மனித வாழ்வில் எல்லாரையும் வெல்லும் ஆற்றல் அன்பிற்கு மட்டுமே உண்டு. அம்பு துளைக்கும் காயமும், வாள் வெட்டும் காயமும் காலப்போக்கில் ஆறி விடும்; ஆனால், அன்பின் வார்த்தைகள் மனத்தில் என்றும் நிலைத்திருக்கும். அதனால்தான், ‘அம்பெனத் துளைக்கும் அன்பு எண்ணங்கள்’ என்று கூறப்படுகிறது.
அம்பு உடலைத்
துளைக்கும்; அன்பு இதயத்தைத் துளைத்து மனிதனை மாற்றும். அன்பு என்பது வெறும் உணர்வு அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை.
ஒருவரிடம்
அன்போடு பேசப்படும் ஒரு சிறிய வார்த்தை கூட, அவருடைய மனத்தில் நம்பிக்கை எண்ணங்களை விதைக்கிறது. அன்பு நிறைந்த எண்ணங்கள் மனித உறவுகளை வலுப்படுத்துகின்றன.
அன்பு
என்பது எதிர்பார்ப்பில்லாத கொடையாகும். நாம் காட்டும் உண்மையான அன்பு பல மடங்கு திரும்பிவரும்.
பெரு உயரம் கண்ட மனிதர்கள் எல்லாம் அன்பையே தங்களின் மிகப் பெரிய ஆயுதமாகக் கொண்டு உலக மக்களின் இதயங்களை வென்றனர்.
ஒரு
புன்னகை, ஓர் ஆறுதல் வார்த்தை, ஒரு நன்றி, ஒரு மன்னிப்பு... இவை அனைத்தும் அன்பின் அழகிய வடிவங்கள். இத்தகைய சிறிய செயல்களே பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. மனித வாழ்வின் உயர்ந்த மொழி அன்புதான்; உலகை ஒன்றிணைக்கும் அழியா வழியும் அதுதான்.
எண்ணங்களே
மனிதனின் வாழ்க்கையை வழிநடத்தி வடிவமைக்கிறது. மனத்தில் தோன்றும் எண்ணங்கள் நல்லவையாக இருந்தால், அவை நல்ல சொற்களாகவும், நல்ல செயல்களாகவும் வெளிப்படும்.
அன்பு
மனத்தில் ஒரு சிறிய எண்ணமாகப் பிறக்கிறது; அந்த எண்ணம் கருணையாக வளர்கிறது; கருணை உதவியாக மலர்கிறது; உதவி மனிதநேயமாக மாறுகிறது. எனவே, அன்பு என்பது ஓர் உணர்வு மட்டுமல்ல; அது உயர்ந்த எண்ணங்களின் வெளிப்பாடாகும்.
அன்பு
எண்ணங்கள் பிறர் மனத்தை அம்பெனத் துளைக்கின்றன என்றால், அவை அவர்களின் இதயத்தைத் தொட்டு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதே பொருள். அன்போடு நினைப்பதும், அன்போடு பேசுவதும், அன்போடு செயல்படுவதும் மனித உறவுகளை வலுப்படுத்தி, சமுதாயத்தில் அமைதியையும் மனிதநேயத்தையும் வளர்க்கின்றன.
‘அம்பு’என்றால் நம் நினைவிற்கு வருவது வீரமும் போர்க்களமும் வெற்றியும் ஆகும். அம்பு எய்யப்பட்டவுடன் இலக்கைத் துளைக்கிறது. ஆனால், மனித வாழ்வில் மற்றோர் அம்பு உள்ளது. அது இரும்பால் செய்யப்பட்ட அம்பு அல்ல; அன்பு நிறைந்த எண்ணங்களால் உருவாகும் அம்பு. அந்த அம்பு உடலை அல்ல; இதயத்தைத் துளைக்கிறது. அதனால்தான் ‘அம்பெனத் துளைக் கும் அன்பு’
(எண்ணங்கள்) என்ற இத் தலைப்பு ஆழமான பொருளைக் கொண்டதாகும். அம்பு ஒருமுறை பாய்ந்தால் மீண்டும் திரும்பி வராது. அதுபோல நாம் வெளிப்படுத்தும் எண்ணங்களும் வார்த்தைகளும் பிறர் மனத்தில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள் விஷ அம்புகளைப் போன்றவை; அவை உறவுகளைச் சிதைக்கின்றன. ஆனால், அன்பு, மரியாதை, மன்னிப்பு, நம்பிக்கை போன்ற நேர்மறை எண்ணங்கள் பொன் அம்புகளைப் போன்றவை; அவை மனிதர்களின் இதயத்தில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் விதைக்கின்றன.
