news-details
ஞாயிறு மறையுரை
பொதுக்காலம் 20-ஆம் ஞாயிறு (16.08.2026) எசா 56:1,6-7; உரோ 11:13-15;29-32; மத் 15:21-28 - தாழ்ச்சியும், மிகுந்த நம்பிக்கையும்

கடவுள் வித்திட்ட இறையாட்சி அனைவரையும் உள்ளடக்கியது. இறையாட்சியின் அறிவிப்பும், அதன் எல்லைகளும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள், சமூகத்திற்குள் சுருக்கிக்கொள்வது ஓர் எதிர்சாட்சியச் செயல். இந்த ஞாயிறு இறைவார்த்தை, எவர் ஒருவரையும் மதிப்பற்றவராகப் புறம்பே தள்ளிவிடாமல் அனைவரையும் ஏற்று, மாண்புடனும் அக்கறையுடனும் அணுகிட நமக்கு நினைவுறுத்துகின்றது.

1997-ஆம் ஆண்டு சென்னை சாந்தோமில் அமைந்திருந்த புனித தோமையார் இளங்குருமடத்தில் தங்கி, இலயோலா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்ற காலத்தில், ஆகஸ்டு மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஒரு ஞாயிறன்று இன்றைய நற்செய்தி வாசிக்கப்பட்டது. அவ்வாசகத்தின் வரிகள் எனக்குள் எண்ணற்ற கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தின. இயேசுவிற்கும் கானானியப் பெண்ணிற்கும் அமைந்திருந்த உரையாடல்களின் வரிகள் என்னைத் துளைத்துக்கொண்டே இருந்தன. உடனடியாக அப்பொழுது எங்களுக்கு ஆன்மிகக் குருவாகப் பணியாற்றிய விவிலியப் பேராசிரியர் அருள்பணி. S.J. அந்தோணிசாமி அவர்களைச் சந்தித்து என் கேள்வியை எழுப்பினேன்.

தந்தையே, ஏன் இயேசு கானானியப் பெண்ணை நோக்கி, ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் (அன்றைய விவிலிய மொழிபெயர்ப்பில் இவ்வார்த்தைநாய்கள்என மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருந்தது) போடுவது முறையல்லஎனக் குறிப்பிடுகின்றார். தன் மகளின் உடல் நலத்திற்காக இயேசுவை அணுகி, விடாது முயற்சி செய்து, அவரது கவனத்தை ஈர்த்து, அவரிடம் மன்றாடும் பெண்ணிற்கு இயேசு இப்படிப்பட்ட கடினமான பதிலைக் கூற காரணம் என்ன? இது அவமதிக்கும் செயல் போன்று தெரிகின்றதே...” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினேன். அவரின் பொறுமை மிகுந்த பதிலும், நற்செய்தியின் விளக்கமும் என் மனத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்துள்ளன.

இயேசுவின் இறையாட்சிப் பயணம் - மத்தேயு நற்செய்தியின் பின்புலம்

யூதமக்கள் கிறித்தவத்தைத் தழுவிய காலங்களில் மத்தேயு நற்செய்தி எழுதப்பட்டது. யூதர்களைத் தவிர்த்து, பிற இனத்து மக்களும் கிறித்தவத்தை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை வாழ்வை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து, அதனைப் பின்பற்ற விரும்பிய காலச்சூழலில், இன்றைய நற்செய்தியின் பின்புலத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

யூத மக்கள் அவர்களின் ஆன்மிக, வழிபாட்டு வழக்கமுறைகளையும், அன்றாட வாழ்வின் செயல்பாடுகளையும் மட்டுமே உயர்ந்தவையாகக் கருதினார்கள். தாங்கள் மட்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாக மார்தட்டிக் கொண்டார்கள். ஆகவே, மற்ற இனங்களைச் சார்ந்த அனைவரையுமே ஆன்மிகமற்றவர்களாக, இழிவானவர்களாகக் கருதினார்கள்.

இன்றைய நற்செய்தியில் இயேசு இஸ்ரயேல் மக்கள் வாழும் இடங்களிலிருந்து கடந்து தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் செல்கின்றார். புற இனத்து மக்கள் வாழும் பகுதிகளில் விருப்பத்துடன் இயேசு செல்கின்றார். தம் சீடர்களுக்கு மட்டுமல்ல, விளிம்புநிலை மக்களுக்கும் இறையாட்சியைப் பற்றி அழுத்தமாகப் பதிவு செய்கின்றார். யூதர்களின் முன்சார்பு எண்ணங்களையும் தவறான கருதுகோள்களையும் இயேசுவின் கானானியப் பெண்ணுடனான சந்திப்பு உடைக்கின்றது.

