news-details
சிறப்புக்கட்டுரை
ஆனால்... கடன் பணத்தை மட்டும் சுமத்துவதில்லை! (வாழ்வின் மறுபக்கம் - 4)

வாழ்க்கை என்பது எப்போதும் நாம் போடும் கணக்குகளின்படி நகர்வதில்லை; அது சில நேரங்களில் எதிர்பாராத வளைவுகளையும் முள்களையும் நம் பாதையில் தூவுகிறது. பல மனிதரின் நிம்மதியை அமைதியாகப் பறித்து, அவர்களின் தூக்கத்தைத் திருடும் ஒரு நிழல் உலகம்தான் கடன். கடன் என்பது வெறும் பணப்பரிவர்த்தனை மட்டுமே அல்ல; அது மனித உணர்வுகளோடு ஆழமாக விளையாடும் ஒரு கடுமையான உளவியல் போராட்டம். அது குடும்ப உறவுகளின் வேர்களை அறுத்து, சமூகத்தில் மனிதரைத் தனிமைப்படுத்தி, சுயமரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கும் ஒரு மௌன நரகம்.

தொடக்கத்தில் ஓர் அவசரத் தேவையாகவோ, குடும்பத்தின் எதிர்பாராத மருத்துவச் செலவாகவோ, பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவோ அல்லது தொழிலின் முன்னேற்றத்திற்காகவோதான் கடன் பிறக்கிறது. ஆனால், காலம் செல்லச் செல்ல அது தன் உண்மையான கொடூர முகத்தைக் காட்டத் தொடங்குகிறது. கடன் வாங்கிய தருணத்தில் இருந்த தற்காலிக ஆறுதல் மறைந்து, வட்டியும் முதலும் ஆளையே விழுங்கும் அரக்கனாக உருவெடுக்கிறது. “கடன் வாங்காமல் வாழ்பவனே உலகின் மிகப்பெரிய செல்வந்தன்” என்று தத்துவஞானி சாக்ரடீஸ் அன்றே குறிப்பிட்டது இதனால்தான்.

மாதத்தின் முதல் தேதி சம்பளம் வரும்; ஆனால், நம் நினைவிற்கு வருவது குடும்பச் செலவு அல்ல; ‘யாருக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும்?’ என்பதுதான். வீட்டுக் கட்டணம், குழந்தையின் பள்ளிக் கட்டணம், மளிகைச் செலவு, மின்சாரக் கட்டணம் எல்லாவற்றிற்கும் முன்பாகக் கடன் காத்திருக்கிறது. சம்பளம் கைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே அது பல திசைகளில் பிரிந்து செல்கிறது. இறுதியில், உழைத்தவன் மட்டும் தனது வாழ்க்கைக்காக எதையும் வைத்துக்கொள்ள முடியாமல் வெறுங்கையோடு நிற்கிறான். உறவினர்களின் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத தயக்கம்; தெருவில் நடக்கும்போது ‘கடன் கொடுத்தவரைச் சந்திக்க நேருமோ?’ என்ற அச்சம்; நண்பர்களின் அழைப்புகளைத் தவிர்க்கும் நிலைமை என ஒரு மனிதரைச் சமூகத்திலிருந்தும், உறவு நிலைகளிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாகத் தனிமைப்படுத்துகிறது இந்த நிழல் சுமை.

கடன்பட்டவர் சந்திக்கும் மிகப்பெரிய சவால், வெளியே சிரித்துக்கொண்டு உள்ளே குமுறும் போலி வாழ்க்கைதான். பெற்ற பிள்ளைகளின் சிறிய ஆசைகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போகும்போது ஒரு தந்தைக்குள் ஏற்படும் குற்ற உணர்ச்சி அவருடைய சுயமரியாதையை அடியோடு தகர்க்கிறது. குழந்தை, ‘அப்பா, எனக்கும் அது வேண்டும்’ என்று கேட்கும்போது, ‘இப்போது முடியாது’ என்ற இரண்டு சொற்களுக்குள் ஒரு தந்தையின் எவ்வளவு வேதனை இருக்கிறது என்பதை அந்தக் குழந்தை அப்போது அறியாது. சில அம்மாக்கள் தங்கள் குடும்பத்தின் கடன் குறையவேண்டும் என்பதற்காகத் தங்களுடைய சிறிய ஆசைகளையே அவர்கள் நெஞ்சிற்குள் புதைத்து விடுகிறார்கள்.

