news-details
சிறப்புக்கட்டுரை
மனத்தின் முக்கோணம்: எண்ணம், உணர்வு, அறிவாற்றல் (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 12)

‘மனது என்றால் என்ன? அதன் மூன்று வடிவங்கள் என்னென்ன? என்பதைப் பற்றி சென்ற தொடரில் தெரிந்துகொண்டோம். மனிதனை மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக வேறுபடுத்துவது அவனது தோற்றமோ, திறமையோ மட்டுமல்ல; அவன் எப்படிச் சிந்திக்கிறான்? எப்படி உணர்கிறான்? எப்படிப் புரிந்துகொண்டு முடிவெடுக்கிறான்? என்பவையே அவனுடைய தனித்துவத்தை உருவாக்குகின்றன; இன்னும் சொல்லப்போனால் செதுக்குகின்றன.

இந்த வகையில், மனித மனத்தின் மூன்று முக்கியப் பரிமாணங்களாக எண்ணங்கள், உணர்வுகள், அறிவாற்றல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த மூன்றும் தனித்தனியாக இயங்குவது போலத் தோன்றினாலும், உண்மையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. நாம் நினைப்பது நமது உணர்வுகளை மாற்றுகிறது; உணர்வுகள் நமது முடிவுகளைப் பாதிக்கின்றன; அறிவாற்றல் அந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் ஆராய்ந்து, சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

எண்ணங்கள் - நம் வாழ்க்கையின் விதைகள்

ஒரு மனிதனின் செயல்களுக்கு முன்பாக அவனது எண்ணங்கள் உருவாகின்றன. ‘என்னால் முடியும்’ என்ற எண்ணமும், ‘என்னால் முடியாது’ என்ற எண்ணமும் ஒரே சூழ்நிலையில் இருக்கும் இரு மனிதர்களின் வாழ்க்கையை முற்றிலும் வேறுபடுத்தி விடும். நாம் ஒரு விசயத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதே நமது அணுகுமுறையை அளவிடுகிறது. தோல்வியை ஒருவர் முடிவாகப் பார்க்கலாம்; மற்றொருவர் அதை ஒரு பாடமாகப் பார்க்கலாம். நிகழ்வு ஒன்றுதான்; ஆனால், எண்ணம் மாறும்போது அதன் விளைவும் மாறுகிறது, அதன் முடிவும் மாறுகிறது.

நமது எண்ணங்கள் எவற்றின் அடிப்படையில் உருவாகின்றன? அனுபவங்கள், குடும்பம், கல்வி, நண்பர்கள், சமூகம், வாசிப்பு மற்றும் சூழல் போன்றவற்றால் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை மாற்றும் திறனும் நமக்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். எண்ணங்கள் விதைகள் என்றால், செயல்கள் அதன் கனிகள். எனவே, நமது தனித்துவத்தின் முதல் அடையாளம் நமது எண்ணங்களில்தான் தொடங்குகின்றது.

உணர்வுகள் - நம் மனிதத்தன்மையின் குரல்

அறிவு மட்டும் மனிதனை முழுமையான மனிதனாக மாற்றுவதில்லை; அன்பு, கோபம், மகிழ்ச்சி, பயம், இரக்கம், ஏமாற்றம், நம்பிக்கை போன்ற உணர்வுகள்தான் நமது மனிதத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. ஒரே சூழ்நிலையில் இருவர் முற்றிலும் வேறுபட்ட விதத்தில் செயல்படுவதற்கு அவர்களின் உணர்வுகள் முக்கியக் காரணமாக இருக்கலாம். ஒருவர் விமர்சனத்தைக் (குறைசுட்டல்) கேட்டவுடன் கோபப்படலாம்; மற்றொருவர் அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம்; இன்னொருவர் அதைக் கண்டும் காணாமல் கடந்து செல்லலாம்.

உணர்வுகளை அடக்குவது அவ்வளவு எளிதல்ல; ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் கண்டு, புரிந்துகொண்டு, முறையான முறையில் வெளிப்படுத்தி உணர்ச்சிகளைக் கையாள்வதே நல்ல பக்குவம்.

