கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை
வணங்காத் தலை (குறள் 9)
குறள் விளக்கம்:
கேட்காத செவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களையுடைய கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள் பயனற்றவைகளாம்.
சிந்தனை:
‘கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பது கடினமா? மனிதர்களுக்கு மருத்துவம் பார்ப்பது கடினமா?’ என்று ஒரு பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
‘மனிதர்களுக்குத்தான் கடினம்’ என்ற அணியில் பேசியவர் கூறினார்: “இப்பொழுது மனிதர்களுக்குத்தான் புதிய புதிய நோய்கள் வருகின்றன. பல நோய்களுக்கு இன்னும்
மருந்துகளே கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, அவர்களுக்கு வைத்தியம் பார்ப்பதுதான் கடினம்” என்றார்.
கால்நடை
அணியைச் சார்ந்தவர் கூறினார்: “மனிதர்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை என்று வாய் திறந்து கூறிவிடுவார்கள். எனவே, கால்நடைகளுக்குத்தான் கடினம்” என்றார்.
நடுவர்
தீர்ப்பு கூறும்போது கூறினார்: “மனிதர்களுக்குச் சர்க்கரை நோய் வந்தால் நைசாக நழுவி ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் போல, மாடுகள் செய்வதில்லை. கண் வலி வந்தாலும் கட்டாயம் தொலைக்காட்சி பார்ப்பேன் என்று அடம் பிடிப்பதில்லை. விலங்குகளில் கற்பழிப்பு இல்லை; கருக்கலைப்பு இல்லை; பெண் சிசுக்கொலை இல்லை; ஆடு மாடுகள் புகை பிடிப்பதில்லை; மது குடிப்பதில்லை; தகாத உறவு அவைகளிடம் இல்லை; பேச முடியாததால் மன அழுத்தமும் அவற்றிற்கு
இல்லை. எனவே, கால்நடை வைத்தியம் கடினமே இல்லை” என்றார்.
எண்ணற்ற
நற்குணங்களின் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகளைப்போல, இருந்தும் பயனில்லாதவையே என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
வேறு
ஒரு குறளில், ‘இறைவன் பாதம் பணியாத ஒருவன் கற்றதனால் என்ன பயன்?’ என்று கூறிய வள்ளுவர், இந்தக் குறளில் இறைவனின் பாதத்தை வணங்காத மனிதனின் புலன்கள் அவனுக்கு இருந்தும் பயனில்லை என்று கூறுகின்றார்.
எனவே,
இறைவனை ஒருவன் வணங்கினால்தான் அவன் ஒரு நல்ல மனிதனுக்குரிய அனைத்து இயல்புகளையும் கொண்டிருக்கிறான் அல்லது அவன் மனிதன் என்று எண்ணப்படத் தகுதியற்றவன். ஏனென்றால், மனிதன் மட்டும்தான் இறைவனைத் தொழக்கூடியவன். அனைத்து உயிரினங்களும் இறைவனால் படைக்கப்பட்டவை என்றாலும், மனிதனைத் தவிர எந்த உயிரினமும் அறிவுப்பூர்வமாக ஆராதித்து, அன்பு செய்ய முடியாதவை. எனவே, மனிதனுடைய புலன்களும், மனிதனுடைய கல்வியின் பயனும் இறைவனை வணங்காமல் இருக்குமேயென்றால், அதனால் எந்தவொரு பலனும் இல்லை என்று குறிப்பிடுகின்றார்.
நம்
ஆண்டவர், “கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா? ஏன் உங்களுக்கு நினைவில்லையா?” என்று மாற்கு 8:18-இல் அருமையாகக் கூறியுள்ளார்.
அவர்களுக்குக்
கண்கள் இருந்தன; அவர்கள் பார்க்கத்தான் செய்தார்கள். அவர்களுக்குக் காதுகள் இருந்தன; அவர்கள் கேட்கத்தான் செய்தார்கள். ஆனால், ஆண்டவர் ‘அவர்கள் பார்க்கவில்லை, கேட்கவில்லை, அவர்கள் புலன்கள் வேலை செய்வதில்லை’ என்கிறார்.
அப்படியென்றால், உண்மை இறைவனை அறிந்து, அன்பு செய்யாமல் இருப்போமேயென்றால், நம்முடைய புலன்கள் அனைத்தும் செயல்படாதவை என்கிறார். எனவே, இறைவனை அன்பு செய்வோம்; முழு மனிதனாக வாழ்வோம்.
(தொடரும்)