சிலர் கடனை அடைப்பதற்காக உறவுகளை இழக்கிறார்கள்; சிலர் உறவுகளைப் பாதுகாக்க கடன் வாங்குகிறார்கள். ஒரு தந்தை தனது மகளின் திருமணத்திற்காகக் கடன் வாங்குகிறார். திருமணம் முடிந்து விடுகிறது. புகைப்படங்கள் வருகின்றன. உறவினர் பாராட்டிவிட்டுச் சென்று விடுகிறார்கள். ஆனால், திருமண மண்டபத்தின் விளக்குகள் அணைந்த பிறகு, அந்தத் தந்தையின் அறைக்குள் மற்றோர் இருண்ட வாழ்க்கை தொடங்குகிறது. மாதந்தோறும் தவணை, தவணைக்காகக் கூடுதல் வேலை, குறைந்த ஓய்வு, மன அழுத்தம், குடும்பத்தோடு குறைந்த உரையாடல் எனத் தொடர்கிறது. அதேபோல, மருத்துவமனை வாசலில் தொடங்கிய சில கடன்களுக்கு யாரைக் குற்றம் கூறுவது? நோய் வரும்போது பணத்தைப் பற்றிக் கணக்குப் போடமுடியுமா? அன்பான ஒருவரின் உயிரைக் காப்பாற்றவேண்டும் என்றால், பலர் தங்களிடம் இல்லாத பணத்தையும் கடனாகப் பெறுகிறார்கள். கடனையே வாங்க முடியாதவர்கள் நோயிலே இறக்கிறார்கள். கடன், ஆசையிலிருந்து பிறக்கவில்லை; தூய அன்பிலிருந்து பிறக்கிறது. ஆனால், கடன் வாங்கிய காரணம் எதுவாக இருந்தாலும், அதைச் சுமக்கும் மனிதரின் மனநிலையே இறுதியாகப் பலியாகிறது.

சமூகத்தின் புறக்கணிப்புதான் கடனின் மிகக் கொடூரமான வடிவம். நேற்று வரையிலும் மதிப்பிற்குரிய மனிதராகப் பார்க்கப்பட்ட ஒருவர், கடனில் மூழ்கியவுடன் சமூகத்தின் பார்வையிலேயே தாழ்ந்து போகிறார். நண்பர்கள் மெல்ல விலகத் தொடங்குகிறார்கள், உறவினரின் அலைப்பேசி அழைப்பை எடுப்பதைத் தவிர்க்கிறார்கள். ஒரு மனிதன் ஏழ்மையில் இருந்தால்கூடச் சமூகம் இரக்கப்படும். ஆனால், கடனாளி ஆகிவிட்டால் அவனைக் குற்றவாளியைப்போலப் பார்க்கத் தொடங்குகிறது. ‘இவன் சரியாகத் திட்டமிடவில்லை, வீண் ஆடம்பரம் செய்தான்’ என்று காரணங்களை அடுக்கி, அவனது உண்மையான துயரத்தை இந்த உலகம் மிக எளிதாகப் புறக்கணித்து விடுகிறது.

கடன் வாங்கிவிட்டு கட்ட முடியாமல் வீட்டை இழந்தவர்கள், உயிரை மாய்த்தவர்கள், அவமானப்பட்டு கூனிக்குறுகி நின்றவர்கள் - இவர்களின் வலிகளை இந்தச் சமூகம் இன்னமும் உணர மறுக்கிறது என்பதுதான் வலிமிகுந்த வேதனை. பணம் இல்லாததைவிட, உதவி கேட்க முடியாத நிலை அதிகமாக வலிக்கிறது.

