news-details
தலையங்கம்
அமைதிக்கான நோபல் பரிசு: சமூக நீதிக்கான குரலின் உலகளாவிய அங்கீகாரம்!

உலகளாவிய நெறிமுறைகளும், அவற்றைத் தரும் சட்ட நிறுவனங்களும் புவிசார் அரசியல் சூழ்ச்சிகளால் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இக்காலகட்டத்தில், நார்வே நோபல் குழு அறிவித்துள்ள 2026-ஆம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற 85 வயதான தமிழ் வழியிலான சட்ட வல்லுநர் நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த உயரிய அங்கீகாரம், தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பிற்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல; மாறாக, உலகளாவிய மனித உரிமைகள், பன்னாட்டுச் சட்டம் மற்றும் நீதியை மையமாகக் கொண்ட ஒழுங்கமைப்பிற்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

டர்பன் நகரில் இனவெறி (அபார்தீட்) ஆட்சியின் கொடூரமான காலகட்டத்தில் பிறந்த நவி பிள்ளை, தொடக்கம் முதலே அடக்குமுறைகளுக்கு அஞ்சாத ஒரு தீரமிக்க போராளியாகவே உருவெடுத்தார். இவர் நீதியின் களத்தில் உருவான புயல். 1967-ஆம் ஆண்டில் நாட்டால் மாகாணத்தில் வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கிய முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.

நெல்சன் மண்டேலா போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காகவும், அரசியல் ரீதியாகத் தடுத்து வைக்கப்பட்டவர்களுக்காகவும் நீதிமன்றங்களில் நெஞ்சுரத்தோடு வாதாடினார். கறுப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பில், தன் சட்ட அறிவையும் நெறிமுறை நேர்மையையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு களமிறங்கினார். பின்னாளில் தென் ஆப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் கறுப்பினப் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டது, நிறுவனமயமாக்கப்பட்ட ஒடுக்கு முறைகளுக்கு இவர் அளித்த தக்க பதிலடியாகும்.

ருவாண்டாவிற்கான பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராக நவி பிள்ளை பணியாற்றிய காலம், உலகச் சட்ட வரலாற்றில் ஒரு பொற்காலமாகும். போர்க்காலங்களில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளையும் வன்கொடுமைகளையும் வெறும் உபாதைகளாகப் பார்க்காமல், அது ‘இனப்படுகொலையின் ஒரு கூறு’(Act of Genocide) என்று இவர் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு,  உலகக் குற்றவியல் சட்டத்தின் திசையையே நிரந்தரமாக மாற்றியமைத்தது.

ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர், உலகக் குற்றவியல் நீதிமன்றம் (ICC) மற்றும் உலக நீதிமன்றம் (ICJ) ஆகியவற்றில் இவர் ஆற்றிய பணிகள் அனைத்தும் ஒரே கொள்கையைத் தெளிவாகப் பறைசாற்றின. அதாவது, “நாடுகளின் பரப்பளவு, பொருளாதாரம் அல்லது இராணுவ பலம் எதுவாக இருப்பினும், பன்னாட்டுச் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்தவேண்டும்” என்றே முழங்கிவந்தார்.

எதிர்பார்க்கப்பட்டபடியே, இந்த உயரிய அங்கீகாரம் சில அரசியல் அதிகார மையங்களிடமிருந்தும் குறிப்பாக, இஸ்ரேலிய அரசிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பையும் விமர்சனங்களையும் தூண்டியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் காசாவில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. ஆணையத்தின் தலைவராக நவி பிள்ளை பணியாற்றியதைச் சுட்டிக்காட்டி, இந்தப் பரிசை ‘அரசியல் ஆயுதமாக்கல்’ என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுகள் நவி பிள்ளையின் பத்தாண்டுகால நடுநிலையான சாதனைகளுக்கு முன்னால் அடியோடு சரிந்து விழுகின்றன. ருவாண்டா முதல் மியான்மர் வரை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட எவரையும் இவர் தப்பவிட்டதில்லை. 2009, மே மாதத்தில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, அரசு மற்றும் போராளிகள் என இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை உலக மன்றத்தின் கவனத்திற்கு அஞ்சாமல் கொண்டு சென்றவர் நவி பிள்ளை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, ஜெனிவா உடன்படிக்கைகளின் தர நிலைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட ஒரு சட்டப் போராளியின் மீது அரசியல் முத்திரை குத்துவது, உலகளாவிய நீதி என்ற கருத்தாக்கத்தையே நிரந்தரமாக நிராகரிப்பதாகும்.

