இன்றைய நற்செய்தியின் படிப்பினைகள் நமக்கு முரண்பட்டதாகவே தோன்றக்கூடும். ஆனால், இயேசுவின் நிலைப்பாடு சிலுவையில் தன்னை இழப்பதினால் மட்டுமே மக்களுக்கு வாழ்வை வழங்கிட முடியும் என்பதில் உறுதிப்பட இருந்தது.
இன்றைய
நற்செய்தி இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது:
1. மத்
16:21-23- இயேசு தனது பாடுகளை முதன் முறையாகத் தமது சீடர்களுக்கு வெளிப்படுத்துதலும் சீடர்களின் பதில் செயல்பாடும்.
2. மத்
24-27- இயேசு தன்னைப் பின்பற்ற விரும்பும் சீடர்களுக்கு வழங்கிடும் நிபந்தனைகள்.
நற்செய்தியின்
முதற்பகுதியில் தனது பாடுகளை முதன்முறையாக இயேசு அறிவித்தபொழுது, சீடர்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் அமரவேண்டும் என்ற கனவு தவிடுபொடியானது. கடந்த
வார நற்செய்தியில், ‘நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?’ என்னும் இயேசுவின் கேள்விகளுக்கு மிகப் பொருத்தமான பதிலை பேதுரு வழங்கினார். “நீர் மெசியா, வாழும் தந்தையின் இறைமகன்” என்னும் பதில் மொழிக்கு இயேசு அவரைப் புகழ்கின்றார். ஆனால், இன்றைய நற்செய்தியில் இறைமகன் எதிர்கொள்ள இருக்கும் துன்பத்தைப் போன்று, அவரது சீடர்களாய் தங்களுக்கும் துன்பம் உண்டு என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. பேதுருவின் (சீடர்களின்) பதில் மொழியும், உடன் வெளிப்பட்ட எதிர்வினையும் (reaction) இயேசுவின் (எதிர்கால) மீட்பின் செயல்பாட்டிற்கும், இறைத்தந்தையின் விருப்பத்திற்கும் எதிராக அமைந்திருந்ததால்,
இயேசுவின் கண்டிப்பிற்கு பேதுரு உள்ளாகிறார்.
சாத்தான் - தடைக்கல்
‘இப்படி உமக்கு நடக்கவே கூடாது’ என்று பேதுரு இயேசுவை நோக்கிக் கூறியவுடனே
இயேசு அதனை ஆமோதிக்கவில்லை; உடனடியாக
அச்சிந்தனையை அவரது உள்ளத்திலிருந்து தூக்கி எறிகின்றார். “என் கண்முன் நில்லாதே சாத்தானே”
என்று பேதுருவை நோக்கிக் கூறுகின்றார். பேதுருவை
இயேசு ‘சாத்தான்’
என்று நற்செய்தியில் குறிப்பிடுவது, அவர் பேயினால் ஆட்கொள்ளப்பட்டவர் என்று பொருள் கொள்ளக்கூடாது.
அரமாயிக் மொழியில்
‘சாத்தான்’ என்பதற்குத்
‘தடைக்கல்’ என்னும்
பொருள்படும். அதாவது, ஒருவரின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாய் இருப்பது; ஒருவரின் ஆர்வத்தைக் குறைப்பது; எதிர்மறை எண்ணங்களை ஒருவரின் உள்ளத்தில் விதைப்பது போன்ற செயல்களை உள்ளடக்கியது. எனவேதான், இயேசு பேதுருவை அவரின் தடைக்கல்லாய் மாறிடாதபடி உடனடியாகச் செயல்படுகின்றார்.