ஒரு மனிதர் விழுந்தால் அவரைத் தூக்குவதற்குப் பல கைகள் தேவைப்படுவதில்லை, ‘பரவாயில்லை, நாம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லும் ஒரே ஒரு நம்பிக்கைக் குரல் போதும். ஆனால், கடன் சுமையில் இருக்கும் பலருக்கு அந்த ஒரு கரமும் குரலும் கிடைப்பதில்லை; மாறாக, ‘எப்படி இவ்வளவு கடன் வாங்கினாய்?’ என்ற கேள்வியே காயத்தின்மீது விரலை வைப்பதுபோல வந்து விழுகிறது. ஒவ்வொரு கடனுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. சில கதைகளில் முக்கியத் தேவைகள் இருக்கும்; சில கதைகளில் ஆசைகள் இருக்கும்; ஆனால், பல கதைகளில், நம்மால் கற்பனைக்கூட செய்யமுடியாத அளவிற்கு அன்பும் தியாகமும் இருக்கும். ஒவ்வொருவரும் ஓரளவு தேவையற்ற கடனில்லாத வாழ்வு வாழவேண்டுமெனில் அன்று ஒளவையார் அருளிய நல்வழி நம் நினைவுக்கு வரவேண்டும்:

‘உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்

எண்பது கோடி நினைந்து எண்ணுவன - கண்புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான்’ (நல்வழி 28).

நாம் உண்ணத் தேவை நாழி அரிசி சோறுதான்; உடுக்க நான்கு முழம்; ஆனால், நம் மனமோ பேராசையினால் எண்ணற்ற வீண் எண்ணங்களை எண்ணி அலைபாய்கிறது. அகக்கண் இல்லாமல் கிடைப்பதை வைத்து ‘போதும்’ என்ற மனநிலையில் வாழாமல், வாழும் மனிதரின் வாழ்க்கை உடையும் மண்பாண்டக் கலத்தைப்போல் எப்போதும் துன்பமே நிலைக்கும்.

வள்ளுவர் இன்னும் மிக அழகாகக் கூறுகிறார். ஒளிவு மறைவு இல்லாமல், மனம் மகிழ்ந்து பிறருக்குக் கொடுக்கும் இயல்பு உள்ளவரிடத்திலும் ஒன்றைக் கேட்காதிருப்பது கோடி நன்மையாகும்.

‘கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்’ (குறள் 1061)

“கடனில் வாழ்பவர், பிறரின் தயவில் மூச்சு விடுகிறார்” என்ற பெஞ்சமின் பிராங்களின் கூற்று, கடன்பட்டவரின் துயர வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது.

கடன் சுமையில் இருக்கும் ஒருவருக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய உதவி எப்போதும் பணமாக இருக்க வேண்டியதில்லை. ஓர் அன்புச் சொல், ஒரு நம்பிக்கையான வார்த்தை, ‘நீங்கள் தனியாக இல்லை’ என்று தோள் கொடுக்கும் மனிதநேயம் போதும். கடன் சுமையில் ஒருவர் இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டுவது அவ்வளவு எளிதல்ல; அதனால் கடன் வாங்கியவரை அவமானப்படுத்துவதற்கு முன், அவரது கதையைக் கேட்போம். அவர் தவறு செய்திருந்தால் தீர்வை நோக்கி அழைத்துச் செல்வோம்; நெருக்கடியில் இருந்தால் குற்றம் சுமத்தாமல் துணையாக நிற்போம்.

நிறைவாக, கடனை அடைப்பது என்பது பணத்தை மட்டும் திருப்பிக் கொடுப்பதல்ல; இழந்துபோன நம்முடைய நிம்மதியையும் சுய மரியாதையையும் மீண்டும் வாங்கிக்கொள்வதுதான். வாழ்க்கையின் மறுபக்கம் நமக்குக் கூறும் உண்மை இதுதான்! கடன் வைத்திருப்பவர் ஏழை என்று அவசரமாக முடிவு செய்யாதீர்கள். ஒருவேளை அவர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்; ஒரு குடும்பத்தைத் தாங்கியிருக்கலாம் அல்லது பிள்ளையின் கனவுக்காகத் தன் நிம்மதியைத் தியாகம் செய்திருக்கலாம். ஆனால்... கடன் பணத்தை மட்டும் சுமத்துவதில்லை; சில நேரங்களில் ஒரு மனிதர் யாருக்கும் தெரியாமல் அழும் கண்ணீரையும் சுமக்கிறது!