எல்லைகள் கடந்த, சமூக வேர்களைக் கடந்த இறையாட்சி

எல்லாருக்கும் உரிய இறையாட்சியைக் கொணர்ந்திட இறைவன் விரும்புகின்றார். இறையாட்சியின் அறிவிப்பும், அதன் எல்லைகளும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள், நாட்டிற்குள், சமூகத்திற்குள் அடங்கிவிடுவது எதிர்சாட்சியச் செயல். இயேசு தீர்-சீதோன் பகுதிகளுக்குள் சென்று அச்சமூகத்தின் மனிதர்களோடு உரையாடுவதும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதும், அவர்களின் நம்பிக்கையைப் பாராட்டுவதும் ஒரு புவியியல் சார்ந்த குறியீடு மட்டுமல்ல; அதில் விடுதலை இறையியலும் நிறைந்துள்ளது. யூதர்களால் அதிகமாக வெறுக்கப்பட்ட புற இனத்து மக்களின் இடத்தில் இறையாட்சியின் மதிப்பீடுகளும் நம்பிக்கையும் உயர்த்திப் பிடிக்கப்படுகின்றது. கானானியப் பெண்ணின் மூதாதையரை, அவ்வினத்தை யூதர்கள் அதிகமாக வெறுத்தனர். ஆனால், அவ்வினத்தைச் சார்ந்த ஒரு தாயை நம்பிக்கையின் தாயாக இனம் கண்டு கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தியில் இவ்விருவரின் உரையாடல் கூர்ந்த கவனத்திற்குரியது. மூன்றுமுறை கானானியத் தாய் பேசுகின்றார்: “ஐயா, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்.”

ஐயா, எனக்கு உதவியருளும்.”

ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறுதுண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே.”

இந்த மூன்று உரையாடல்களும் வேண்டல்களும்ஐயாஎனத் தொடங்குகின்றது. மூன்று உரையாடல்களிலும் கானானியப் பெண் தாழ்ச்சியோடும் ஆனால், மிகுந்த நம்பிக்கையோடும் மனவுறுதியோடும் இயேசுவிடம் வேண்டுகின்றார். இயேசுவின் பதில்மொழி மௌனத்துடன் தொடங்குகின்றது. கனமான உரையாடலாக வலுப்பெறுகின்றது. இறுதியில் நலமிக்க வார்த்தைகளுடன் நிறைவுபெறுகின்றது.

தாவீதின் மகனே எனக்கு இரங்கும்எனக் கதறிய தாய்க்கு இயேசு உடனடியாகப் பதில்மொழி கூறவில்லை. இயேசுவின் மௌனம் அப்பெண்ணின் தேவைக்குச் செவிமடுக்க மனமின்மையால் அல்ல; பாராமுகமும் அல்ல; புறக்கணிப்பும் அல்ல! இயேசுவின் மூன்று உரையாடல் வரிகள்:

இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்.”

பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல.”

அம்மா, உமது நம்பிக்கை பெரியது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்.”

கானானியப் பெண்ணின் தாழ்ச்சியும், நம்பிக்கையான வார்த்தைகளும் இயேசுவின் இதயத்தைத் தொடுகின்றன. ஒருவரின் தாழ்ச்சி மலைகளையும் தகர்க்கும் வலிமையுடையது. தற்பெருமையும் பெருமிதமும் ஒருவரின் வாழ்வைச் சரிக்கக்கூடியது.

நாய்க்குட்டிகளும் மேசையிலிருந்து விழும் அப்பத்துண்டுகளும்

இயேசு புற இனத்து மக்களுக்கான தமது பணியை மிகச் சூசகமாகத் தெரிவிக்கின்றார். யூத இனத்தால் இழிவாக, தரம் குறைவாகக் கருதப்பட்ட இவ்வினத்தை இயேசு, அவர்கள் இறைவனின் பிள்ளைகள் - இறைவனின் பந்தியில் அமரும் சம உரிமை பெற்றவர்கள் என்பதை நற்செய்தியின் நிகழ்வில் உறுதிப்படுத்துகிறார்.

இன்றைய நற்செய்திநாய்க்குட்டிகளும், மேசையிலிருந்து விழும் அப்பத்துண்டுகளும்என்னும் உருவகத்தைச் சுற்றியே நகர்கின்றது. ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்லஎன்னும் யூதர்களின் சமத்துவமற்ற சித்தாந்தத்தை இயேசு மாற்றுகிறார். இறைவனின் கரங்களிலிருந்து வருகின்ற இரக்கமும் அருளும் சிறிய அளவே ஆயினும், சிறிய துண்டுகளாய் இருப்பினும், அதுவே தங்களுக்கு மீட்பளிக்கும் என கானானியத் தாய் நம்பினார். ஏனென்றால் இறைவன் தம் ஆசிரை, அருளை, இரக்கத்தை வழங்கும்பொழுது, அவரைவிடக் குறைவாக எதையும் அவர் தம் பிள்ளைகளுக்குத் தருவதில்லை; இறைவனின் கரங்களிலிருந்து வரும் சிறு அப்பத்துண்டுகளும், சிறிய அருளும் எங்களுக்குப் பேரருளாய், ஆற்றலாய், நம்பிக்கையாய், உடல்நலமாய் மாறும் என அத்தாய் நம்பினாள்.

