news-details
சிறப்புக்கட்டுரை
முதலில் காதலா? திருமணமா? (இளமை ஒரு சவால்! – 10)

நண்பர் ஒருவர் தன் மகனுக்குப் பெண் பார்த்தார்; சொந்தத்தில்தான்! நிச்சயதார்த்தம் நடந்தது. நாங்களும் போயிருந்தோம். பெண்ணும் மாப்பிள்ளையும் கலகலப்பாகவே பேசிக்கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் திருமணப் புடவை எடுப்பது வழக்கம். ‘புடவையைத் தேர்ந்தெடுக்க நானும் வருவேன்என்று மணப்பெண் சென்றார். தனக்கு விருப்பமான புடவையைத் தேர்வு செய்தார். அதில் தன் பெயரையும், மாப்பிள்ளையின் பெயரையும் பொறிக்கச் சொன்னார்.

திருமணத்திற்குப் பத்திரிகை தயாராகிக் கொண்டிருந்தது. ஒருநாள் பெண்ணைக் காணவில்லை. சில வருடங்களுக்கு முன் அவர் வேலை பார்த்த இடத்தில் ஒரு பையனைக் காதலித்தாராம். அவரைப் பிரிய மனமில்லை என்று எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

இதைவிட உறுத்தலான சோகக் கதை ஒன்று: வேறொரு பெண், பெற்றோர் பார்த்த பையனைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்திற்கு முன்னால் காதலித்த பையனுடன் தனது நட்பையும் தொடர்பையும் விட்டுவிட மறுத்துவிட்டார். திருமணமே முறிந்து போனது.

இன்றைய இளைய தலைமுறைக்குத் திருமணம் ஒரு பெரிய சவாலாக மாறி இருக்கிறது. முன்பெல்லாம் ஆண் பிள்ளைகள்தான் திருமணத்திற்கு முன் திசைமாறிப் போவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். இப்போது இது இருபாலருக்கும் பொதுவாகிவிட்டது. முதலில் காதலித்து, நாம் விரும்பியவரையே திருமணம் செய்துகொள்வதா? பெற்றோர் தேர்ந்தெடுக்கும் துணைவரைத் திருமணம் செய்துகொண்டு பக்குவமான குடும்ப வாழ்க்கையில் காதலைத் தொடங்குவதா? இது இன்றைய சவால்.

பெற்றோர் பார்த்து வைத்த துணையைத்தான் அன்று நாங்களெல்லாம் திருமணம் செய்தோம். பிறகு ஓர் இனிய காதல் குடும்பத்தைக் கட்டி எழுப்பினோம். இன்றைக்கும் சுயக்கட்டுப்பாட்டையும் பொறுப்புணர்வையும் வளர்த்துக்கொண்டு முன்னேறும் பல குடும்பங்களில் பெற்றோர்தான் தங்கள் பிள்ளைக்கு ஏற்றத் துணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அத்தகைய குடும்பங்கள் பல இன்றும் வெற்றிநடைபோடத்தான் செய்கின்றன. அப்படியென்றால் காதல் திருமணங்கள் எல்லாம் தோல்வியில் முடிகின்றனவா? இல்லை. நிச்சயம் இல்லை. அந்தக் காதல் பக்குவமாகப் பாதுகாப்பாக வளர்ந்து, ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு திருமணம் செய்ய வாய்ப்பளிக்கலாம், வாய்ப்பளிக்க முடியும். இதைத்தான் மேலைச் சமூகம் அனுமதிக்கிறது, வளர்க்கிறது. ஆனால், இந்த மனப்பக்குவம் இங்கே வருவதற்கு நாளாகும்.

அங்கே படிப்பை முடித்தபிறகு எந்தப் பையனும் பெண்ணும் பெற்றோரைத் தொங்கிக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் தங்கள் சொந்தக் காலில் நின்றாகவேண்டும். தங்கள் வாழ்வுக்குத் தேவையான வரவுக்கு வழிசெய்துகொள்ள வேண்டும். இதற்கு நாளாகிறது. முப்பது வயதிற்கு மேல்தான் அங்கே திருமணத்தைப் பற்றி நினைக்கிறார்கள்.

இந்த வயதில் அவர்கள் பருவ இச்சைகளைக் கடந்து வந்துவிடுகிறார்கள். குடும்பம் வெற்றிகரமாக அமையவேண்டும் என்கிற பயமும் கவலையும் அவர்களுக்குத் தானாகவே வந்துவிடுகிறது. அவர்கள் முதிர்ச்சியோடு எடுக்கும் காதல் முடிவுகள் பல வெற்றி பெறுகின்றன. இதையும் தாண்டி அங்கே விவாகரத்துகளும் நடக்கத்தான் செய்கின்றன.

நம் நாட்டில்கண்டதே காதல், கண்டதும் காதல்!’ நடுநிலைப் பள்ளிகளிலேயே காதல். பருவ இச்சைதான் காதல் என்று நாம் வைத்துக்கொண்டு விட்டோம். உருப்படியாகப் படித்துச் சம்பாதித்துச் சொந்தக்காலில் நிற்கும்வரை யார் காத்திருக்கிறார்கள்?

பள்ளியில் காதல், கல்லூரியில் காதல், பொது இடங்களில் காதல், வேலைக்குப் போகும் இடத்திலும் வேலையை மறந்து காதல்! ‘காதலிப்பது எங்கள் உரிமை! எங்கள் காதலை வாழவைக்கவேண்டியது பெற்றோர் கடமை!’ எப்படி இருக்கிறது? இது எப்படி உருப்படும்? இந்த அவசரக் காதலுக்குத்தான் ஊடகங்கள் தூபம் போடுகின்றன. இப்படிப் பக்குவம் வருவதற்குள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நடுத்தெருவிற்குக் கொண்டுவரும் காதல் வேண்டவே வேண்டாம். ஒன்று, பெற்றோர் பார்த்துச் சொல்லும் துணை நமக்குச் சரியாக வருமா? என்று ஆராய்வோம். இல்லை, நாம் பார்க்கும் துணையைப் பெற்றோரும் பார்த்து முடிவெடுக்கட்டும். திருமணம் என்பது குடும்பம், குழந்தைகள், வருங்காலம் என்று தொடங்கும் ஆயிரம் காலத்துப் பயிர். வெறும் அவசரக் கொண்டாட்டமில்லை.       

(தொடரும்)