‘பற்றாக்குறை’ (Deficit) என்ற சொல் நம் குடும்பங்களில் மிகச் சாதாரணமாகப் புழங்கப் பெறும் சொல். நமது சட்டமன்றங்களில் அல்லது நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் நிதி அமைச்சர்களால் சமர்ப்பிக்கப்பெறும் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பெறுகையில் இவ்வார்த்தையைப் பயன்படுத்துவது உண்டு. பொதுவாக இந்திய அரசுகளின் நிதிநிலையின் நிலை பற்றாக்குறையாகவே இருப்பதாகவே பார்க்க முடியும். அரசுகளின் செலவு கணக்கைக் காட்டிலும் வரவுக் கணக்கு குறைவாகவே இருக்க இந்த நிதிநிலை அறிக்கையைப் ‘பற்றாக்குறை நிதிநிலை’ (Deficit Democracy) என்று அழைப்பதுண்டு.
நிதிநிலையில்
காணப்பெறும் பற்றாக்குறை பற்றி வெகுவாகக் கவலைகொள்ளும் நமது அரசுகள், பற்றாக்குறையைச் சரிசெய்ய புதிய பரிந்துரைகளைத் தரும் நம் பொருளாதார அறிஞர்கள், ஆளும் அரசுகளின் நிர்வாகத் திறனின்மையால் உருவானதாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், முதலீட்டைப் பெருக்க உலக நாடுகளின் பெருமுதலாளிகளைக் கூட்டி ‘எங்கள் அரசு அனைத்து உதவிகளையும் பாதுகாப்பையும் தரும்’ என்கிற அரசின் உறுதிமொழிகள், இவை போன்றதோர் உறுதிமொழிகள் அனைத்தும் பொய்த்துப் போகையில், ‘நானில்லை... நானில்லை’
என்று காட்டிக்கொள்ளத் தயாரிக்கப்பெறும் வெள்ளை அறிக்கை.
அரசுகள்
ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்பெறும் நிதிநிலை அறிக்கையின் நன்மை-தீமை பற்றி மக்களில் பலர் கவலைப்படுவதே இல்லை. அரசுப் பணியாளர்கள் பலர், ‘அரசு வரிச்சலுகைப் பற்றி ஏதேனும் செய்தி உண்டா?’ என்று கவலைப்படுவர். அரசுகள் தம் அறிக்கையில் இலவசங்கள் உள்ளனவா என்று கவலையோடு எதிர்பார்த்தலும் உண்டு. ஆனால், இன்றைய
மிதவாத அரசுகள் மக்களுக்கான நிலைத்த வளர்ச்சியைக் கருத்தில் கொள்வதில்லை என்பதிலும், ‘வளர்ச்சி’
என்ற பெயரில் முன்வைக்கும் உறுதிமொழிகளும் பொய்யானவை; மக்களுக்கானவை அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள முயலவும் இல்லை; அரசுகள் கவலைப்படவும் இல்லை. எனினும், ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்பெறும் நிதிநிலை அறிக்கை சடங்குத்தனமானது என்றாலும், சமர்ப்பிக்க வேண்டிய கடமையில் சனநாயகம் இருக்கிறது. சனநாயக அரசின் வெளிப்படைப் பண்பும், பதில் சொல்ல வேண்டிய கடமையும் உள்ளது என்பதையும் நாம் மறந்திடலாகாது.
நாட்டின்
நிதிநிலையில் (பட்ஜெட்டில்) துண்டு விழுந்துள்ளது; பற்றாக்குறையுள்ளது என்பது பற்றியெல்லாம் பெரிய அளவில் பிதற்றிக்கொள்வோர் எவரும் நிதிநிலை அறிக்கையைக் கட்டாயப்படுத்திய சனநாயகத்தின் பற்றாக்குறை பற்றிக் கவலை கொள்கிறோமா? அரசின் நிதிநிலையில் காணப்பெறும் பற்றாக்குறை பற்றிப் பேசுவது இக்கட்டுரையின் முதன்மை நோக்கமன்று.