உணர்வுகள் நமது உறவுகளையும் தலைமைத்துவத்தையும் பெரிதும் பாதிக்கின்றன. பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் திறன் நம்மைச் சிறந்த நண்பராகவும் சக பணியாளராகவும் தலைவராகவும் மாற்றுகின்றது. அதனால், நமது தனித்துவத்தை உருவாக்குவதில் உணர்வுகள் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மேலும், நம்மை வெளிப்படுத்தும் கண்ணாடியாகச் செயல்படுகிறது.

‘எனது உணர்வுகளை மற்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று வலுக்கட்டாயமாகச் சட்டம் எல்லாம் போடமுடியாது. பிறர் உணர்வுகளை மதிக்கும் நிலைக்கு நம்மை நாமே உயர்த்திக்கொள்ளவேண்டும்.

அறிவாற்றல் - எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் வழிகாட்டி

எண்ணங்களும் உணர்வுகளும் நம்மை இயக்குகின்றன. ஆனால், அவற்றை எப்போது கேட்க வேண்டும்? எப்போது கட்டுப்படுத்தவேண்டும்? எதைத் தேர்ந்தெடுக்கவேண்டும்? என்பதை அறிவாற்றல்தான் வரையறுத்து முடிவு செய்கிறது. ஏதாவது இடையூறு அல்லது குழப்பம் ஏற்பட்டால், உடனடியாக உணர்ச்சிவயப்பட்டு முடிவெடுப்பது எளிது. ஆனால், சிறிது நேரம் நின்று, காரணத்தை ஆராய்ந்து, பல்வேறு கோணங்களில் சிந்தித்து முடிவெடுப்பது அறிவாற்றலின் வெளிப்பாடு.

அறிவாற்றல் என்பது வெறும் கல்வி மூலம் மட்டுமல்ல; கற்றுக்கொள்ளுதல், பகுத்தறிதல், பிரச்சினைகளைத் தீர்த்தல், புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுதல், அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுதல் ஆகிய அனைத்தும் அதில் அடங்கும். அறிவாற்றல் நமது எண்ணங்களுக்குத் திசையையும், உணர்வுகளுக்குச் சமநிலையையும் வழங்குகிறது. இந்த மூன்றும் இணைந்தால்தான் தனித்துவம் உருவாகிறது. இந்த மூன்று பரிமாணங்களையும் ஒரு வாகனத்துடன் ஒப்பிடலாம்.

ஒரு சிறுவன் ஒருநாள் தனது தந்தையுடன் நீண்ட பயணத்திற்குப் புறப்பட்டான். கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அந்தக் காரின் எந்திரம் (Engine) பெருமையுடன் கூறினது: “என்னால்தான் இந்தக் கார் முன்னோக்கி நகர்கிறது; நான் இல்லையென்றால் இந்தப் பயணமே தொடங்காது!”

அதைக் கேட்ட எரிபொருள் (Fuel) சிரித்துக்கொண்டே, “உனக்கு ஆற்றலைத் தருவது நான்தான்; நான் இல்லையென்றால் நீ இயங்கவே முடியாது!” என்றது.

அப்போது திசைமாற்றி (Steering) அமைதியாகப் பேசத் தொடங்கியது: “நீங்கள் இருவரும் முக்கியமானவர்கள்தான்; ஆனால், எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்பதை வழிநடத்துவது நான்தான்.”

அதற்குப் பக்கத்தில் இருந்த தடுப்பி (Break) கூறியது: “பாதையில் ஆபத்து வந்தால் வேகத்தைக் குறைத்து, சரியான நேரத்தில் வாகனத்தை நிறுத்துவதும் என் பொறுப்புதான்.”

மூவரும் தங்களுடைய முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது கார் ஒரு சாலைச் சந்திப்பை அடைந்தது. முன்னால் இரண்டு பாதைகள் இருந்தன. ஒரு பாதை வேகமானது; மற்றொன்று பாதுகாப்பானது.

எஞ்சின் வேகமாகச் செல்லத் தூண்டியது. எரிபொருள் அதற்குத் தேவையான ஆற்றலை வழங்கியது. ஆனால், திசைமாற்றி பாதுகாப்பான பாதையைத் தேர்ந்தெடுத்தது. ஆபத்தான வளைவு வந்தபோது தடுப்பி வேகத்தைக் குறைத்தது. சிறிது நேரத்தில் அவர்கள் எந்தத் தடையும் இன்றி தங்கள் இலக்கை அடைந்தனர். அப்போது சிறுவன் தந்தையிடம் கேட்டான்: “அப்பா, இந்தப் பயணத்தில் யார் மிகவும் முக்கியமானவர்?”

