சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘அறிவே பலம்’ (Knowledge is the power) என்றவர்கள், அந்த அறிவும் நிறைய தகவல்களைச் சேகரித்து வைப்பதே பலம் என்றும் கற்பித்தார்கள். எனவே, அன்றைய மாணவர்கள் எந்த நாட்டுக்கு எது தலைநகர்? எந்த நதிக்கரையோரம் எந்த நகரம் இருக்கிறது? என்பது போன்ற பல தகவல்களைத் தங்கள் மனத்தில் பதித்துவைப்பதே ‘பொது அறிவு’ என்று நம்பி தகவல்களைத் தங்கள் மூளையில் சேகரித்து வைத்தார்கள். ஆனால், இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், இந்தத் தகவல்கள் எல்லாம் செல்போன்கள் வழியாக நமது பாக்கெட்டில் வந்து குடிகொண்டு விட்டபடியால் ‘தகவல்களைச் சேகரிப்பது அறிவு’ என்ற பழைய பல்லவி பழுதாகிவிட்டது.
கூடுதலாகத்
தகவல்களைத் தேடிக் கொண்டிருந்தது அறிவு என்பது அபத்தமாகி, இன்று நாம் தேடாமலேயே பல தகவல்கள் தொடர்ந்து
நம்மைச் சூழ்ந்து நின்று நம்மையே அலைக்கழித்து விடுகின்றன.
அலைப்பேசியில்
ஒரு தகவலைத் தேட ஆரம்பித்த அடுத்த வினாடியே நாம் தேடுவது தொடர்புடைய பலப்பல தகவல்கள் அடுத்தடுத்து நமக்கு முன்னால் வந்து விழும் நிலையை இன்று காணமுடிகிறது. உதாரணமாக, இயற்கை விவசாயம் குறித்து நாம் அறிய விரும்பி அலைப்பேசியில் தேடினால் அடுத்த நொடி நாம் தேடாமலேயே அந்த இயற்கை விவசாயம் குறித்த பல தகவல்கள் நமது
அலைப்பேசியில் அடுத்தடுத்து நம் கண்முன்பு வந்து போகின்றன. அவ்வாறே ஒரு நபரைக் குறித்து நல்ல தகவல்களைத் தேடினால் அடுத்த நொடியே அவரைப் பற்றிய பலரின் பார்வையில் பல நல்ல தகவல்கள்
வந்து சேர்கின்றன. அவரைப் பற்றிய விமர்சனங்களைத் தேடினால் அதையொட்டி அவரைப் பற்றிய பல விமர்சனங்களாகவே வந்து விழுகின்றன.
இந்தச்
சூழ்நிலையில், மனித மூளை எளிதாகவே சலவை செய்யப்படுகிறது. நாம் தேடுகிற ஒரு செய்தியைக் குறித்து அடுத்தடுத்து அதே போன்று செய்திகள் நமது கண்களில் திரும்பத் திரும்பப் படுவதால், அதுவே அத்துபடியாகி நமது மூளையின் மூலம் ‘அந்தச் செய்தி உண்மையா? பொய்யா?’ என்று நாம் ஆராய்ந்து உணர்ந்து பார்க்காமலேயே நம் ஆழ்மனத்தில் அப்படியே பதிந்து விடுகிறது.
இந்தச்
சூழலில், ‘இன்று அறிவு என்பது எது?’ என்கிற கேள்வி நம்முன் எழுகிறது. இன்று மட்டுமல்ல, என்றுமே அறிவு எனப்படுவது எது என நம் முப்பாட்டன்
வள்ளுவன் தெளிவாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே,
‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள்
காண்ப தறிவு’
(குறள் 423)
என்று
நமக்கெல்லாம் கூறிச் சென்றுவிட்டான். இருப்பினும், தகவல்களைச் சேகரிப்பது அறிவு என்றெல்லாம் நம்பிய நமது கல்விமுறை, அத்தகவல்கள் மலிந்துகிடக்கும் இன்றைய நாளிலும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பதை உணராமலேயே, நமக்கும் உணர்த்தாமலேயே இன்றுவரை நமக்குக் கற்பிக்கப்படுகிறது. இதனால் கேட்கும் எந்த ஒரு தகவலையும் உண்மையா? பொய்யா? என்று ஆய்ந்தறிய நம் நாட்டில் படித்தவர்கள் என்று கூறப்படுகிறவர்கள் உள்பட அனைவரும் பயிற்சி பெறாததால், அப்படிப் பழகாததால், தான் உள்வாங்கிய தகவல்களை எல்லாம் அப்படியே நம்பிவிடும் போக்கு இந்தியச் சமூகத்தில் தாராளமயமாகி இருக்கிறது. இதனால் நம் நாட்டு மக்களின் மெய்ப்பொருள் காணப் பழகாத இந்நிலையைப் பொய்யர்களும் போலிகளும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தையே கைப்பற்றிவிடும் நிலை ஏற்படுகிறது. நமது சனநாயக அடிப்படை உரிமையான ‘ஒருவருக்கு ஓர் ஓட்டு’ என்கிற தத்துவமே களவாடப்படுகிறது.