எதிர்த்துருவ
எண்ணங்கள்
- முரண்பட்ட
மனக்
கணக்குகள்
இயேசு
சிலுவைச்சாவு, பாடுகள், துன்பங்கள், உயிர் இழப்பு ஆகியவை மூலம் மீட்பின் விலையை வழங்கிட விரும்புகின்றார். மக்களுக்கு
வாழ்வை, இழந்த
மீட்பை மீண்டும் கொணர்ந்திட விரும்புகின்றார். ஆனால், சீடர்களின்
எண்ணங்களும் மனக் கணக்குகளும் எதிர்துருவத்தில் அமைந்திருந்தன. சீடர்கள், மெசியா என்பவர் தனது அதிகாரத்தினாலும் ஆட்சியினாலும் வலிமையினாலும் படைகளினாலும்
புதுமையினாலும் மக்களை மீட்கவேண்டும் என எண்ணினர். இயேசு
அந்த மனநிலையை நிராகரிக்கின்றார். இயேசுவின் மீட்பின் ஆயுதம் அன்பு மட்டுமே. அங்கே அதிகாரத்திற்கு இடமில்லை. இயேசுவின் பணிவிடை செய்யும் மனநிலையும் ஏழ்மையும் இரக்கமும் நீதியின் மீதிருந்த தாகமும் பரிவும் உடனிருப்பும்
இயேசுவின் மீட்பின் சின்னங்களாக மாறின.
மூன்று நிபந்தனைகள்
இன்றைய
நற்செய்தியில் இரண்டாவது பகுதி, சீடர்களின் உள்ளத்தை இன்னும் அதிகமாக உலுக்கியது. இயேசு மேற்கூறிய மீட்பின் சின்னங்களை, சிலுவைகளைச் சுமந்துகொண்டு மீட்பைப் பெற்றுத் தரப்போவதில்லை - இன்னும்
அதற்கு வழி சேர்க்கும் பொருட்டு, யாரெல்லாம் அவரைப் பின்பற்ற விரும்புகிறார்களோ அவர்களும், மீட்பின் சின்னங்களைச் சுமந்து கொண்டு சாட்சியாக வாழ்ந்திடவேண்டும். மேலும், தம்மைப் பின்பற்ற பின்பற்ற மூன்று நிபந்தனைகளைத் தருகின்றார். என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும்... 1. தன்னலம் துறந்து, 2. தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு,
3. அவரைப் பின்பற்றவேண்டும்.
1. தன்னலம் துறந்து...
‘தன்னலம் துறத்தல்’
என்பது தன்னையே வருத்திக்கொள்வதோ அல்லது தனது திறமைகளையோ, ஆற்றலையோ வீணடிப்பது அல்ல; மாறாக, “நான்தான்
மையம்” என்கிற மனநிலையைத் தாண்டி பிறர் மட்டும் போதும் என்கின்ற மன நிலையையும்,
அணுகுமுறையையும்
ஏற்பதுதான் முதல் நிபந்தனை. பணம், புகழ், தற்பெருமை, ‘நான்தான்’
என்னும் அகந்தை ஆகியவற்றின் சிறையிலிருந்து வெளியேறி, இவ்வுலகைப் பிறரின் கண்கொண்டு காண்பதே சீடத்துவத்தின் முதல் நிலை. என் எண்ணங்களும், என்னைப் பற்றி மட்டும் சுழல்வதை நிறுத்துவதும்தாம் தன்னலம் துறப்பது.
2. தம் சிலுவையைக் தூக்கிக்கொண்டு...
இன்றைக்கு
சிலுவை என்றாலே துன்பங்கள் மட்டுமே எனப் பொருள் கொள்கின்றோம். வேதனை, நோய், இழப்பு, மனப்போராட்டம், சோகங்கள், இறப்பு, அன்றாடச் சுமைகள், உடல் சோர்வு, உடல்நலக்குறை பாடுகள், பணியிலுள்ள கவலைகள்... இவற்றையெல்லாம் நமது அன்றாட சிலுவைகள் எனக் கருதுகின்றோம்.
ஆனால்,
இயேசுவின் மனநிலையில் சிலுவை என்பது விண்ணையும் மண்ணையும் இணைக்கும் வழிகள்; மன்னிப்பின் செயல்பாடுகள்; இரக்கத்தின் செயல்கள். சுருங்கக்கூறின், அவை அன்பின் செயல்பாடுகள். சிலுவையின் மறுபெயர்தான் அன்பு. அது கனமான சுமைகள் அல்ல, வெறுக்கத்தக்க பொருள் அல்ல; மாறாக, இறைவனின் உச்சகட்ட அன்பின் அடையாளம். சிலுவையினால் இயேசு நம்மை மீட்டார் என்று கூறுவதைவிட, இறைத்தந்தை நம்மீது கொண்ட பேரன்பினால் இயேசுவழியாக நம்மை மீட்டார் என்று கூறலாம்.
