news-details
ஆன்மிகம்
பிரான்சிஸின் மரியன்னை பக்தி

நம் ஆண்டவரின் தாயான மரியா மீது அசிசியார் கொண்டிருந்த பக்தியும் பற்றுதலும் வியந்து போற்றும் வண்ணம் மிகவும் ஆழமானது.

செலானோ தாமஸ் பார்வையில்: இயேசுவின் தாய்மீது பிரான்சிஸ் கொண்டிருந்த அன்பைக் குறித்து  செலானோ தாமஸ், “அது வருணிக்க முடியாதது; ஏனெனில், அவரே மகத்துவம் மிகுந்த ஆண்டவரை நமது சகோதரர் ஆக்கினார்” என்கிறார். புனிதர் பிரான்சிஸ் மரியன்னையைப் புகழ்ந்து எழுதிய செபங்களையும் இறைப்புகழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டுகின்ற செலானோ, இவ்வுலகில் பிரான்சிஸ் தனது அனைத்துத் துறவறச் சகோதரத் துறவிகளையும் அன்னையின் பாதுகாவலில் ஒப்புக்கொடுத்து, அவரையே தன் சபையின் அடைக்கலமாக ஏற்றுக்கொண்டார் என்று பதிவுசெய்கிறார் .

பிரான்சிஸ் எழுதிய மரியன்னை வணக்கம்: பிரான்சிஸ் எழுதிய மரியன்னை வணக்கத்தில், ‘அன்னை மரியை விண்ணகத் தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்டு திருநிலைப்படுத்தப்பட்டவர்’ என்று குறிப்பிடுகிறார். ‘மாதே வாழ்க! தூய அரசியே! மரியே! கடவுளின் தூய மரியே! நீரே திரு அவையாய் விளங்கும் கன்னியும், விண்ணகத்தில் உள்ள அதிதூய தந்தையால் தேர்ந்துகொள்ளப்பட்டவரும் அவரது பிரியமுள்ள அதிதூய மகனுடனும் தேற்றரவாளரான தூய ஆவியானவருடனும் தந்தையால் திருநிலைப்படுத்தப்பட்டவரும் ஆவீர்!! உம்மில் நிறைவான அருள் அனைத்தும் நலன்கள் அனைத்தும் இருந்தன, இருக்கவும் செய்கின்றன. நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையற்ற நிலையிலிருந்து கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராய் மாறிட தூய ஆவியாரின் அருளாலும் ஒளியாலும் அவர்களது உள்ளங்களில் ஊற்றப்பட்ட அனைத்து தூய புண்ணியங்களே வாழ்க!’ என்று மரியாவை இறைவனின் அருளைப் பெற்றவராகவும், அவரது பிரசன்னத்தில் வாழ்பவராகவும் உருவகித்துப் போற்றுகிறார்.

பாடுகளின் கட்டளை செபத்தின் முன் மொழி: பிரான்சிஸ் எழுதிய செபத்தின் முன்மொழி: ‘தூய கன்னி மரியே! பெண்களுக்குள் உம்மைப் போல் பிறந்தவர் உலகத்தில் எவரும் இல்லை. அதி உன்னதரும், மேலான அரசரும், விண்ணகத் தந்தையுமானவரின் மகளும், பணிப்பெண்ணும் நீரே. மிகவும் தூய ஆண்டவரான இயேசு கிறிஸ்துவின் தாயும் நீரே. …மிகவும் தூய்மையான உமது அன்பார்ந்த மகனிடம் எங்களுக்காக மன்றாடும்’ என்று அமைகிறது.

போர்சியுங்குலா-வானதூதர்களின் அரசி ஆலயம்: இத்தாலியின் சுபாசியோ மலையில் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆசிர்வாதப்பர் சபைக்குச் சொந்தமான சிற்றாலயம் பிரான்சிஸின் இளமைக் காலத்தில் பழுதுபட்டிருந்தது. அது 1208-1209-களில் பிரான்சிஸால் புதுப்பிக்கப்பட்டது. பிரான்சிஸ் தனது தொடக்க காலத் துறவறச் சகோதரர்களுடன் இங்குதான் தங்கினார். இந்த இடம் ‘போர்சியுங்குலா வானதூதர்களின் அரசி ஆலயம்’ என அழைக்கப்பட்டது. இந்த இடம் வளரும் பக்திச் சுவாலக சபையின் தாய்வீடாகவும், எளிய துறவிகளின் அடைக்கலமாகவும், பாதுகாக்கும் அரியணையாகவும் இருந்தது.

போர்சியுங்குலா பரிபூரண பலன்: புனித பிரான்சிஸ் வானதூதர்களின் அரசி ஆலயத்தில் செபிக்கும்போது வானதூதர்கள் சூழ இயேசுவும் அவரது தாயும் காட்சி கொடுத்தனர். அவ்வேளையில் அன்னை மரியின் அரவணைப்பையும், நம் ஆண்டவரின் அருள் ஆசியையும் ஒருசேரப் பெற்று மகிழ்ந்தார். அந்த ஆன்மிக அனுபவத்தின் பொருட்டு, அதே அருள் பலன் அவ்வாலயத்தில்  வந்து  செபிக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென அசிசியார் விரும்பினார். எனவே, அப்போதைய திருத்தந்தை மூன்றாம் ஹொனோரியஸிடம் வேண்டுகோள் விடுத்து, இந்த ஆலயத்தில் வந்து செபிப்போருக்காகப் பரிபூரணப் பலனைப் பெற்று வந்தார். எனவே, இந்த ஆலயத்தைச் சந்தித்து, பாவங்களுக்கு மனம் வருந்தி, ஒப்புரவு அருளடையாளம் பெற்றுச் செபிப்பவர்களுக்குத் திருத்தந்தை வழங்கும் பரிபூரணப் பலன் எக்காலத்திற்கும் உரியது என்பது மரபாகும்.

பிரான்சிஸின் மரணம்: புனித பிரான்சிஸ் இறப்பதற்கு முன்னதாகத் தனது சகோதரார்களிடம் தன்னை போர்சியுங்குலா சிற்றாலயத்திற்குக் கொண்டு செல்லக்  கேட்டுகொண்டார். அங்கே சென்றதும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தன்னை வெறும் தரையில் கிடத்துமாறு கேட்டுக்கொண்டார். மனமாற்றத்தின்போது அந்த ஆலயத்தைப் புதுப்பித்து மகிழ்ந்தவர், அந்த அன்னையின் அரவணைப்பிலேயே அவ்வாலயத்தில் தனது சுவாசத்தை நிறுத்தினார். இவ்வாறு ஒரு குழந்தை தன் வாழ்வின் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் எவ்வாறு தன் தாயை அடிப்படையாகவும் ஆதாரமாகவும் கொண்டிருக்குமோ, அதுபோலவே அன்னை மரியாவோடு பிரான்சிஸ் தன் வாழ்வின் எல்லாச் சூழல்களிலும் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார்.