சில
ஆண்டுகளுக்கு முன்பாக ஒன்றிய அரசின் செய்தித்துறை மந்திரியாக இருந்த தமிழர் ஆ. இராசா என்பவர்,
ஓர் இலட்சத்து எழுபதாயிரம் கோடி அளவிற்கு ‘2ஜி’ அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டார் என்கிற ஒரு பொய்யை ஒன்றிய அரசு அதிகாரி தேசாய் என்பவர் திட்டமிட்டே கொளுத்திப் போட, அதனைத் தொடர்ந்து பல ஊடகங்கள் வழியாக
அது திரும்பத் திரும்ப நமக்கு முன்பு ஒலிபரப்பு செய்யப்பட்டது. ஓர் இலட்சத்து எழுபதாயிரம் கோடி என்பதும், எவ்வளவு பெரிய தொகையை அவ்வளவு எளிதாக ஒருவர் சம்பாதிக்க முடியுமா? என்றெல்லாம் கூட யோசிக்காத இந்நாட்டு மக்கள் அனைவரும் அதை நம்பினர். ஆனால், அந்தப் பொய் ஊதி ஊதி ஊடகங்களால் திட்டமிட்டே பெரிதாக்கப்பட்டு, இந்தியாவில் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது.
இதற்கிடையில்
குற்றம் சுமத்தப்பட்ட ஆ. இராசா தனிநபராக
நின்று நீதி மன்றத்தில் வாதாடி, ‘இது ஆதாரமற்றக் குற்றச்சாட்டு’ என
நீதிமன்றத் தீர்ப்பு பெற்றார். ஆனால், பொய்யைப் பரப்பிய அளவுக்கு அதன்மீது வெளியிடப்பட்ட தீர்ப்பை, அதன் உண்மைத்தன்மையை ஊடகங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லாததால் அத்தகைய தீர்ப்பு வந்த பிறகு இன்றும் கூட அந்தக் குற்றச்சாட்டைப் பலர் நம்பிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
ஆக,
‘மெய்ப்பொருள் காண்பதே அறிவு’ என்கிற தாரக மந்திரத்தைத் தமிழர் நாமும் கூட உணராத காரணமாக, அதற்கேற்ப கல்வி கற்பித்தல் முறை இங்கும் அமையாத காரணமாகப் பகுத்தறிவு பகலவன் தோன்றிய தேசமான தமிழ்நாட்டிலும் சமூக ஊடகப் பிரசாரங்கள் மூலம் மக்களின் மனங்களில் எவர் வேண்டுமானாலும் திட்டமிட்டு ஊடுருவி, எளிதாக ஆதிக்கம் செலுத்தி எளிதாக ஆட்சியைப் பிடிக்க முடிகிறது. மன்னராட்சியில் ஒற்றர்கள் போர்வீரர்களை ஒரு நாட்டிற்குள் ஊடுவுருவச் செய்து, உள்நாட்டில் கலகம் விளைவித்து, ஆட்சியைக் கவிழ்த்து கைப்பற்றுவதுபோல, இன்று மக்களாட்சியில் பொய்த்தகவல்களைத் திரும்பத் திரும்பச் சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் மனங்களில் விதைத்து, மூளையை மழுங்கச் செய்து, அவர்களின் ஓட்டு உரிமையையே கைப்பற்றி ஆட்சி அமைக்க முடிகிறது.
மக்களின்
சனநாயக உரிமையையே பொய்த் தகவல்களால் வேட்டையாட முடியும் என்றால் நமக்குப் படிப்பு எதற்கு? பட்டம் எதற்கு? தேடுவதும் கண்டுபிடிப்பதும்தான் கற்றல்; தேடவைப்பதும், கண்டுபிடிக்கத் தூண்டுவதும்தான் கற்பித்தல் என்கிற புரிதலில், கற்றல் கற்பித்தல் என்கிற கல்வியின் செயல்பாடுகளைப் புரிந்துகொண்டு, கல்வி கற்பிக்கக் கல்வியாளர்கள் முன்வரும்போது இத்தகைய ஆபத்திலிருந்து நம் சமூகம் காப்பாற்றப்படும். அதிலும் ‘எதைத் தேட, எதைக் கண்டுபிடிக்கத் தூண்டுவது?’ என்கிற வினாவை எழுப்பி, உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்கத் தூண்டுவதே கல்வி என்கிற ஒற்றை நோக்கில் கல்விப்பணி செய்தால் அதுவே அறிவியல் மற்றும் ஆன்மிகப் புரட்சி செயலாக மாறும். இன்று திரு அவையின் கல்வி நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாய அறைகூவல்.
மக்களிடம்
அறிவியல் பார்வை ஏற்படுவதுடன், உண்மையை உணரும் ஆன்மிக வழிநடத்தலும் மக்கள்மயமாவதால் பொய்யர்களும், அவர்தம் பொய்மையும் மக்களிடம் தோற்றுப் போய் சாமானிய மக்களின் சனநாயக உரிமை காக்கப்படும். ஆக, கல்விப்பணி மூலம் நாம் முன்னெடுக்கும் ஒரு சிறு மாற்றுச் செயல் மக்களிடம் அறிவியல் பார்வை, ஆன்மிக வளர்ச்சி, சனநாயக உரிமைப் பாதுகாப்பு எனப் பல பயன்பாடுகளை வழங்கும்.
நாம்
முன்னெடுக்கும் சில திட்டங்கள் பல பொய்யர்களின் பொய்மையைச்
சமூகம் உணர வழிவகுக்கட்டும்.