2026, செப்டம்பர் 27 அன்று கத்தோலிக்கத் திரு அவையால் கொண்டாடப்படவுள்ள 112-வது ‘உலக இடம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்தை’ முன்னிட்டு திருத்தந்தை லியோ தனது சிறப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார். “இந்தச் சிறுவர்களில் ஒருவரையாவது...” என்ற மத்தேயு நற்செய்தி வசனத்தின் அடிப்படையில் இச்செய்தி அமைக்கப்பட்டுள்ளது. “உலகளாவிய இடம்பெயர்தலில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகச் சிறுவர்களே உள்ளனர்” என்று கவலை தெரிவித்துள்ள திருத்தந்தை, “பெற்றோரை இழந்து, வன்முறைகளைக் கண்டு, குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் அகதிச் சிறுவர்களின் மனித கண்ணியம் பல வழிகளில் மிதிக்கப்படுகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார். “புலம்பெயர்ந்த குழந்தைகளின் கதறல் இன்று இறைவனைச் சென்றடைகிறது; இத்தகைய துயரங்களைக் கண்டு நாம் அமைதியாகவோ அல்லது பழகிப்போனவர்களாகவோ இருந்துவிடக் கூடாது. ஒவ்வொரு புலம்பெயர்ந்த சிறுவரையும் வெறும் புள்ளிவிவரமாகப் பார்க்காமல், அவர்களுக்குப் பாதுகாப்பு, கல்வி மற்றும் வாழ்வுரிமையை வழங்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.