news-details
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு - எசா 22:19-23; உரோ 11: 33-36; மத் 16: 13-20 (23.08.2026)

திருப்பலி முன்னுரை

அன்புச் சகோதர - சகோதரிகளே! வாழும் கடவுளின் மகனாகிய இயேசுவின் பெயரால் உங்களை ஞாயிறு வழிபாட்டிற்கு அன்போடு அழைக்கிறோம். “நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்ற இயேசுவின் கேள்விக்கு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்என பேதுரு துணிவோடு அறிக்கையிட்டார். பேதுருவைப்போல இயேசுவை நம் வாழ்வின் தெய்வமாக அறிக்கையிடும் நம்பிக்கைத் துணிவு நம்மிடம் உள்ளதா? என இன்று சிந்திப்போம்.

இறுதிமூச்சுவரை இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பேதுரு திரு அவையின் முதல் தலைவரானார். “உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்என்ற திருவிவிலிய வார்த்தைக்கேற்ப, நற்கருணையில் இயேசுவை உட்கொள்ளும் நாம் அவரை நம் வாழ்வாலும் அறிவிக்கவேண்டும். உண்மைக்குச் சான்று பகர்ந்து உயிரைக் கையளித்த அருள்சகோதரி இராணி மரியா, அருள்பணியாளர் ஸ்டேன் சுவாமி ஆகியோரின் தியாக வாழ்வு நம் நம்பிக்கைப் பயணத்திற்குச் சிறந்த வழிகாட்டியாகும்.

வாழ்க்கையில் புயல்களும் சவால்களும் வந்தாலும், கிறிஸ்து என்னும் பாறைமீது கட்டப்பட்ட நாம், நம்பிக்கையில் தளர்ச்சியடையாமல் வாழ்வோம். திரு அவையின் உறுப்பினர்களாக அதில் மகிழ்ச்சியோடு பணியாற்றவும், எண்ம உலகில் உண்மையான ஞானமாகிய ஆண்டவரை உணர்ந்து சான்று பகரவும் தேவையான வரங்களைக் கேட்டு, இத்திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

கடவுளின் அழைப்பு மகத்துவமானது. தாம் தேர்ந்துகொண்டவர்களைப் பாதுகாத்து உயர்த்தும் ஆண்டவர், அவர்களுக்குத் தம் வல்லமையை அளிக்கிறார். “ஆண்டவர் தம் வழிகளை நமக்கு அறிவிப்பார்என்னும் இறைவாக்கிற்கேற்ப, அவரது இறைப் பராமரிப்பை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கடவுளின் எல்லையற்ற ஞானத்தையும் இரக்கத்தின் ஆழத்தையும் போற்றுகிறது. “ஆண்டவரை அண்டி வாழ்பவர் கைவிடப்படுவதில்லைஎன்பதை உணர்ந்து, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட அவர்தம் திட்டத்திற்குப் பணிந்து வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் கால மாற்றத்திற்கேற்ப ஞானத்துடனும் விவேகத்துடனும் பணியாற்றவும், தனிமை, நோய், புரிந்துகொள்ளாமை போன்ற தருணங்களில் உம் பிரசன்னத்தில் திடம் கொள்ளவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உடன் வாழும் இறைவா! வாழ்வின் சோதனைகளில் நீர் எங்களோடு இருக்கின்றீர் என்ற உறுதியான நம்பிக்கையோடு வாழவும், வாழும் கடவுளின் மகனாகிய உம்மை எங்களது அன்றாட வாழ்வால் சான்றுபகர்ந்து அறிவிக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வழிகாட்டும் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் மக்கள் நலனில் அக்கறையோடும், நாட்டின் வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடும் உண்மையிலும் நேர்மையிலும் வழிநடத்தத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றே இறைவா! எம் குடும்பங்களிலும் பங்கிலும் உள்ள குழந்தைகள் அனைவரும் இறைநம்பிக்கையிலும் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கி, பெற்றோரை மதித்து நடக்கும் நல்ல பண்பை வளர்த்துக்கொள்ளத் தேவையான ஞானத்தைத் தந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.