மனித வாழ்க்கையில் என்றுதான் முடியும் இந்தப் போராட்டம்? அன்று விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் தொடங்கிய போராட்டம், இன்று சொந்தக் கல்விக்காகப் போராடும் அவலநிலையில் உள்ளது.
“நான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன்; பெண்களுக்குப் பாதுகாப்பு தருவேன்\" என்று முழக்கமிட்டவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தவறு
செய்தவனைத் தண்டனை என்ற பெயரில் சிறையில் அடைத்து, மூன்று வேளை உணவளித்து, பாதுகாக்கும் நிலைமை நம்மிடம்தான் உள்ளது. ஆனால், பாதிக்கப்பட்டவனோ தெருவில் இறங்கி நீதிக்காகப் போராடுகிறான். என்று மாறும் இந்த அவலநிலை?
அன்று
ஆங்கிலேயரிடம் அகிம்சை வழியில் போராடி விடுதலை பெற்றோம். இன்று பெற்ற விடுதலையைக் காக்கவே போராடுகிறோம். ‘இளைஞர்களே நாட்டின் கண்கள்’ என்று மேடைகளிலும் வாய்மொழியிலும் மட்டும் புகழ்கிறோம். ஆனால், அவர்கள் நீதிக்காகக் குரல் கொடுத்தால், அவர்களை அந்நியர்களைப் போல நடத்துகிறோம்.
எப்படியோ
பணத்தைச் சேர்த்து தன் பிள்ளையின் கல்விக்காகச் செலவு செய்யும் பெற்றோரும், பெற்றோரின் வியர்வையை உணர்ந்து தன் கனவை நோக்கி வெற்றிநடைபோடும் இளைஞரும் இந்த நாட்டில் ஏராளம். ஆனால், அவர்களை அவமதித்து ஒதுக்கும் நிலை உருவாகியுள்ளது.
கனவுகளை
விதைக்கவேண்டும் என்ற நாட்டில், கனவுகளையே கலைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இளைஞரின் வேலைவாய்ப்பை மறுப்பதும், கல்வியை வணிகமாக மாற்றுவதும், மக்களின் குரலை அடக்குவதும், சமயத்தின் பெயரில் சகோதரத்துவத்தைச் சீர்குலைப்பதும் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது.
பல
கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் சுதந்திரமாக நடமாட, பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கிய ஏழை மட்டும் சட்டத்தின் கடுமையை அனுபவிக்கிறான். அயல்நாடுகளுடன் வர்த்தகம் செய்வது மட்டும் வளர்ச்சி அல்ல; ஒவ்வோர் இளைஞனுக்கும் உரிமையோடு கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைப்பதுதான் உண்மையான வளர்ச்சி. மக்கள்தொகையில் முதலிடம் பெற்றோம் என்று பெருமைப்படுவதைவிட, பெண்கள் பாதுகாப்பாக வாழும் நாட்டை உருவாக்குவதுதான் பெருமை. உயிரைக் காப்பது மருத்துவம்; ஆனால், மருத்துவக் கல்வியே ஊழலின் நிழலில் சிக்கிவிட்டது.
காலத்தைக்
கரைத்து படித்தும் எழுதியும் தேர்வெழுதிய மாணவர்களிடம், ‘இது செல்லாது’
என்று கூறி எத்தனை கனவுகளை இந்த அரசு சிதைத்தது? தவறைச் சுட்டிக்காட்டினால் தண்டனை; இது நியாயமற்ற அரசியல். உரிமைக்காகக் குரல் கொடுத்தவர்களின் உயிரைப் பறிக்கும் நிலை சனநாயகத்திற்கு அவமானம்.
இந்திய
விடுதலைப் போராட்டம் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரை பல வரலாற்றுப் போராட்டங்களுக்குத்
தலைமை தாங்கிய தமிழ்நாடு இன்று ஏன் மௌனம் காக்கிறது? வடக்கில் மாணவர்கள் கல்விக்காகப் போராட, தமிழ்நாடு பட டிக்கெட்டுக்காக மட்டுமே அலைமோதும்
நிலை மாற வேண்டாமா?
‘ஊழலை ஒழிப்பேன்’
என்று கூறிவிட்டு, ஊழல் செய்தவர்களையே அமைச்சராக்கி ஆளும் அரசியல் எந்த நீதியைப் பேசுகிறது? சனநாயகம் சீர்குலையும் வேளையில் அதைக் காக்க முன்வராமல், ஏசி திரையரங்குகளில் ‘சனநாயகன்’
திரைப்படத்தைப்
பார்ப்பது மட்டும் போதுமா? திரைப்பட வசூலுக்காக அமைதியை ஆடையாக அணிவது சரியா?
என்றுதான்
எழப்போகிறோம்? போதும்! ஆண்டதும் போதும்! மாண்டதும் போதும்! மீண்டும் ஒரு சுதந்திரப் போர் வேண்டாம். இளைஞர்களே, பார்வையாளனாக அல்ல; மாற்றத்தை உருவாக்குபவனாக எழுந்து வாருங்கள். நாடு உங்கள் குரலுக்காகக் காத்திருக்கிறது. அன்று ஜல்லிக்கட்டை மீட்ட உங்கள் குரல், இன்று கல்வியையும் நீதியையும் மீட்டெடுக்கட்டும்! எழுந்து வா... எல்லாம் மாறும்! துணிந்து வா... தடைகளும் மடைகளாக மாறும்! புதிய சமுதாயத்தின் எழுச்சி நமது கைகளில்தான்!