நமது அன்பை வெளிப்படுத்தும் அடையாளமாக இதயத்தைச் சொல்கிறோம். மனிதனின் இதயம் உணர்வுகளின் இல்லமாகவும், மனம் எண்ணங்களின் பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. இரண்டும் வெவ்வேறு பணிகளைச் செய்தாலும், ஒன்றோடொன்று பிரிக்கமுடியாத அளவிற்கு இணைந்துள்ளன.
மகிழ்ச்சியில்
துள்ளும்போது, ‘என் இதயம் அகமகிழ்கிறது’ என்று
நாம் சொல்வதன் பொருள் என்ன? உணர்வின் உடனடித் தொடர்பாக நாம் சொல்வது இதயத்தைத்தான். மகிழ்ச்சி, நம்பிக்கை, அல்லது அன்பு காரணமாக இதயம் துள்ளும்போதும், பயம் மற்றும் பதற்றம் காரணமாக இதயம் படபடக்கும்போதும், அதன் பின்னால் ஓர் எண்ணம் இருப்பது உறுதி.
நாம்
அனுபவிக்கும் ஒவ்வோர் உணர்விற்கும் அடிப்படையாக இருப்பது நமது சிந்தனை, பார்வை மற்றும் நம்பிக்கைகளே. இதை ஒட்டுமொத்தமாகச் சொல்லப்போனால், எண்ணங்கள் பின்னால் இருந்து இயக்கும் ஆற்றலாக இருப்பதை நாம் அறியலாம். எண்ணங்களுக்கு நமது உணர்வுகளை வடிவமைக்கும் அற்புதமான ஆற்றல் உள்ளது. ஒரு நல்ல எண்ணம் இதயத்தை மகிழ்ச்சியாலும் துணிச்சலாலும் நிரப்பும். ஓர் எதிர்மறை எண்ணம் கவலையையும் துயரத்தையும் உருவாக்கும்.
இந்தக்
கண்ணுக்குப் புலப்படாத தொடர்பே நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் உருவாக்கும். ஒவ்வோர் உறவையும் அடைய விரும்பும். ஒவ்வொரு கனவையும் பாதிக்கும். இதில் நாம் கவனம் வைக்கும்போது, எண்ணம் நல்வழிப்பட்டு, மனம் நம் வயப்பட்டு துள்ளும் மனநிலைக்கு மாறுகிறோம். ‘இதயத்தையும் மனத்தையும் தொடர்புபடுத்தி எழுதுவதன் நோக்கம் என்ன?’ எனும் கேள்வி உங்களுக்குள் எழலாம். மனமும் (Mind) இதய
மும் (Heart) ஒன்றல்ல;
ஆனால், அவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இதயம் என்பது உடலின் ஓர் உறுப்பு. அதன் பணி உடல் முழுவதும் குருதியைப் பாய்ச்சுவது. மனம் என்பது உடல் உறுப்பு அல்ல; அது சிந்தனை, நினைவு, கற்பனை, உணர்வுகள், முடிவெடுத்தல் போன்ற மனச்செயல்பாடுகளைக் குறிக்கும். இவை மூளையின் செயல்பாடுகளுடன் தொடர்பு உடையவை.
இதயம்
என்பது அன்பு, கருணை, பாசம், உணர்வு போன்றவற்றின் இருப்பிடத்தின் உவமையாகக் கூறப்படுகிறது. மனம் என்பது எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள், குழப்பங்கள், தீர்மானங்கள் ஆகியவற்றின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. மனம் என்பது எண்ணங்களை உருவாக்கும் கருவி.
இதயம்
என்பது அன்பு அல்லது ஆன்ம அனுபவத்தின் மையம் என்று விளக்கப்படுகிறது. இரண்டும் வேறுபட்டவை என்றாலும், ஒன்றையொன்று ஆழமாகப் பாதிக்கின்றன. அதனால் இவை இரண்டும் மனித அனுபவத்தில் பிரிக்க முடியாத இரு முக்கியப் பரிமாணங்கள். எளிமையாகக் கூறினால், மனம் = எண்ணங்களின் உலகம். இதயம் = உணர்வுகளின் உலகம்.