அன்பு
எண்ணங்களின் உண்மையான வலிமை; அவை பிறரை மாற்றும் திறனில்தான் உள்ளது. கடினமான மனத்தையும் மென்மையாக்கும் சக்தி அன்பிற்கு உண்டு. ஓர் ஆறுதல் வார்த்தை, ஒரு புன்னகை, ஓர் ஊக்கமளிக்கும் பாராட்டு, ஒரு மன்னிப்பு... இவை அனைத்தும் அன்பு எண்ணங்கள் எய்யும் அம்புகளே. அவை காயப்படுத்துவதில்லை; மாறாக, காயங்களை ஆற்றுகின்றன. அவை வெறுப்பை வென்று, நம்பிக்கையை உருவாக்குகின்றன.
இன்றைய
உலகம் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னேறியிருந்தாலும், மனித மனங்களில் அன்பு எண்ணங்கள் குறைந்தால் அமைதி நிலைக்காது. குடும்பத்தில் அன்பு எண்ணங்கள் இருந்தால் ஒற்றுமை வளரும்; பள்ளியில் இருந்தால் நல்ல பண்புகள் வளரும்; பணியிடத்தில் இருந்தால் ஒத்துழைப்பு அதிகரிக்கும்; சமூகத்தில் இருந்தால் மனிதநேயம் மலரும். எனவே, நம் மனத்தில் தோன்றும் ஒவ்வோர் எண்ணமும் அன்பால் நிறைந்ததாக இருக்கவேண்டும். அன்பு எண்ணங்கள் அம்பெனப் பிறர் இதயத்தைத் துளைக்கட்டும். ஆனால், அந்தத் துளை வலியை ஏற்படுத்தாமல் வழியைக் காண்பிக்கட்டும்.
‘அம்பெனத் துளைக்கும் அன்பு’ என்ற சொற்றொடர் மனித உறவுகளின் மகத்துவத்தை உணர்த்துகிறது. முன்பு உள்ள தொடரில் கூறப்பட்டது போல, எண்ணங்கள் எத்தனையோ தோன்றும். எதற்கு நாம் அதிகக் கவனத்தைச் செலுத்துகிறோமோ அது முக்கியத்துவம் பெறுகிறது. எதற்கு நாம் ஆசைப்படுகிறோமோ, எப்போது அந்த ஆசை தீவிரமாகிறதோ அப்போது நம் சிந்தனை அதைப்பற்றியே இருக்கும். எந்த எண்ணங்களுக்கு நாம் முன்னுரிமை தருகிறோமோ (நல்லதோ, கெட்டதோ எதுவானாலும்...) அந்த முன்னுரிமை ஆசையாக மாறுகிறது. அம்பெடுத்தால் அம்பாகவும், அன்பெடுத்தால் அன்பாகவும் அது உருப்பெறுகிறது.
நமது
வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடப்பதுபோல் நாமாகச் சில எண்ணங்களை வைத்து நம்மைப் பூட்டிக்கொள்வதால் நம் தோல்வியை நாமே தீர்மானிக்கிறோம். அந்த ஏதோ ஒன்று நடப்பதுபோல் நாம் நினைக்கும் எண்ணங்களை ஏன் நல்லெண்ணமாக மாற்ற கடினமாக உள்ளது? பிறர் அசந்து போகும் அளவிற்கு நான் யோசிக்கவேண்டும் என்பதைவிட, எனக்குள் இருக்கும் இந்த எண்ணத்தை எப்படிச் சிறப்புற அமைப்பது எனும் உள்மனப் பயணம்தான் அதைச் சிறப்பாக்கும். ஆதலால், பிறர் அசந்து போகிற அளவிற்கும் அல்லது கசந்து போகிற அளவிற்கும் நாம் அன்பினை அவர்மேல் பொழிய வேண்டும் என்பதல்ல; நாம் பிறரைத் தாக்கும்போதும், பிறரால் நாம் தாக்கப்படும்போதும் ஓர் அறத்தைப் பின்பற்றும்போதும், நாம் நம் வாழ்க்கையையும் பிறர் வாழ்க்கையையும் அம்பெனத் துளைக்காமல் அன்பெனத் துளைப்போம்.
அம்பைவிட,
அன்புதான் வீரியமிக்க ஆயுதம்! நம் எண்ணங்கள் அம்பாகத் துளைக்காமல் அன்பாகத் துளைக்கட்டும்.
(தொடர்ந்து பயணிப்போம்)