கடந்த சில வாரங்களாக ஊடகங்களிலும் செய்தித்தாள்களிலும் வந்து கொண்டிருக்கின்ற சிறுமிகளின் மீதான பாலியல் கொடூரச் சுரண்டல் செய்திகளை அறியும்போது, நெஞ்சம் பதைபதைக்கின்றது; அறச்சினம் அனலாய்க் கொதிக்கின்றது. ‘மாதராய்ப் பிறப்பதற்கு மாதவம் செய்யவேண்டும்’ என்று முழங்கப்படுகின்ற தமிழ்நாட்டிலே நம் சிறுமிகளுக்கு இப்படி ஒரு கொடூரமா? எனும் கேள்வி உயிரை உலுக்குகின்றது.
நடுவண்
அரசால் விருதுகள் கொடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட வீரமணி எனும் 84 வயது கிரானைட் தொழிலதிபர், பல அரசியல்வாதிகளோடும் தொழில் அதிபர்களோடும்
அரசு அதிகாரிகளோடும் காவல்துறையோடும் நெருக்கமானவர். இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இவ்வழக்கில்
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
சிறுமிகள் பெரும்பாலும் ஏழைகள், தொழிலாளிகளின் மகள்கள், பட்டியலினத்தவர்கள், குடிசைவாசிகள், ஆதரவற்றவர்கள், அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாத வலிமையற்ற, அடக்கப்பட்ட பின்புலம் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சியில்
இருநூறுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்ட
கொடூர ஈரம் காயும் முன்பே, அடுத்த பாலியல் சீரழிப்புக் கொடுமை தமிழ்நாட்டில் தலைவிரித்தாடி உள்ளது. ’தமிழ்நாட்டின் எப்ஸ்டைன் பைல்ஸ்’ எனக் குறிப்பிடப்படுவது கேவலமாகத் தமிழ்நாட்டையே தலைகுனிய வைத்துள்ளது.
2025, அக்டோபர் மாதத்
தொடக்கத்தில் அண்ணாநகரில் உள்ள ஒரு குழந்தைகள் நலத் தன்னார்வ அமைப்பிற்கு அடையாளம் தெரியாதவர் வந்து, ஒரு பென்ட்ரைவையும் கடிதத்தையும் கொடுத்துவிட்டு மறைந்து விடுகின்றார். குழந்தைகள் நல அமைப்பாளர் அதைப்
பிரித்து, பென்ட்ரைவில் இருந்த வீடியோவைப் போட்டுப் பார்க்கும் போது, ஒரு வயதானவர் ஒரு சிறுமியைப் பாலியல் துன்புறுத்துவதைப் பார்க்கின்றார்.
கடிதத்தைப்
படித்துப் பார்த்து அதிர்ந்து போய், காவல்துறையிடம் அவற்றைச் சமர்ப்பிக்கின்றார். துணிவோடு செயல்பட்ட அவ்விரு நபர்களையும் நாம் பாராட்டிடவேண்டும்.
அக்குற்றத்திற்கான
நபர் அரசியல்-அதிகார-பணபலம் நிறைந்த நபர் என்பதால் விசாரணையில் தொய்வு. இறுதியில் 2026, பிப்ரவரியில் ‘இந்த வழக்கை முடித்துக்கொள்ளலாம்’ என்று
நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
இவ்வழக்கை
நன்கு ஆய்வு செய்து, இதில் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் ஏராளம் உள்ளன என்பதை அறிந்துகொண்ட ‘போக்சோ’ வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதியரசர் பத்மா சண்முக சுந்தரம் அவர்கள், ‘இந்த வழக்கை இன்னும் தீவிரமாக விசாரித்து அறிக்கையைச் சமர்ப்பியுங்கள்’ என்று
வலியுறுத்தியபோதும், தமிழ்நாடு அரசு சார்பில் காவல்துறை இந்த வழக்கை முடித்துவைக்கவே முயன்று, கடந்த ஜூன் 16-ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
இதையெல்லாம்
கண்டு நீதியரசர் பத்மா அவர்கள் ஜூலை 19-ஆம் தேதி ‘நான்கு வாரங்களுக்குள் நன்கு விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பியுங்கள்’ என்று
தீர்க்கமாகக் கட்டளையிட்ட பிறகுதான் காவல்துறையும் மும்முரமாகக் களத்தில் இறங்கியுள்ளது.
தேவையான
தகவல்களையும் ஆதாரங்களையும் காவல்துறை சேகரிக்க, திடுக்கிடும் தகவல்களும் அதிர்ச்சியூட்டும் ஆதாரங்களும் இன்றும் வந்த வண்ணமாய் உள்ளன. இந்த வழக்கில் உண்மையைக் கொண்டுவரவேண்டும்; குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்; சிறுமிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குச் சரியான பதிலிறுப்பு கிடைத்திடவேண்டும்; இது மாதிரியான பாலியல் கொடூரங்கள் இனியும் நிகழக்கூடாது எனும் மனிதநேயத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கும்
நீதியரசர் பத்மா அவர்களுக்கு, பாராட்டும் நன்றியும் கூறிடத் தமிழ் மண் கடமைப்பட்டுள்ளது.
இவ்வழக்கு
எப்படிப் போகப்போகின்றது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவே கூர்ந்து கவனித்துக்கொண்டு வருகின்றது. இதில் அரசியல் ஆதாயம் தேடுவதை எல்லாரும் நிறுத்திவிட்டு, சீரழிக்கப்பட்ட நம் சிறுமிகளுக்கு நீதி கிடைப்பதை மட்டும் முன்வைத்து அனைவரும் செயல்படவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் பெண்களுக்கு குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு எதிராகக் குவிந்து கொண்டிருக்கும் கொடுமைகள், பாலியல் வல்லுறவுகள், பெண்களின் மாண்பிற்கும் மனித உரிமைகளுக்கும் எதிரான கொடூரங்கள் அதிகரித்துள்ள நிலை, நமது சுதந்திரத்தையும் சனநாயகத்தையும் அறநெறிப் போக்குகளையும் கடுமையாகக் கேள்விக்குட்படுத்தியுள்ளது.
சீரழிக்கப்பட்ட
சிறுமிகள் எவரோ, யாருடைய குடும்பத்தவரோ என்று கருதி ஒதுங்கி நிற்காமல், ‘இவர்கள் என் குடும்பத்தவர், என் மகள்கள், என் சகோதரிகள்’
எனும் மனிதநேயச் சிந்தனையோடு ஒவ்வொருவரும் அணுகவேண்டும்.
இறையாட்சியின்
விழுமியங்களைத் தூக்கிப் பிடித்திடும் நாம், வழக்கம்போல அமைதி காப்பதையே புண்ணியமாகக் கருதிடாது, துணிவோடு களம் காணவேண்டும். மனித உரிமை, சனநாயக, பெண்கள், மக்கள், குழந்தை அமைப்புகள்
இந்த வழக்கில் அக்கறையும் தீவிரமும் காட்டி, சீரழிக்கப்பட்ட நம் சிறுமிகளுக்கு நீதி கிடைத்திட, இனியும் இப்படிப்பட்ட கொடூரங்கள் தமிழ்நாட்டில் நிகழாமல் தடுத்திட முன் வரவேண்டாமா?
துன்புறும்
மானுடம் எங்கிருந்தாலும், எவராக இருந்தாலும் அவர்கள் என் சகோதர-சகோதரிகள் எனும் இறையாட்சி விழுமியம் விடியலாகிட அனைவரும் முன்வந்து செயல்படுவோம்.