தந்தை புன்னகைத்துக் கூறினார்: “ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்க முடியாது. எஞ்சின் இல்லையென்றால் கார் நகராது; எரிபொருள் இல்லையென்றால் இயக்கம் இருக்காது; திசைமாற்றி இல்லையென்றால் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாது; தடுப்பி இல்லையென்றால் ஆபத்தில் நம்மைக் காப்பாற்ற முடியாது. இவை அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் பயணம் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் அமையும்.” மேலும் அவர் சொன்னார்: “மனித வாழ்க்கையும் இப்படித்தான்.”

எண்ணங்கள் நம்மை முன்னோக்கி இயக்கும் எஞ்சின் போன்றவை. உணர்வுகள் நமக்கு உந்துதலையும் ஆற்றலையும் வழங்கும் எரிபொருள் போன்றவை. அறிவாற்றல் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து, தேவையான நேரத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் திசைமாற்றியும் தடுப்பியும் போன்றது. எண்ணங்கள் மட்டும் இருந்தால் செயலுக்கான தொடக்கம் இருக்கலாம்; உணர்வுகள் மட்டும் இருந்தால் உந்துதல் இருக்கலாம்; அறிவாற்றல் மட்டும் இருந்தால் பகுத்தறிவு இருக்கலாம். ஆனால், எண்ணம், உணர்வு, அறிவாற்றல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று துணையாகவும் சமநிலையுடனும் செயல்படும்போதுதான், நம் வாழ்க்கைப் பயணம் அர்த்தமுள்ளதாகி, ஒரு முழுமையான ஆளுமை உருவாகிறது.

ஒரு பணியிடத்தில் மேலாளர் ஒருவர் நம்முடைய பணியை விமர்சிக்கிறார் என்று எடுத்துக்கொள்வோம். உடனே நம் மனத்தில், ‘அவர் என்னை மதிப்பதில்லை’ என்ற எண்ணம் தோன்றலாம். அந்த எண்ணம் கோபம் அல்லது வருத்தம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தலாம். ஆனால், அதே நேரத்தில் நம் அறிவாற்றல், ‘அவர் கூறிய கருத்தில் உண்மையாக ஏதேனும் இருக்கிறதா? என்னுடைய பணியில் நான் எதை மேம்படுத்தலாம்?’ என்று சிந்திக்கத் தூண்டும். இங்கு எண்ணமும் உணர்வும் உடனடி எதிர்வினையை உருவாக்கினாலும், அறிவாற்றல் அவற்றை ஆராய்ந்து, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டுகிறது. இவ்வாறு எண்ணம், உணர்வு, அறிவாற்றல் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்திச் செயல்படுவதுதான் முதிர்ச்சியான சிந்தனையின் வெளிப்பாடும், தனித்துவமான ஆளுமையின் அடையாளமுமாகும்.

நிறைவாக, ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்; ஏனெனில், ஒவ்வொருவரின் எண்ணங்களின் வரலாறும், உணர்வுகளின் அனுபவங்களும், அறிவாற்றலின் வளர்ச்சியும் வேறுபட்டவை. நாம் சந்திக்கும் மனிதர்களும் சூழ்நிலைகளும் நம்மைப் பாதிக்கலாம்; ஆனால், அவற்றை எவ்வாறு சிந்திக்கிறோம்? எவ்வாறு உணர்கிறோம்? எவ்வாறு பதிலளிக்கிறோம்? என்பதைத் தேர்ந்தெடுத்து வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பு நமக்கே உள்ளது. எனவே, எண்ணங்களைத் தூய்மைப்படுத்தி, உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அறிவாற்றலை வளர்த்துக்கொள்வோம். இந்த மூன்றையும் சமநிலைப்படுத்தி வாழும் மனிதன், மற்றவர்களைப் பின்பற்றி வாழ்வதில்லை; தனக்கெனத் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறான்.

‘உலகம் நம்மை எப்படிப் பார்க்கிறது என்பது முக்கியமல்ல; நம் மனத்தை நாம் எப்படி வடிவமைக்கிறோம் என்பதே, நாம் யார் என்பதைத் தீர்மானிக்கிறது.’