கண்ணீர்
விட்டு வளர்த்த சுதந்திரத்தைப் பேணிக்காக்க இந்தியாவைச் சனநாயக குடியரசாக அறிவித்தோம். ‘சனநாயகம்’
எனும் பெரு விழுமியம் சிதையாமல் காக்கப்பெற இந்தியாவின் அடையாளமாக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினோம்; சட்டங்கள் உரிய நோக்கில் காக்கப்பெறவும் காத்தலைக் கண்காணிக்கவும் சனநாயகப் பாதுகாப்பு நிறுவனங்களை நிறுவினோம்; நிறுவனங்கள் சறுக்கியபோதெல்லாம் கேள்வி கேட்க மனித உரிமை ஆணையங்களை அமைத்தோம். இவையனைத்தும் சனநாயகம் எனும் தூணைக் காத்தனவா? சனநாயகம் எனும் தூண் சிதிலப்படும்போதெல்லாம் தாங்கி நிறுத்த வேண்டிய அரண்கள் என்னவாயின?
காலஞ்சென்ற
அரசியல் அறிஞர் ஒருவரின் கூற்று இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கலாம்; அவர் கூறினார்: “இன்று நம் நாட்டில் காணப்பெறும் பற்றாக்குறையென்பது நிதிநிலை (Budget)
அறிக்கையில் மட்டுமில்லை; சமூக நீதியைக் (Social Justice) காத்தலிலும் இல்லை என்பதோடு, சனநாயகத்தைப் பேணிக் காத்தலிலும் (Deficit Democracy) மிகப்பெரிய பற்றாக்குறை உள்ளது.” இந்த விமர்சனம் என்னுள் ஏற்படுத்திய அதிர்வே இக்கட்டுரையை எழுதக் காரணமாயிற்று.
சுதந்திரம்
பெற்ற இந்தியாவைச் சனநாயக அரசாக, சமயச்சார்பற்ற குடியரசாக அறிவித்த தேசியத் தலைவர்களைப் போற்றுகின்ற வேளை, தேசியமே உருப்பெறா தேசங்களின் நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய தேசியத்தைக் கட்ட முயன்றவேளை, மற்றோர் எதிர்சக்தி இம்முடிவைத் தகர்க்க முனைந்தது. இந்திய விடுதலைப் போரில் துளியளவு பங்குகூட பெறா ஓர் அமைப்பு, இந்தியச் சுதந்திரத்தையே நம்பாத ஓர் அமைப்பு, சுதந்திரம் பெற்ற பின் அறிவிக்கப்பெற்ற சனநாயகத்தில் நம்பிக்கையற்ற ஓர் அமைப்பு, இந்தியச் சனநாயகத்தைக் காக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தியச் அரசமைப்புச் சட்டத்தை இந்துகளுக்கு (Hindu)
எதிரானது என்று ஓங்கி உரத்தக் குரலில் பேசிய ஒரு கூட்டத்தின் கையில் இந்தியச் சனநாயக அரசு சிக்கியுள்ள சூழல்.
கடந்த
எண்பது ஆண்டுகளாகியும் ஏன் சனநாயகம் எனும் மரம் ஆழமாக வேரூன்றவில்லை? சனநாயகத்தை உளமார நம்பிய நம் தேசியத் தலைவர்களின் கனவு ஏன் நனவாகவில்லை? எங்கே தவறு நடந்தது? இந்திய மண்ணில் பாதுகாப்பு அரண்களோடு கட்டப்பட்ட சனநாயக அரசு, சனநாயகத்திற்கு எதிரான வகுப்புவாத பாசிஸ்டுகளிடம் (Communal fascist – நன்றி - அமர்த்தியா சென்) சிக்கித் திணறுவது எதனால்? எப்படி? சனநாயகம் எனும் பெருவிழுமியம் இம்மண்ணின் கலாச்சாரமாய் மாற மறுப்பது ஏனோ?