இன்றைய
நற்செய்தியில் ‘சிலுவை’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘அன்பு’ என்ற வார்த்தையைப் பொருத்திப் பார்ப்போம், என்னைப் (இயேசுவை) பின்பற்ற விரும்பும் எவரும் தம் அன்பை தூக்கிக்கொண்டு அன்பு செய்யும் அனைத்து ஆற்றலையும் வலிமையையும் திறந்த உள்ளத்தையும் தாங்கிக் கொண்டு, என்னைப் (இயேசுவை) பின்பற்றட்டும் என இயேசு அழைக்கின்றார்.
சிலுவையே அன்பின் தற்கையளிப்பு எனப் புரிந்துகொள்ள வேண்டும்.
எரேமியாவின் அனுபவம்
இன்றைய
முதல் வாசகத்தில், இறைவன் தமது அன்பினால் எவ்வாறு எரேமியா இறைவாக்கினரை ஆட்கொண்டதையும் இறைவனின் அன்புச் சொல்லினால் அவரது இதயத்தில் ஏற்பட்ட ஆழமான மாற்றத்தையும், அதனைத் தனக்குள் அடக்கி
வைத்துக்கொள்ள இயலாச் சூழலையும் எடுத்துரைக்கின்றது.
பவுலின் வேண்டுகோள்
இன்றைய
இரண்டாம் வாசகத்தில், நமது உடலையும் ஆன்மாவையும்
இறைவனின் அன்பையும் பெற, புதுப்பிக்க,
பவுல் உரோமை இறைச்சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கின்றார். அன்பினால் புதுப்பிக்கப்பட்டவர்கள் சரியானவற்றைத் தேர்ந்து தெளியும் ஆற்றலைப் பெறுவார்கள். அதுவே இயேசுவை நெருக்கமாகப் பின்பற்ற வழிவகை செய்யும்.
3. என்னைப் பின்பற்ற வேண்டும்...
இயேசுவைப்
பின்பற்றுதல் என்பது சீடத்துவத்தின் மூன்றாவது சிந்தனை. இயேசுவின் அடிச்சுவட்டில் நாம் செல்கின்றபோது இயேசு நம் அருகில் இருக்கின்றார்; நம்மைப்
பலப்படுத்துகின்றார்;
இறையாட்சியின் விழும்பியங்களுக்காக எடுக்கப்படும் முயற்சியில் விளிம்புநிலை மக்களின் சார்பான நிலைப்பாட்டில் இயேசு நம்முடன் இருக்கின்றார்; அல்லது அவரை நெருக்கமாகப் பின்பற்றும்பொழுது அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல் நமது உள்ளமும் நிறைவடையும் (இன்றைய பதிலுரைப் பாடல்).
பிறருக்காக
நான் அன்பைச் (சிலுவையை) சுமந்துகொண்டு இயேசுவைப் பின்பற்றும்பொழுது வாழ்வும் மகிழ்ச்சியும் என் அருகில் உள்ளது; என்னுள் உள்ளது. அனைத்தையும் அதற்காக இழந்தாலும் ஆன்மாவின்
மகிழ்ச்சியும், உண்மையான வாழ்வும் நமது வசமாகும். ஏனென்றால், இறையாட்சிக்காக அன்புப்பணி செய்யும்பொழுது, நாம் இழப்பது அனைத்தும் நமக்கு ஆதாயமே. அவற்றின் வழியாக இயேசுவை ஆதாயமாக்கிக்கொள்கின்றோம்.
இயேசுவைப்
போன்று பிறருக்காகத் துன்புறுபவரும் எவரும் இல்லை; சிலுவையைச் (அன்பை) சுமந்தவரும் எவரும் இல்லை; இயேசுவைப் போன்று இறைத்தந்தையின் மகிழ்ச்சியில் முழுமையாகப் பங்கு கொண்டவரும் எவரும் இல்லை. இயேசுவைப் பின்பற்றுவோரும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை.
விருப்பத்தோடு, ஆர்வத்தோடு, மகிழ்வோடு
இயேசுவைப் பின்பற்றுவோம். இறை மகிழ்ச்சியை நமது உடைமையாக்குவோம். அதற்காக
நாம் அனைத்தையும் இழப்பது, நம்மை
வாழ்விற்கு இட்டுச்செல்லும். அச்செயல்கள் வாழ்விற்கான மூலதனங்கள்.