news-details
சிறப்புக்கட்டுரை
புதுவை மறைப்பணித்தளத்தில் பாரிஸ் மறைபரப்புச் சபையின் கல்விப்பணி

இந்த உலகத்தையே மாற்றக்கூடிய ஒரு பலமான ஆயுதம் உண்டென்றால் அது கல்விதான்என்றார் நெல்சன் மண்டேலா. கல்வியறிவு இல்லாமல் எந்த ஒரு சமூகமும் பண்பட்டச் சமூகமாக வளர முடியாது என்பதைப் புதுவை மறைப்பணித்தளத்தில் கிறித்தவ மறையைப் போதிக்க வந்த பாரிஸ் மறைபரப்புச் சபையினர் (MEP) நன்கு உணர்ந்திருந்தனர். எனவே, அவர்கள் தங்கள் கையில் எடுத்த மாபெரும் ஆயுதம் கல்விப்பணியே.

பிரெஞ்சு அரசுக் கல்லூரி: பிரெஞ்சுப் பகுதியில் இயங்கி வந்த அரசுக் கல்லூரியில் பணியாற்றிய மிஷனரிகளைத் திருத்தூதுப் பணியில் ஈடுபடுத்த விரும்பிய ஆயர் ஹெபர்ட் அவர்கள், அக்கல்லூரியை ஆளுநர் தெஸ் பாசிடம் ஒப்படைத்தார். மீண்டும் 1847, ஜனவரி முதல் தேதி இந்த அரசுக் கல்லூரி பாரிஸ் மறைபரப்புச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டது. 1852-ஆம் ஆண்டு வீராம்பட்டினத்தில் இருந்த பழைய குருமடம் இக்கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதியாக்கப்பட்டது.

இக்கல்லூரியின் பொறுப்பை ஏற்ற பிறகு மிஷனுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டானபோதிலும், இப்பணியைப் பங்குகளில் பணியாற்றிய மற்ற மிஷனரிகள் பெரிதும் வரவேற்கவில்லை. 1889-ஆம் ஆண்டுவரை இக்கல்லூரி மிஷனரிகளின் கண்காணிப்பில் இயங்கிவந்தது. மறைபரப்புச் சபையிடம் ஒப்படைப்பது, மீண்டும் அரசே ஏற்று நடத்துவது என்று இக்கல்லூரி நிர்வாகம் மாறிக்கொண்டே இருந்ததாலும், திருத்தூதுப் பணிக்குப் போதிய குருக்கள் இல்லாமையாலும்உண்மையில் இக்கல்லூரிப் பொறுப்பு இவர்களுக்குப் பெரும் சுமையாகவே இருந்தது.

பெத்தி செமினேர் பள்ளி: ஆண்களின் கல்விக்காக 1846 மார்ச் 19-இல் வெளி மாணவர்களையும் உள்விடுதி மாணவர்களையும் கொண்ட பெத்தி செமினேர் பள்ளி தொடங்கப்பட்டது. 1859-ஆம் ஆண்டு இந்தப் பள்ளியில் பயின்ற 200 மாணவர்களில், 40 பேர் குருமட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1855-ஆம் ஆண்டு காரைக்கால் மக்கள் மேதகு பொனான் ஆண்டகையிடம் தங்கள் ஊரிலும் ஒரு பள்ளியைத் திறக்கக் கோரிக்கை வைத்ததன் பேரில், அவ்வாண்டு செப்டம்பர் 10-ஆம் நாள் அருள்திரு. திகார்ட் அவர்களின் தலைமையில் காரைக்காலில் ஒரு பெத்தி செமினேர் பள்ளி, புதுவை பெத்தி செமினேர் பள்ளியின் கிளையாகத் தொடங்கப்பட்டது.

1895 முதல் 1900 வரை புதுவை பெத்தி செமினேர் பள்ளியில் முதல்வராகப் பணியாற்றிய அருள்திரு. லெரோய் அவர்கள் முதல் முறையாக இங்கு ஐரோப்பிய மாணவர்களையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களையும் சேர்த்தார். இதை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெற்றன. பேராயர் காந்தி போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிராகரித்தார். எனவே, இப்போராட்டம் 48 மணி நேரம் மட்டுமே நீடித்தது.