இந்தியாவில்
1951 - 52 நடைபெற்ற பொதுத் தேர்தல், மிகப்பெரிய வகுப்புவாதக் கலவரத்தால் மக்கள் பிளவுபட்டிருந்த காலத்தில் நடத்தப்பெற்றது. இலட்சக்கணக்கான மக்கள் மதவெறியால் கொல்லப்பட்டிருந்த காலம். வகுப்புக் கலவரத்தை ஆதாரமாக்கி, மக்களைப் பிரித்து ஆட்சியைப்பெற பெரும்பான்மை மதவாதிகள் எழுச்சிப்பெற்ற காலம் என்ன நடந்தது?
“ஒரு நல்ல விசயம் இத்தேர்தல் மூலம் நடந்தேறியது. நாம் நேரடியாகச் சந்தித்த வகுப்புவாதச் சக்திகள் தோற்றுப்போயிற்று. நாம் எக்காலத்திலும் வகுப்புவாதிகளைக் கண்டு அஞ்சுதல் கூடாது. நாம் அவர்களோடு சமரசம் செய்தல் கூடாது. அச்சக்திகளோடு நேரடியாக மோதுவோம்; அப்படியாயின் நாம் வெற்றி பெறுவோம். நாம் எப்போது சமரசம் செய்கிறோமோ அப்போதே தோற்றுவிடுவோம். ஒரு கருத்தியல் ரீதியான யுத்தத்தை அரசின் அதிகாரப் பலத்தோடு வகுப்புவாதத்தை வீழ்த்த நாம் நடத்த வேண்டும். வகுப்புவாதம் எனும் நச்சு (Poison) இம்மண்ணில் ஆழமாக வேரூன்றியுள்ளது. மீண்டும் இந்நச்சு தலை எடுக்கா வகையில் களையப்பட வேண்டும்.”
- சவகர்லால் நேரு
‘Nehrus INDIA’ - Aditya
Mukerjee, PXIX. Preface.
முதல்
தேர்தலில் சனநாயகச் சக்திகளுக்கு எதிரான வகுப்புவாதச் சக்திகளை வெற்றி கண்ட நேரு, இன்று உயிரோடிருந்தால் என்ன சொல்வார்? “வகுப்புவாத நச்சினை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்த்திட முயன்ற நேரு எங்கே? இன்றைய இந்துத்துவ விசுவாசிகளாக மாறியோர் எங்கே? 1952-இல் வகுப்புவாதத்தை வென்றோம் என்ற வெற்றி முழக்கத்திற்குப் பின்னால் இன்று நடப்பதென்ன?”
பற்றாக்குறையின்
பன்முக
வடிவங்கள்
இன்று
இந்தியா மிகப்பெரிய திக்குமுக்காடலில் சிக்கியுள்ளது. சனநாயக அரசியலின் மிக முக்கியத் தேர்தல் முறை கேவலப்படுத்தப்பட்டுள்ளது. இக்கேவலப்படுத்தும் முறை சனநாயகத்திற்கு மட்டுமல்ல; சனநாயக அரசுக்கு எதிரானது மட்டுமல்ல; இந்நாட்டிற்கே எதிரானது (Treason
against India) என்று
கவலைகொள்கின்றனர். இந்திய சனநாயகத்திற்கு, இந்திய நாட்டிற்கு எதிரான ஒரு நடவடிக்கை எப்படி சனநாயகத்திற்கு ஆதரவாக இருக்க முடியும்? இன்று நாடு முழுவதும் எழுப்பப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல், வெறும் வாக்காளர் தொடர்பான பிரச்சினை அல்ல; இது அடிப்படையில் குடிமக்களின் (Franchise) அடிப்படைப்
பிரச்சினை; சனநாயகத்தில் நம்பிக்கையற்ற ஒரு கட்சி இதைத்தான் செய்யும் என்பதில் என்ன சந்தேகம்? இந்நாட்டின் மக்கள்தொகையில் 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது வெறும் எண்ணிக்கையல்ல! சனநாயகம் எவரையும் ஒதுக்காது; எவரையும் ஒடுக்காது; சனநாயகம் பன்மையை நம்புவது; பாகுபாடும் ஒதுக்கலும் இதன் எதிரிகள். 13 கோடிகள் யார்? ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட இக்குடி மக்கள் யார்? சனநாயகம் வேரூன்ற இத்தனை காலம் செலவிடப்பட்ட இக்கால இடைவெளியில், சனநாயகம் ஏன் பற்றாக்குறையானது?