அம்மா, உம் நம்பிக்கை பெரியதுஎன இயேசு புகழும் கானானியப் பெண் தொழுகைக்கூடங்களுக்குச் செல்லவில்லை; இறைவார்த்தையை அங்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. வேற்றுத் தெய்வங்களை வழிபட்டிருப்பினும், இயேசுவை - தாவீதின் மகனை அடையாளம் காண்கின்றார். அவர் இறைவழிபாட்டில் பங்கெடுக்கவில்லை. ஆனால், இறைவன் தங்களுக்கும் உரியவர் என்பதில் உறுதியாய் வெளிப்படுத்துகின்றார். நம்பிக்கை அறிக்கையை அவர் அறிந்திருக்கவில்லை; இறையியலாளர்களின் போதனைகளை அறிந்திருக்கவில்லை. ஆனால், அவரது மகளின் வேதனையை அறிந்திருந்தார். அவளுக்காகத் தாவீதின் மகனிடம் மன்றாடுகின்றார். பிறரின் வேதனையை அறிந்து, அத்துன்பத்தை, இன்னலை அகற்றும் பரிவுள்ளம் அவளிடம் இருந்தது. இப்பரிவு உள்ளத்தினால் உந்தப்பட்டு நம்பிக்கையோடு வேண்டுகின்றார்.

இறைவனின் பார்வையில் சமயமோ, அதனை அச்சுபிசகாமல் பின்பற்றும் மக்களினமோ முன்னுரிமை பெறுவதில்லை. இறைவனின் பார்வையில், அவரது மக்களின் குறிப்பாக, கடைநிலையினரின் வேதனையும், துன்பமும் தேவையும் முன்னுரிமை பெறுகின்றன. இனத்தின் அடிப்படையில் முன்னுரிமை கோருவதை இறைவன் நிராகரிக்கின்றார். வேதனையையும் துன்பத்தையும் இழிநிலையையும் சந்திக்கும் மக்களினங்களின் அருகில் இறைவன் இருக்கின்றார். அவர்களின் நம்பிக்கையே சிறப்பான பெருமிதமிக்க நம்பிக்கை.

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் இறைவனின் வேட்கையை, விருப்பத்தைப் பதிவிடுகின்றார். தமது இல்லம் எல்லா மக்களினங்களின் இறைவேண்டலின் வீடாக மாறுவதே இறைவனின் விருப்பமும் கனவும். எல்லாரும் வேறுபாடுகளின்றி பலிகளை ஒப்புக்கொடுத்து அவரது பந்தியில் அமர்வதும், இறைப்புகழ்ச்சியில் பங்கெடுப்பதும் இறைவனின் அவா. பசியையும் வேதனையையும் புறக்கணிப்புகளையும் மாற்றி, பசியாற உணவு, ஆறுதல், உடனிருப்பு, மனித மாண்பு, மதிப்பு இறையாட்சியின் கனவு. இறைவனின் கனவு மெய்ப்பட இன்றே செயல்படவேண்டும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் புற இனத்தவர்களின், மறக்கப்பட்ட இனத்தின் திருத்தூதராகப் பணியாற்றுவதில், அவர்களுடன் தனது நெருக்கத்தை வெளிப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். திரு அவை எல்லாருக்குமானது; திரு அவையின் பணியாளர்கள் அனைவருக்குமானவர்கள்; கடைநிலையினருக்கும் நெருக்கமானவர்கள்.

இறைவனின் பேரிரக்கமும் பரிவும் மறுக்கப்படும் சமூகத்திற்கு அதிகமாய் வழங்கப்படுவதே நற்செய்தி. சமூகத்தின் அவலச் செயலால் சமூகத்தின் நிலைகளிலிருந்து கீழே தள்ளப்பட்டு (மேசையிலிருந்து கீழே நிறுத்தப்பட்டு/தள்ளப்பட்டு) வாழும் சமூகத்தை நோக்கி நாம் அனைவரும் குனிந்து, அவர்களை உயர்த்தி, மேசையில் அமரச்செய்து, பணியில் பங்கெடுத்து பிள்ளைகளுக்குரிய மாண்பை வழங்குவதும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதும் நமது வாழ்வியல் ஆன்மிகமாக மாறவேண்டும். அப்பொழுது நாம் பெருமிதத்துடன் கூறலாம். நாங்கள் வழிபடும் இறைவேண்டலின் வீடு அனைவருக்கும் உரிய இறைவேண்டலின் வீடு. அங்கே அனைவரும் இறைவனின் பிள்ளைகளே!