1900 முதல் 1933 வரை இப்பள்ளியின் முதல்வராக இருந்த அருள்திரு. பியர் எஸ்காந்த் அவர்கள் இதன் பெரும்பாலான கட்டடங்களைத் தனது சொந்த செலவிலேயே கட்டினார். 1905-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரெஞ்சு மதச்சார்பின்மைச் சட்டத்தின் விளைவால் இப்பள்ளி மூடப்படும் நிலைக்கு உள்ளானது. ஆனால், அருள்தந்தை அவர்களின் சாதுரியத்தால் அந்நிலையிலிருந்து தப்பியது. 1925-ஆம் ஆண்டிலேயே இப்பள்ளியில் 1200 மாணவர்கள் பயின்றது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் இப்பள்ளி பாண்டிச்சேரியின் அடையாளமாகத் திகழ்கிறது.

புனித சூசையப்பர் பள்ளி: மேதகு லவுனான் ஆண்டகையின் முயற்சியால் 1868-ஆம் ஆண்டு அருள்திரு. ரெனெவியர் அவர்களை முதல்வராகக் கொண்டு, கடலூர் புதுநகரில் புனித சூசையப்பர் பள்ளி தொடங்கப்பட்டது. 1884-ஆம் ஆண்டு இப்பள்ளி கல்லூரியாக உயர்த்தப்பட்டது. ஆனால், போதிய நிதி ஆதாரமின்மையாலும், 1909-ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் கொணர்ந்த புதிய ஒழுங்குமுறைச் சட்டங்களாலும் இது மூடப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, 1911-ஆம் ஆண்டு கல்லூரிப் பட்டப் படிப்புகள் நீக்கப்பட்டு, மீண்டும் உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. பேராயர் லவுனான் ஆண்டகையின் காலத்தில் 1879-ஆம் ஆண்டு அரசாங்கம் கல்விப்பணியில் கொண்டு வந்த சீர்திருத்தங்களாலும், விதித்த நிபந்தனைகளாலும் மறைப்பணியாளர்களின் கல்விப்பணி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளானது.

மகளிர் கல்வி: ஆண்கள் கல்வியில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்களோ அதே அளவு பெண்கள் கல்வியிலும் பாரிஸ் மறைப்போதகச் சபையினர் கொண்டிருந்தனர்பொதுவாக, பெண்களுக்குக் கல்வியளிக்கும் பொறுப்பு அருள்சகோதரிகளிடம் விடப்பட்டது. புதுவை ஆளுநர் தெஸ்பாசின் வேண்டுகோளின்படி, 1827-ஆம் ஆண்டு புதுவையில் பணிபுரிய அழைக்கப்பட்ட புனித சூசையப்பர் குளூனி சபைச் சகோதரிகள், வெளி மாணவர்களைக் கொண்ட பள்ளி ஒன்றையும், உள்விடுதி ஒன்றையும், இலவசப்பள்ளி ஒன்றையும் விரைவில் நிறுவினர். மேதகு பொனான் ஆண்டகையின் ஏற்பாட்டினால் 1844, பிப்ரவரியில் இக்கன்னியர்கள் காரைக்காலில் அடுத்தடுத்து தொழில் வகுப்பு ஒன்றையும், இளம்பெண்களுக்கு ஒரு பள்ளிளையும், சிறுவர்களுக்கு ஒரு பள்ளியையும் ஏற்படுத்தினர்.

மேதகு பொனான் ஆண்டகையின் வழிகாட்டுதலில், அருள்திரு. லூயிஸ் சவீனியன் துப்புய் அவர்களின் முயற்சியால் 1844, அக்டோபர், 16-ஆம் நாள்தூய மாதா இதயச் சபைதொடங்கப்பட்டது. அடுத்த நாளே பெண்கள் கல்விக்கென்று சிறிய பள்ளி ஒன்றும் திறக்கப்பட்டது. 1892-ஆம் ஆண்டில் இச்சபையினர் புதுவையிலும் கடலூரிலும் மூன்று பள்ளிகளையும், மற்ற இடங்களில் 17 பள்ளிகளையும் நடத்தி வந்தனர். அருள்திரு. லெகோத் மற்றும் பெத்தி செமினேர் பள்ளியில் பணியாற்றிய குருக்களின் உதவியால் தாழ்த்தப்பட்ட பெண் குழந்தைகளுக்குக் கல்வியளிக்கும் பொறுப்பு புனித ஞானப்பிரகாசியார் சபை அருள்சகோதரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு. பெரியநாயகம் கம்ப்ரோன் தனது சொந்தச் செலவில் இச்சபைக்குச் சம்மனசுகள் தெருவில் ஒரு வீட்டைப் புதுப்பித்துக் கொடுத்தார். தொடர்ந்து 1853, மார்ச் முதல் நாளில் ஒரு பள்ளி திறக்கப்பட்டது. 1903-ஆம் ஆண்டில் இவர்கள் புதுவையில் ஒரு பள்ளி மற்றும் தங்கும் விடுதியையும், நெல்லித்தோப்பு, உழவர்கரை, வேலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு பள்ளியையும் கண்காணித்து வந்தனர்.