நமது
எண்ணங்கள் ஓர் உயர்ந்த நோக்கமும், மிகுந்த நம்பிக்கையும் கொண்டு இருக்கும்போது, நமது இதயம் உற்சாகம் பெறுகிறது. அது நம்மைத் தன்னம்பிக்கையுடனும் கருணையுடனும் செயல்படத் தூண்டுகிறது. பிறரை ஈர்க்கும் இதயம் என்பது பிரச்சினைகளே இல்லாத இதயம் அல்ல; மாறாக, சவால்கள் இருந்தாலும், வாழ்க்கையின் அர்த்தத்தைத் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் இதயமே உண்மையில் ஈர்க்கும் இதயம். அத்தகைய இதயம் அவசர உணர்ச்சிகளால் அல்ல; ஆழ்ந்த சிந்தனையால் வழிநடத்தப்படுகிறது. அது குறைகளைச் சொல்வதைவிட, நன்றியுணர்வைத் தேர்ந்தெடுக்கிறது; பயத்தை விட நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கிறது. வெறுப்பைவிட அன்பையும் கருணையையும் தேர்ந்தெடுக்கிறது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் முதலில் எண்ணங்களாகவே தோன்றி, பின்னர் செயல்களாக வெளிப்படுகின்றன.
சிறந்த
தலைவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் ஒரு பொதுவான பண்பு உள்ளது. அவர்கள் முதலில் வலிமையான எண்ணங்களை வளர்த்தனர். அந்த எண்ணங்களை வளர்த்தெடுக்கச் சிறந்த பழக்கங்களை உருவாக்கினர். மற்றவர்களுக்கு முடியாததாகத் தோன்றிய எண்ணங்களே அவர்களின் இதயத்தைத் துள்ளச் செய்தன. நம்பும் மனமும், கற்பனைத் திறனும், விடாமுயற்சியும் அந்த எண்ணங்களை உண்மைக்கு அருகில் கொண்டு சென்று அவர்களது வாழ்வை மாற்றின.
சரியான
மற்றும் முறையான எண்ணங்களால் ஊக்கமடைந்த இதயம், ஒருவரின் வாழ்க்கையை மட்டுமல்ல; எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கையையும் மாற்றும் ஆற்றல் கொண்டது. அதேநேரத்தில், எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால்,
அவை இதயத்தைச் சின்னாபின்னமாக்கிச் சிறையடைத்துவிடும். சந்தேகம், கோபம், பொறாமை மற்றும் பயம் போன்ற எண்ணங்கள் மகிழ்ச்சியை மறைத்து, வாய்ப்புகளைக் காணவிடாமல் தடுக்கின்றன. அதனால்தான் நல்ல சிந்தனையை வளர்ப்பது மிகவும் அவசியம்.
பிறரை
ஈர்க்கும் மனமும் இதயமும் என்பது உயர்ந்த நோக்கமுள்ள எண்ணங்களால் நிரம்பிய மனத்தின் வெளிப்பாடுதான். நமது எண்ணங்கள் (மனம்) விதைகள், நமது இதயம் வளமான மண்; நமது செயல்கள் உலகம் காணும் கனிகள். நேர்மறை, துணிச்சல் மற்றும் கருணை நிறைந்த எண்ணங்களை வளர்த்தால், நமது மனமும் இதயமும் நம்மை மட்டுமல்ல; நம்மைச் சந்திக்கும் ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கும் ஆற்றலாக மாற்றித் துள்ளும் மனநிலையைத் தரும்.
நிறைவாகக்
கூறவேண்டுமென்றால், மனம் எண்ணுகிறது; இதயம் உணர்கிறது. எண்ணுவதும் உணர்வதும் உருப்பெறும்போது எண்ணற்ற ஏற்றங்களை நாம் கண்டு துள்ளும் மனநிலையில் இருப்போம். துள்ளும் மனமே அனைத்துத் தோல்விகளையும் கொல்லும், வெற்றிகளை வெல்லும்.
“ஒரு மனிதன் அவன் எண்ணங்களின் உருவமே; அவனுடைய குணநலன் என்பது அவன் சிந்தித்த அனைத்து எண்ணங்களின் மொத்தத் தொகுப்பாகும்” என்கிறார்
ஜேம்ஸ் ஆலன். தொடர்ந்து பயணிப்போம்.