுள்ள பொறுப்புகள் ஆகியவற்றை இவரும் இவரது உடன் பணியாளர்களும் தங்கள் பணிகளில் கவனத்தில் கொண்டனர்.

இப்பார்வையில், இறைவேண்டலும் சேவையும் நெருங்கிய தொடர்புடையவை. இறைவனுடனான சந்திப்பு, பிறர்மீது நாம் கொண்டுள்ள அக்கறையை ஆழப்படுத்தவேண்டும். குறிப்பாக, எளிதில் கவனிக்கப்படாமல் விடப்படும் துயரங்களை அனுபவிப்பவர்கள்மீது நமது கவனம் அதிகரிக்கவேண்டும்; தாங்கள் போதிக்கும் இரக்கத்தையும் நீதியையும் கிறித்தவச் சமூகங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும் போது, திரு அவையின் நற்செய்தி அறிவிப்பு மேலும் நம்பகத்தன்மை பெறுகிறது.

1990, மே 25 அன்று கார் விபத்தைத் தொடர்ந்து அருள்தந்தை அமலோர் இறைவனடி சேர்ந்தார். மிகுந்த ஆற்றலுடன் இவர் ஆற்றிய பணி இவரது இறப்புடன் முடிவுற்றாலும், இவர் நிறுவிய நிறுவனங்கள், உருவாக்கிய பணியாளர்கள்,  இவரது பணியால் ஊக்கம் பெற்ற இறையியல் சிந்தனைகள் ஆகியவற்றின் வழியாக இவரது தாக்கம் தொடர்ந்தது. மூலக்கட்டுரையில் இடம்பெறும் பிற்கால அஞ்சலியுரையில், பேராயர் பெர்னார்ட் மோராஸ் இவரை ‘ஓர் இந்தியக் கிறித்தவ இறைவாக்கினர்’ என்று வர்ணித்தார்.

அருள்தந்தை அமலோர் இறை ஊழியராக அறிவிக்கப்படுவது, இந்நினைவுகூரலுக்கு ஒரு தனித்துவமான ஆன்மிகப் பொருளை அளிக்கிறது. இந்நிலை இவரது புனிதத்தன்மை குறித்த திரு அவையின் இறுதித் தீர்ப்பை முன்கூட்டியே அறிவிப்பதல்ல; இவரது புனிதர் பட்டத்திற்கான நடைமுறை, திரு அவையின் கவனமான ஆய்வின் வழியாகத் தொடரும் வேளையில், இறைமக்களை இறை வேண்டல் செய்ய அழைக்கிறது. இவரது பணிக்கான நன்றியுணர்வு, பொறுமை, பணிவு, இறைநம்பிக்கை ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும்.

இன்றைய கிறித்தவர்களுக்கு இவரது வாழ்வு ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் அழைப்பை விடுக்கிறது. திருவிவிலிய அறிவை நாம் ஆழப்படுத்தலாம்; வழிபாட்டில் இன்னும் முழுமையாகப் பங்கேற்கலாம்; நமது அயலாரை மதித்து, தேவையில் இருப்போரைக் கவனிக்கலாம். உண்மையான சேவைக்கு ஊற்றாக அமையும் இறைவேண்டலுடன் கூடிய செவிமடுத்தலுக்கும் இடமளிக்கலாம். அன்றாட வாழ்வின் மையத்தில் நற்செய்தியைக் கொண்டுவர முயன்ற ஓர் அருள்பணியாளரை மதிப்பதற்கான பொருளுள்ள வழிகள் இவையே.

இந்த அறிவிப்பிற்காக நாம் ஒன்றுகூடும் வேளையில், நமது நினைவுகூரல் இறைவேண்டலாக மாறட்டும். இவரது புனிதர் பட்டத்திற்கான பணியில் பொறுப்பேற்றுள்ள அனைவரையும் இறைவன் வழிநடத்துவாராக. அருள்தந்தை அமலோரின் வாழ்வுச் சான்று, கிறிஸ்துவின்மீதும் அவரது திரு அவையின்மீதும் நம்மில் புதுப்பிக்கப்பட்ட அன்பைத் தூண்டுவதாக. இறைவனின் திருவுளமாயின், இவரது புனிதத்தன்மை திரு அவையால் அங்கீகரிக்கப்படுவதாக. எல்லாவற்றிற்கும் மேலாக, இவர் பகிர்ந்த ஆன்மிக மரபு, நம்பிக்கையில் நாம் வளரவும், நமது சொந்த வாழ்வில் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தவும் உதவுவதாக.