திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு பி. தாமஸ் பால்சாமி அவர்களின் பணி ஓய்வு விண்ணப்பத்தைத் திருத்தந்தை 14-ஆம் லியோ ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்தியாவிற்கான திருத்தூதரக நிர்வாகம் திரு அவைச் சட்ட விதி 401, 1-இன்படி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மறைமாவட்டத்தின் திருத்தூதரக நிர்வாகியாக (apostolic administrator) மதுரை உயர்மறைமாவட்டப் பேராயர் மேதகு முனைவர் அந்தோணிசாமி சவரிமுத்து அவர்களைத் திருத்தந்தை லியோ நியமித்துள்ளார். இது குறித்து ஆயர் தாமஸ் பால்சாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாகப் பொறுப்பேற்கும் பேராயர் அந்தோணிசாமி அவர்களின் பணி சிறக்கத் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும், தனது ஆயர் பணியின்போது முழு ஒத்துழைப்பு நல்கிய மறைமாவட்டக் குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.