news-details
சிறப்புக்கட்டுரை
எண்மத் தொழில்நுட்ப உலகில் மனித மாண்பினைப் பேணும் அச்சு ஊடகம்

எங்கும் ஓயாத இரைச்சல் மிகுந்த ஓர் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான எண்மத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) அறிவிப்புகள் நமது அலைப்பேசித் திரைகளில் மின்னுகின்றன. திடுக்கிடும் செய்திகளும், வைரல் காணொளிகளும், அவசரச் செய்தி எச்சரிக்கைகளும் சமூக ஊடகப் பக்கங்களில் தொடர்ச்சியாகச் சுருண்டோடிக் கொண்டே இருக்கின்றன. இந்த நவீனத் தகவல் பெருவெள்ளத்தில், இளைய தலைமுறை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகமும் திசைமாறித் திகைத்து நிற்கிறது. ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்டு எங்கோ கரை ஒதுங்கி, விழிபிதுங்கி நிற்கும் சூழ்நிலைபோல இருக்கிறது.

இணையத் தொடர்பு கொண்ட(டு) ஒவ்வொருவராலும் தங்களின் கருத்துகளை அகிலமெங்கும் பரப்ப முடிகிறது. ஆனால், இத்தனை இரைச்சல்களுக்கும் மத்தியில், எது உண்மை? எது போலி? நமக்கு உண்மையை உரைப்பது யார்? என்ற அடிப்படைக் கேள்விகள் எழுகின்றன.

இத்தகைய சூழலில்தான், இவ்வினாக்களுக்குச் சரியான விடையளிக்க, அச்சு ஊடகவியலின் உண்மையான தன்மையும் நோக்கமும் ஒளியை நோக்கித் தன் பாதங்களை எடுத்து வைக்கிறது. இன்று, செய்தி அறைகள், நிர்ணயக் கணக்கீடுகளால் (Algorithms) இயக்கப்படும் ஒரு நிலப் பரப்புகளாக உருமாறி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு (AI) ஒருசில விநாடிகளிலேயே கட்டுரைகளைத் தருகிறது; ஈர்ப்பு மிகுந்த அதிகக் கவனம் பெரும் தலைப்புகளைச் செய்திகளை, உள்ளடக்கங்களை (Content) உருவாக்குகிறது. மேலும், எந்தவொரு மனித நிருபராலும் ஈடு கொடுக்க முடியாத அளவிற்குத் தரவுகளை ஒருங்கிணைத்துத் தொகுக்கிறது. ஆயினும்கூட, இந்தத் திறன்மிகு பகட்டான போர்வையின்கீழ், ஓர் ஆழமான நெருக்கடிநிலை மறைந்துள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.

பொதுமக்களுக்கான பொறுப்புக்கூறலின் காவலன் என்றும், குடிமக்கள் சமூகத்தின்நான்காம் தூண்என்றும் அழைக்கப்படும் ஊடகம், இன்று ஓர் ஆபத்தான இருதலைக் கொள்ளி நோயில் சிக்கியுள்ளது. ஒன்று, எண்மத் தொழில்நுட்ப சந்தையின் வேகம்; மற்றொன்று, போலியான செய்திகள் மற்றும் காணொளிகளின் அதிவேகப் பரவல். எண்மத் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு அதை அதிவேகமாக வழங்குகிறது; அது பல வேளைகளில் பேரதிர்ச்சியையும் தருகிறது. எந்தத் தகவல் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும், எது புதைக்கப்படவேண்டும் என்பதை நிர்ணயக் கணக்கீடுகள் தீர்மானிக்கும்போது, ஊடகத்துறை எவ்வாறு தனது மேன்மையான அழைப்பிற்கு உண்மையாக இருக்க முடியும்? என்ற கேள்வியும் தவிர்க்க இயலாததே. இதற்கான விடை மிகவும் எளிமையானது; எவ்விதச் சமரசத்திற்கும் இடமில்லாதது. அதாவது, மனிதநேயம், மானுட மாண்பு மற்றும் உண்மை ஆகிய மாறாத முக்கூறுகளை அது உறுதியாகப் பற்றிக்கொள்வதே அதன் முக்கியக் காரணமாகும்.

உண்மை நம்மை விடுவிக்கும்

ஊடகவியலின் உண்மையான உள்ளுணர்வை நாம் புரிந்துகொள்ள வேண்டுமாயின், ஒரு சமூக ஊடகவியலாளரிடமிருந்தோ (Influencer) அல்லது மக்கள் தொடர்பு அதிகாரியிடமிருந்தோ (PRO - Spokesperson) ஓர் உண்மையான செய்தியாளரை வேறுபடுத்துவது எது? என்பதை நாம் கண்டுணர வேண்டும். ஒரு சமூக ஊடகவியலாளர் உங்களின் கவனத்தை ஈர்க்க விழைகிறார்; ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி ஒரு குறிப்பிட்ட பிம்பத்தைப் பாதுகாக்க முனைகிறார்; ஆனால், ஒரு செய்தியாளர் எவ்விதப் பூச்சும் சமரசமும் இல்லாத உண்மைத் தரவுகளை வழங்க விரும்புகிறார்.