சிறிய பள்ளிகள்: 1844-ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் பிப்ரவரி 13-வரை நடைபெற்ற பாண்டிச்சேரி முதல் மறைமாநிலப் பேரவையின் விளைவாக, 1892-ஆம் ஆண்டு புதுவை மறைப்பணித்தளத்தில் 161 ஆரம்பப்பள்ளிகள் இருந்தன. இச்சிறிய பள்ளிகள் மறைபரப்புக் கண்ணோட்டத்தில் பெரிய கல்லூரிகளைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. மேலும், மக்களிடையே மறைப்பணியாளர்களுக்குப் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தன. எனவே, மிகுந்த உற்சாகத்தோடு மறைப்பணியாளர்கள் தங்களின் மறைப்பணித்தளங்களில் சிறிய பள்ளிகளை அதிகமாகத் தொடங்க முயற்சி செய்தனர்.

கடலூர் புதுநகர் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணவர்கள் அனுமதிக்கப்படாததைக் கண்டு வேதனையுற்ற அருள்திரு. J. துருஹின் அவர்கள், 1908-ஆம் ஆண்டு இம்மாணவர்களுக்காகத் தனது இல்லத்திலேயே புனித மரியன்னை ஆரம்பப் பள்ளியை ஆரம்பித்தார். இப்பள்ளியே பாரிஸ் மறைபரப்புப் பணித்தளத்தில் உள்ள சிறிய பள்ளிகளுக்கு மாதிரிப்பள்ளியாக அமைந்தது. இப்பள்ளியில் தரமான கல்வி அளிக்கப்பட்டதாலும், அருள்தந்தை அவர்களின் சீரிய முயற்சியினாலும் புனித மரியன்னைப் பள்ளியில் ஆரம்பக்கல்வியை முடித்த அனைத்து மாணவர்களும் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் உயர் வகுப்புகளுக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். பாரிஸ் மறைபரப்புப் பணியாளர்கள் தொடங்கியது மிக மிகச்சிறிய பள்ளிகள்தான்; ஆனால், அவையே புதுவை மறைமாநில மக்களின் சமூக-பொருளாதார விடுதலைக்கும், ஆன்மிக வளர்ச்சிக்கும், முழுமனித உருவாக்கத்திற்கும் அடிப்படையாகவும் ஆதாரமாவும் இருந்தன.

புதிய கல்வித் திட்டம்: அருள்திரு. துருஹின் மற்றும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி இருவரும் இணைந்து பேராயர் மோரெல் அவர்களிடம் புதுவை மறைப்பணித்தளத்தில் கல்விப்பணிக்கான ஒரு முன்னோடித் திட்டத்தை வகுத்துக் கொடுத்தனர். இவர்களது புதிய கல்வித்திட்டம் பின்வருமாறுபுதுவை மறைப்பணித்தளத்தில் உள்ள அனைத்துச் சிறிய பள்ளிகளும் ஒரே மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்; அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம், ஒரே மாதிரியான கற்பித்தல் முறைகள் பின்பற்றப்படவேண்டும்; பள்ளிகளின் தரம், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் உயர்த்தப்படவேண்டும்; 500-க்கு மேல் கிறித்தவர்கள் வாழும் ஊர்களிலும் சிற்றூர்களிலும் ஆரம்பப் பள்ளிகள் நிறுவப்படவேண்டும்; அனைத்து மாணவர்களுக்கும் சாதிப் பாகுபாடின்றி இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டும். பேராயர் மோரெல் அவர்கள் இப்புதிய கல்வித்திட்டத்திற்கு உடனடியாக மனமுவந்து ஒப்புதல் வழங்கினார்.

