திருப்பலி முன்னுரை
இயேசுவின்
பெயரால், அவருடைய சீடர்களாய் வாழவேண்டும் என்ற ஆவலுடன் மகிழ்வோடு கூடிவந்துள்ள இறைமக்களாகிய உங்கள் அனைவரையும்
ஞாயிறு திருவழிபாட்டிற்கு வாஞ்சையோடு வரவேற்கின்றோம். இன்றைய நற்செய்தி வழியே, கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது சிலுவையைச்
சுமக்கும் தியாகப் பயணம் என்பதை இறைமகன் நமக்கு நினைவூட்டுகிறார். இயேசு தாம் எருசலேமுக்குச் சென்று துன்பங்கள் பல பட்டு, கொல்லப்பட்டு,
மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டும் என்பதைத் தம் சீடர்களுக்கு வெளிப்படையாகக் கூறுகின்றார்.
உண்மையான
சீடத்துவம் என்பது சுகமான பாதையில் செல்வதல்ல; துன்பங்கள் வந்தவுடன் படைத்த ஆண்டவரையே வெறுப்பதல்ல; இழப்புகளைச் சந்தித்தவுடன் கடவுளைச் சந்திக்க ஆலயமே செல்லாமல் இருப்பதல்ல; மாறாக, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்காகத் தன் விருப்பங்களையும் சுயநலத்தையும் துறப்பதாகும். உலக இன்பங்களைப் பெற நினைத்து ஆன்மாவை இழப்பதைவிட, இறைவனுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்து நிலைவாழ்வை அடைய முயற்சிப்பதே சிறந்தது. சிலுவைகள் அவமானங்கள் அல்ல; மாறாக, மக்கள் பணியில் நமக்குக் கிடைக்கும் மகுடங்கள். எனவே, தன்னலம்
கடந்து இறைவனின் திருவுளம் நாடி, பொது நலனோடு மக்கள் பணியாற்றி, இயேசுவின் உண்மைச்சீடர்களாய் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
இன்றைய
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, இறைப்பணியில் தான் சந்திக்கும் போராட்டங்களையும், உள்ளக் குமுறல்களையும், மக்கள் செய்த ஏளனத்தையும் ஆண்டவரிடம் வெளிப்படையாக எடுத்துரைக்கிறார். ஆனாலும், இதயத்தில் பற்றி எரியும் இறைவார்த்தையைத் தீவிரமாக அறிவிக்கின்றார். நாமும் எதிர்ப்புகள் வந்தாலும் எரேமியாவைப் போன்று கடவுளின் வார்த்தையைத் துணிவோடும்
ஆர்வத்தோடும் பறைசாற்ற
அருள்வேண்டி இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
நம்
உடலையும் உள்ளத்தையும் அன்றாடச் செயல்பாடுகளையும் தூய மனத்தோடு இறைவனுக்குக் காணிக்கையாக்குவதே நாம் செலுத்தும் உண்மையான வழிபாடு ஆகும். இந்த உலகத்தின் சுயநலப் போக்குகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளாமல், இறைவனின் திருவுளத்தை அறிந்துகொண்டு, நம் எண்ணங்களையும், சிந்தனைகளையும் புதுப்பித்து, இறைவனுக்கு உகந்த தூய பலியாக நம்மையே கொடுக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நம்பிக்கையாளர்
மன்றாட்டுகள்
1. ‘துணிவோடிருங்கள்’ என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் எரேமியாவைப் போன்று உலகச் சவால்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாமல், உம்முடைய நற்செய்தியைத் துணிவோடு பறைசாற்றத் தேவையான தூய ஆவியின் ஆற்றலையும் அருள்வரங்களையும் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. வல்லமை
மிகுந்த ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்கள் தன்னலமற்ற சேவை மனப்பான்மையோடும், ஏழை எளிய மக்களின் நலனை முதன்மைப்படுத்தும் நீதியான சிந்தனையோடும் செயல்படவும், நாட்டை அமைதியான முறையில் வழிநடத்தவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ‘அஞ்சாதே! நான்
உன்னோடு’ என்று
மொழிந்த ஆண்டவரே! உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் நோய், வறுமை, அவமானம், இழப்புகள், குடும்பச் சிக்கல்கள் போன்ற சிலுவைகளால் சோர்ந்து விடாமல், எங்கள்மேல் கவலை கொண்டுள்ள உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. நலம்
நல்கும் ஆண்டவரே! எமது நாட்டிலும் பங்கிலும் குடும்பத்திலும் தீராத நோய்களினால் துன்பப்படும் எம் சகோதர-சகோதரிகளை நீர் ஆசிர்வதித்து, நோயிலிருந்து முழுமையான விடுதலையைத் தந்து காத்திடவும், உயிர்க்கொல்லி நோய், தொற்றுநோய், புற்றுநோய் அனைத்திலுமிருந்தும் எங்கள் அனைவரையும் பாதுகாத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.