குடிமக்கள் சுதந்திரமாகவும், தங்களைத் தாங்களே ஆளக்கூடிய தகுதியோடும் வாழ்வதற்குத் தேவையான துல்லியமான, சரியான தரவுகளை வழங்குவதே ஊடகவியலின் முதன்மைக் குறிக்கோளாகும். முகப்பு விளக்குகள் (Headlights) ஏதுமின்றி, காரிருள் சூழ்ந்த இரவில் வளைந்து நெளிந்து செல்லும் ஒரு மலைப்பாதையில் காரைச் செலுத்த முயல்வதைக் கற்பனை செய்து பாருங்கள்; ஊடகமும் இதழியலும் இல்லாத வாழ்க்கை அத்தகையதாகவே இருக்கும். நாம் வாழும் பகுதியின் குடிநீர் பாதுகாப்பானதா? நமது வரிப் பணம் எவ்வாறு செலவிடப்படுகிறது? அல்லது நமது பெயரால் என்ன சட்டங்கள் இயற்றப்படுகின்றன? என்பது நமக்குத் தெரியாமலேயே போய்விடும். ஊடகங்களே அந்த முகப்பு விளக்குகளை நமக்கு வழங்குகிறது. அது சமுதாயத்தின் இருண்ட மூலைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

உலகத்தின் கண்ணாகவும் செவியாகவும் திகழ்தல்

இந்த உலகத்திலேயே மிக சக்தி வாய்ந்த அமைப்பு ஊடகம்தான். நிரபராதியைக் குற்றவாளியாக்கவும், குற்றவாளியைப் புனிதனாக்கவும் கூடிய வல்லமை ஊடகத்திற்கு உண்டு. ஏனெனில், மக்கள் திரளின் சிந்தனையைத் தீர்மானிக்கும் அதிகாரம் அவற்றிடமே உள்ளதுஎன்கிறார் அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகத் துணிந்து குரல் கொடுத்த மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் (Malcolm X). ஆகவே, அதிகார வர்க்கத்தின் பக்கம் நிற்பது பத்திரிகைத் தர்மம் அல்ல; உண்மையின் பக்கம் நிற்பது மட்டுமே ஊடகத்துறையின் கடமை. உண்மை செத்துப்போனால் பத்திரிகைத் துறையும் மடிந்துவிடும்.

இதழியலின் (ஊடகவியலின்) மிக அழகிய மற்றும் துணிச்சலான தன்மைசான்று பகர்தல்(Bearing witness) என்னும் செயலாகும். ஓர் இயற்கைப்பேரிடர் தாக்கும்போதோ, போர் மூளும்போதோ அல்லது ஒரு சமூகம் பேரழிவால் நிலைகுலையும்போதோ, பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுவதே மனிதனின் இயல்பான உள்ளுணர்வாகும். ஆனால், செய்தியாளர்கள் அதற்கு நேர்மாறாகச் செய்பவர்கள். அவர்கள் தங்கள் பைகளைத் தயாரித்து, குறிப்பேடுகளையும் கேமராக்களையும் கையில் ஏந்தி, இடையூறுகளை நோக்கி ஓடுகிறார்கள். ஏன்? ஏனெனில், அங்கு நடப்பவற்றைத் தடம்பதிக்க அவர்கள் இல்லை என்றால், எளிய மனிதர்களின் கதைகள் வரலாற்றிலிருந்து முற்றிலும் துடைத்தழிக்கப்பட்டுவிடும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

பெரும் முதலாளிகளின் வணிக மோசடிகளையோ அல்லது அரசியல் ஊழல்களையோ வெளிக்கொண்டு வருவதற்காக, தூசு படிந்த பொது ஆவணங்களை மாதக்கணக்கில் தோண்டித் துருவி, உள்விவரம் தெரிவிப்போரை நேர்காணல் செய்து, தனிப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் புலனாய்வு நிருபர்களைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் இதைப் புகழுக்காகவோ அல்லது செல்வத்திற்காகவோ செய்வதில்லை; ஏனெனில், பெரும்பாலான செய்தியாளர்களுக்கு மிகக் சொற்பமான ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் இதைச் செய்வதற்குக் காரணம், ‘இந்தக் கதை முக்கியமானது, இதை உலகம் அறியவேண்டும்என்று அவர்களின் உள்ளத்தில் எரியும் ஒரு நெருப்புதான்.

வறுமையோடு போராடும் விளிம்புநிலைச் சமூகத்தைப் பற்றியோ அல்லது தவறான தண்டனையை எதிர்த்துப் போராடும் ஒரு தனிநபரைப் பற்றியோ ஒரு செய்தியாளர் எழுதும்போது, அவர் ஒரு புனிதமான செயலைச் செய்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர் மனித வாழ்க்கையின் மாண்பை மீட்டெடுக்கிறார். எளியவர்களை அதிகார வர்க்கத்தினர் தங்களுக்குச் சாதகமாக நசுக்கிவிடாமல் இருப்பதை அவர் உறுதி செய்கிறார்.

(தொடரும்)