மறைமாநிலப் பள்ளிகளின் கூட்டமைப்பு (DGS): பேராயர் மோரெல் அவர்கள் 1918-ஆம் ஆண்டு கடலூர் புதுநகர் பங்கினையும், கிராமப்புறங்களில் தனித்தனியே இயங்கி வந்த சிறு பள்ளிகளை  ஒருங்கிணைக்கின்ற மைய அமைப்பை உருவாக்கும் பொறுப்பையும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களிடம் ஒப்படைத்தார். மறைப்பணித்தளத்தில் இருந்த மறைப்பணியாளர்களின் முயற்சிகளை ஒன்றுசேர்க்கமறைமாநிலப் பள்ளிகளின் கூட்டமைப்புநிறுவப்பட்டது.

இக்கூட்டாண்மை நிர்வாகத்தின் முதல் தலைவராக பேராயர் மோரெல் அவர்களும், இதன் முதல் இயக்குநராக அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களும் செயல்பட்டு வந்தனர். உடனடியாகஆரம்பக் கல்விக்குழுஒன்று அமைக்கப்பட்டது. 1920-இல் திண்டிவனத்திற்கு மாற்றப்பட்ட கல்வி வாரியம், தந்தையின் மறைவிற்குப்பின், 1944 முதல் மீண்டும் கடலூரில் இயங்க ஆரம்பித்தது.

சிறுவர்களின் தோழன்இதழ்: புதிய கல்வித் திட்டத்தினைச் செயல்படுத்த முனைப்புடன் நின்று செயல்பட்டவர் அருள்திரு. J. துருஹின் ஆவார். 1916-ஆம் ஆண்டுசிறுவர்களின் தோழன்என்ற இதழை அவர் வெளியிட்டார். இதில் ஒவ்வொரு வாரமும் கற்பிக்கப்படவேண்டிய பாடங்கள் வாராந்திரப் பாடத்திட்டமாக வெளியிடப்பட்டன. 1916-ஆம் ஆண்டு தொடங்கிய இவ்விதழ் 1941-ஆம் ஆண்டு வரை அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டது. அவரது மறைவிற்குப்பின், அவ்வப்போதுஆசிரியர்களின்  தோழன்என்ற பெயரில் இவ்விதழ் வெளியிடப்பட்டது. 1959-ஆம் ஆண்டு முதல் இவ்விதழ் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, இறையியல் மாத இதழாகதோழன்என்ற பெயரில் வெளியிடப்படுகிறது.

திண்டிவனம் கல்விப்பணியின் மையமாதல்: அருள்திரு. தாமஸ் கவான் டஃபி தனது கல்விப் பணியின் தலைமையிடமாக  1920-ஆம் ஆண்டு திண்டிவனத்தைத் தேர்வு செய்தார். அங்கிருந்த புனித கபிரியேல் சபைச் சகோதரர்களிடம் தங்கி, புதிய கல்வி வாரியத்தின் பணிகளைத் தொடங்கினார். DGS பள்ளிகளின் இயக்குநருக்கு உறுதுணையாகபள்ளிகளின் ஆய்வாளர்என்ற  பதவி உருவாக்கப்பட்டு, அதன் முதல் ஆய்வாளராக அருள்திரு. J.H. கஸ்தோன் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவரது ஆய்வறிக்கையின் அடிப்படையில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை உயர்த்தவும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்கள் பின்வரும் புதிய தொலைநோக்குத் திட்டத்தைத் தீட்டினார்.

திண்டிவனத்தில் கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைத்தல். பயிற்சியில் சேரும் மாணவர்கள் உரிய கல்வித்தகுதியை அடைய தயாரிப்புப் பள்ளி நிறுவுதல்; தனது கல்விக்கொள்கைகளைச் சோதனை செய்ய ஒரு மாதிரிப் பள்ளி  நிறுவுதல். பயிற்சி காலத்திலேயே மாணவர்களுக்கு வேதியர் பயிற்சியும்  அளித்தல். பயிற்சி பெற்றவர்களையே ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்தல்.