நவி பிள்ளை, ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கை நட்சத்திரம்; குரலற்றவர்களின் குரல்; முகமற்றவர்களின் முகம். இவருடைய ஐம்பதாண்டு காலச் சட்டப் பயணம் என்பது வெறும் பதவிகளாலும் தீர்ப்புகளாலும் மட்டுமே அளவிடக்கூடியதன்று; அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், எளிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக, அவர்களின் உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற நேர்மையே இவரது அடையாளமாகும்.

உலகளாவிய அமைப்புகள் மற்றும் ஐ.நா. மன்றங்களின் மிக உயரிய பதவிகளை வகித்தபோதிலும், எளிய மக்களின் துயரங்களையும், அமைதிக்கான ஏங்கல்களையும் இவர் ஒருபோதும் மறந்ததில்லை.

‘அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பது ஆபத்தானது’ என்று கருதப்படும் உலகளாவியச் சூழலில், சட்டப்பூர்வமான வழிகளில் நீதியை வென்றெடுக்க முடியும் என்பதற்கு நவி பிள்ளை ஒரு நற்சான்றாகத் திகழ்கிறார். உலகின் முன்னணி அரசியல் தலைவர்கள் பலரும் பொறுப்புக்கூறலிலிருந்து தப்ப முயலும் வேளையில், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் துணிச்சல் இவருக்கு மட்டுமே இருந்தது.

இந்த அமைதிப் பரிசு, அரசுகளின் அடக்குமுறையையும் வன்முறையையும் எதிர்கொண்டு போராடும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மனித உரிமைப் போராளிகளுக்கு அளிக்கப்பட்ட பெரும் ஊக்கமும் கௌரவமுமாகும்.

அதிகார பலம் கொண்ட நாடுகள்  உலகச் சட்டங்களை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் தற்போதைய சூழலில், நார்வே நோபல் குழு சரியான நேரத்தில், சரியான செய்தியை உலகிற்குத் தந்துள்ளது. ‘அதிகாரம் உள்ளவனின் விருப்பமே சட்டம்’ என்ற நிலையை மாற்றி, ‘சட்டத்தின் ஆட்சியே நீதியை உறுதிப்படுத்தும்’ என்பதை நவி பிள்ளையின் வாழ்வு மீண்டும் நிலை நிறுத்தியுள்ளது.

நீதியும் மனித கண்ணியமும் பேணப்படாத எந்தவோர் உலகிலும் அமைதி நிலைக்க முடியாது. ஆகவே, அமைதியின் கூறுகளை உலகெங்கிலும் விதைக்க மனத்தில் உறுதிகொண்டு, உண்மையின் வழி கண்டு, உள்ளத்தில் நீதி கொண்டு வாழ்ந்த நவி பிள்ளையின் வாழ்நாள் சேவையின் ஒளியை எவராலும் சிறிதும் குறைத்துவிட முடியவில்லை. இவரோ உலகோர் நெஞ்சங்களில் இன்று நீக்கமற நிறைந்திருக்கிறார்.

இதையே ஐயன் வள்ளுவர்,

‘உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்’ (குறள் 294)

என்கிறார். ஆகவே, உலகளாவியச் சட்டத்தின் உண்மையான பாதுகாவலராகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரத்தக் குரலாகவும் திகழும் நவி பிள்ளையுடன் ஒட்டுமொத்த உலகமும் துணை நிற்கிறது என்பதன் பெரும் அடையாளமே இந்த அமைதிக்கான நோபல் பரிசு!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்