தாய் தமிழ்நாட்டில்
நடப்பது
என்ன?
தேர்தல்
சனநாயகத்தின் மிக முக்கிய அங்கம், குடிமக்களின் தெரிவுசெய்யும் உரிமையை நிலைநாட்டும் உன்னத நடைமுறை. குடிமக்கள் வழங்கிய அதிகாரத்தை மாற்றும் எந்த முயற்சியும் அநாகரிக, அசிங்கமான நடைமுறையே. தேர்தல் முடிந்த இரண்டு மாதங்களுக்குள், கட்சி மாறி வாக்கு கேட்கும் ஓர் அசிங்க சூழல், சனநாயகப் பற்றாக்குறையைத்தான் வெளிப்படையாகக் காட்டுகிறது. வெறும் தேர்தல் தரும் பதவி சுகத்திற்காகக் கட்சி மாறும் இப்போக்கை, சனநாயகம் தரும் தேர்தல் வழிகாட்டுவது, ஒரு காட்டிக்கொடுக்கும் செயலாகும். இங்கு தேர்தல் நடக்கலாம்; தேர்தல் முறை இருக்கலாம்; இங்கு சாகடிக்கப்பட்டது சனநாயகமே. சனநாயகத்தை அவமதிக்கும் இச்செயலுக்குத் தலைமையேற்கும் ஒருவர் மாநில முதல்வராயிருக்க, அவரே தொகுதி முழுவதும் வெட்கமின்றிப் பரப்புரை செய்கிறார்: சனநாயக மரபை மீறிய வேட்பாளர்களும் உடனிருக்க இக்கேவலம் அரங்கேறுகிறது. குடிமக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பாத நிலை எதைக் காட்டுகிறது? பற்றாக்குறை சனநாயகம் இங்கே உறுதியாகிறது.
சனநாயகம்
என்பது ஓர் அரசமைப்பின் வடிவம் மட்டுமல்ல; இது ஒரு மாண்பு காக்கும் மானுட மதிப்பீடு; குடிகளை குடிமக்களாக்கிய ஓர் உன்னதத் தத்துவம். இந்தியா ஏற்றுக்கொண்ட அரசியல் சனநாயகம், தேர்தல் சனநாயகத்தால் குடிமக்களைச் சமமாகப் பார்க்கிறது; ஆனால், சமூக சனநாயகம் சாத்தியமாகாத வரை உண்மை சனநாயகம் சாத்தியமில்லை என்பார் அண்ணல் அம்பேத்கர். தேர்தல் வழியான அரசியல் சமத்துவம் கூட, இன்றைய ஒதுக்கும் அரசியலில் சாத்தியமில்லை என்பதை அண்மையில் வாக்குத் திருட்டு மூலம் ஒதுக்கப்பட்ட 13 கோடி வாக்காளர்களே சாட்சியம்! வாழிடத்தில், சமூக உறவுகளில், திரு அவையின் போக்குகளில், குடும்ப அமைப்பில் சனநாயகச் சூழலை வளர்த்தெடுக்க முயல்வோம். முழுமையான சனநாயகக் காப்பைக் கட்டாய நிபந்தனை ஆக்குவோம்.