தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் புதிய தலைவராக பிரபல ஊடகவியலாளரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளருமான பெலிக்ஸ் ஜெரால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
கத்தோலிக்கரான
திரு. பெலிக்ஸ், சென்னை இலயோலோ கல்லூரியில் பயின்றவர். தமிழ்நாட்டில் பலராலும் அறியப்பட்ட ஊடகவியலாளர். ‘சன்’,
‘சத்தியம்’ தொலைக்காட்சி
சேனல்களில் செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், ’ரெட் பிக்ஸ்’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடந்த துயர நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊடகத் துறையிலிருந்து விலகி த.வெ.க.
கட்சியில் இணைந்த இவர், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று, கட்சியின் கருத்துகளை முன்வைத்து வந்தார்.
த.வெ.க. தலைவர்
விஜய்யின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது சிறுபான்மையினர் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான பணிகளில் நீண்ட அனுபவம் கொண்ட இவரது நியமனம், சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு ஒரு புதிய தீர்வைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம். சிறுபான்மை சமூக மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தவும் முழு கவனத்துடன் உழைப்பதாக உறுதி அளித்துள்ள இவருக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.