மேற்கண்ட புதிய  கல்வித்திட்டத்தின்படி 1921-இல் திண்டிவனத்தில் 22 மாணவர்களுடன் கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. இப்பயிற்சிப் பள்ளிக்குப் போதுமான மாணவர்களைச் சேர்க்க புனித அன்னாள் ஆரம்பப்பள்ளி, சகோதரர் கிளோத்தின் தலைமையில் நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.

கத்தோலிக்க நிறுவனம்: திண்டிவனத்தில் மாதிரிப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிப் பள்ளி அனைத்தும் ஒன்றுசேர்ந்தகத்தோலிக்க நிறுவனம்அமைக்கப்பட்டது. 1923-ஆம் ஆண்டு அருள்திரு. A.S. கோலாஸ் அவர்கள் அந்நிறுவனத்தின் முதல் தலைவரானார். 1930-ஆம் ஆண்டு இவர் பேராயரானதும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களை இந்நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். மாணவர்கள் எளிதாகக் கல்வி கற்க தந்தை அவர்கள் கற்பித்தலில் தொடர்பு மையமுறை, உளவியல் முறை, செயல்வழிக் கற்றல் முறை ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். மாணவர்கள் தாங்கள் வாழும் சூழலைப் புரிந்துகொள்ள, நேரடியாகக் களத்திற்குச் சென்று திறனாய்வு செய்யஉலாவரச் செய்தல்என்னும் முறை நடைமுறையில் இருந்தது. மேலும், பள்ளியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கமாணவர் பாராளுமன்றம்முறையாக நடத்தப்பட்டது. இவர் 1933-ஆம் ஆண்டு கத்தோலிக்கச் சாரணிய இயக்கத்தை உருவாக்கினார்.

புதுவை மற்றும் பிற மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளின் நலன் மற்றும் நிர்வாகம் சார்ந்த உரிமைகளை அரசிடம் முறையாகப் பெற்றிட 1931-ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில்கத்தோலிக்கக் கல்விக்கழகம்ஒன்றை, திண்டிவனத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கி, அதன் முதல் இயக்குநராகச் செயல்பட்டார். தற்போது இக்கழகம் சென்னையிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு கல்விப்பணியில் அவர் அரசாங்கத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவருடைய அயரா உழைப்பாலும் முயற்சியாலும் 1941-ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது  ஏறக்குறைய 1500-க்கும் மேற்பட்ட ஆசிரிய - வேதியர்கள் உருவாக்கப்பட்டு மறைப்பணித்தளத்தில்  மிகுந்த உற்சாகத்தோடு  பணிசெய்து வந்தனர்.

புதுவை மறைப்பணித்தளத்தில் உள்ள கிராமப் புறங்களிலும் அடிப்படைக் கல்வியைத் தரமாகத் தந்திட புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்து, கல்வியில் வியத்தகு மாற்றங்களைச் செய்த பெருமை மேதகு மோரெல் ஆண்டகை அவர்களையும், அவரது வழிகாட்டுதலில் திட்டங்கள் தீட்டி அவற்றைச் செயல்படுத்திய அருள்திரு. துருஹின் மற்றும் அருள்திரு. தாமஸ் கவான் டஃபி அவர்களையுமே சாரும்.

பேராயர் A.S. கோலாஸ் அவர்கள் தனது பணியை நிறைவு செய்து இந்திய ஆயரான மேதகு அம்புரோஸ் ஆண்டகையிடம் தனது மந்தையை ஒப்படைத்தபோது, புதுவை மறைமாநிலத்தில் 157 ஆரம்பப்பள்ளிகள், 30 நடுநிலைப்பள்ளிகள், 13 உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன. பாரிஸ் மறைபரப்புச் சபையினர் விதைத்த கல்விப்பணியின் பலனாக இன்று பாண்டி - கடலூர் உயர் மறைமாவட்டத்தில் மூன்று கல்லூரிகள், ஒரு தொழிற் பயிற்சிப் பள்ளி, ஒரு COSE பள்ளி, 19 மேல்நிலைப் பள்ளிகள், 16 உயர்நிலைப்பள்ளிகள், 22 நடு நிலைப்பள்ளிகள், 85 ஆரம்பப்பள்ளிகள், 4 மழலையர் பள்ளிகள் அக இருள் அகற்றி, அறிவு புகட்டிக் கொண்டிருக்கின்றன.