news-details
தலையங்கம்
கேள்விக்குள்ளாகும் தொழில்துறை வளர்ச்சியும், சிதையும் சிறுதொழில் நிறுவனங்களும்

விண்ணை முட்டும் கோபுரங்களும், கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீடுகளின் புள்ளி விவரங்களும் மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதார வலிமையைக் காட்டிவிட முடியாது. உண்மையான பொருளாதாரம் என்பது, எளிய மனிதர்களின் உழைப்பிலும், தெருவோரப் பட்டறைகளிலும், சிறிய தொழிற்சாலைகளிலும், கிராமப்புறக் கைவினைப் பொருள்களிலுமே உயிர்ப்போடு இயங்குகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 30-ஆம் தேதி இந்தியத் திருநாடு தேசிய சிறுதொழில் தினத்தைக் (National Small Industry Day) கொண்டாடுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூர் உற்பத்தியையும் பாரம்பரியக் கலைகளையும் பாதுகாக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (Micro, Small and Medium Enterprises - MSMEs) கௌரவிப்பதே இந்நாளின் நோக்கமாகும்.

ஆனால், இன்றைய சூழலில் இந்தக் கொண்டாட்டங்கள் வெறும் காகித அளவிலான சடங்காக மாறியதுதான் கவலைக்குரிய எதார்த்தம். ‘தொழில்துறை வளர்ச்சிஎன்ற பதத்தில் இன்று ஒன்றிய பா... அரசு முழங்கும் முழக்கங்களுக்கும், களத்தில் சிறுதொழில் முனைவோரின் உண்மையான வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிகவே பெரிது. நாளுக்கு நாள் அது அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான் பேரவலம்.

இந்தியப் பொருளாதாரத்தில் சிறுதொழில்துறை ஆற்றும் பங்கு அளப்பரியது; அது மறுக்க முடியாதது மட்டுமன்று; என்றும் மறைக்க முடியாததும் கூட. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு தொழில்துறை 30 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்களிப்பை அளிக்கிறது என்பதே பேருண்மை. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 45 விழுக்காட்டிற்கும் மேல் வகித்து, நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதே இத்துறைதான். மேலும், விவசாயத்திற்கு அடுத்தபடியாக நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, ஏறக்குறைய சுமார் 11 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதும் இந்தத் துறைதான்.

அவ்வாறே, பெருநகரங்களில் மட்டுமே குவிந்து கிடக்கும் பொருளாதார வாய்ப்புகளைச் சிறு நகரங்களுக்கும், கிராமப் புறங்களுக்கும் கொண்டு சென்று, மண்டலச் சமநிலை வளர்ச்சியை உறுதி செய்வதும் இந்த எளிய வணிகங்களே! மேலும், சுயசார்பு மற்றும் மகளிர் முன்னேற்றம் போன்றவற்றிக்கு வித்திட்டதும் இத்துறையே! அதாவது, கிராமப்புறச் சுய உதவிக் குழுக்கள் முதல் இரண்டாம் கட்ட நகரங்களின் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனங்கள் (Start-ups) வரை, ஏராளமான பெண்களும்-இளைஞர்களும் சொந்தக்காலில் நிற்க இத்துறை பெரும் துணைபுரிகிறது என்பதே உண்மை!

சிறுதொழில் நிறுவனங்கள் நாட்டின் முதுகெலும்புஎன்று வாய்மொழியாகப் போற்றப்பட்டாலும், கடந்த பன்னிரண்டு ஆண்டு காலமாக மத்திய பா... அரசு எடுத்த தவறான மற்றும் தன்னிச்சையான பொருளாதார முடிவுகளால் இத்துறை சந்தித்த பின்னடைவுகள் வரலாற்றில் என்றும் மறக்க முடியாதவை.

குறிப்பாக, 2016-ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட இரவோடு இரவான பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ரொக்கப் பணப்புழக்கத்தை மட்டுமே நம்பி இயங்கிவந்த சிறு, குறு நிறுவனங்களின் மீது தொடுக்கப்பட்ட பெரும் தாக்குதலாகும். தினசரி கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்; மூலப்பொருள்களை வாங்க முடியாமல் ஆயிரக்கணக்கான பட்டறைகள் மூடப்பட்டன. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எளிதாக மாற முடிந்தது; ஆனால், நாட்டின் மூலைமுடுக்குகளில் இருந்த எளிய சிறு வணிகர்கள் மீள முடியாத கடனில் மூழ்கினர்.

மேலும், முறையான தயாரிப்புகள் இன்றி, சிக்கலான வரி அடுக்குகளோடு அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, சிறுதொழில் முனைவோருக்குப் பெரும் சுமையாகவே மாறியது. பெரிய நிறுவனங்கள் கணக்கு வழக்குகளைப் பராமரிக்கத் தனித் தணிக் கையாளர்களை நியமித்துக்கொண்டன. ஆனால், சிறிய கடைகளையும் பாத்திரப் பட்டறைகளையும் விசைத்தறிகளையும் வைத்திருந்த எளிய மனிதர்கள், சிக்கலான கணக்கீட்டியல் (ஆடிட்டிங்) முறைகளாலும், தாமதமான வரித் திரும்பப் பெறல் முறையினாலும் நசுக்கப்பட்டனர்.

அவ்வாறே, அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்த போதிலும், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சிறுதொழில் முனைவோருக்கு எளிய முறையில் கடன் வழங்குவதில் கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன. மேலும், பிணையம் இல்லாக் கடன்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளன. அதேவேளையில், பல்லாயிரக்கணக்கான கோடிகளைப் பாக்கி வைக்கும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் கடன்கள் எளிதில் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இன்றைய ஒன்றிய அரசின் தொழிற்கொள்கை என்பதுஅம்பானி, அதானி போன்ற சில குறிப்பிட்ட கார்ப்பரேட் குழுமங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிஎன்ற கண்ணோட்டத்திலேயே இயங்குகிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம் என அனைத்துத் துறைகளிலும் ஒருசில பெரிய நிறுவனங்களின் ஆதிக்கமே ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல தலைமுறைகளாகத் தொழில் செய்துவந்த சிறு உற்பத்தியாளர்கள், கார்ப்பரேட் அரக்கர்களின் விலைப்போட்டியையும், சந்தை ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர்.

மேலும், உள்ளூர் கைவினைப் பொருள்கள், தறி நெசவு, மட்பாண்டங்கள் மற்றும் பாரம்பரிய உணவு உற்பத்திகள், கார்ப்பரேட்டுகளின் எந்திரமயமாக்கப்பட்ட பொருள்களின் வருகையால் பாரம்பரியக் கலைகள் வீழ்ச்சியுற்று அழியும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளன. சிறுதொழில்கள் அழியும்போது, அவற்றில் பணியாற்றிய பல கோடி உழைப்பாளர்களின் வாழ்வாதாரம் பறிபோய்விட்டது. இது நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

இத்தகைய சூழலில், அரசு தரப்பில்உத்யம் பதிவுத் தளம் (Udyam Portal), ‘பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், ‘Prime Minister\'s Employment Generation Programme (PMEGP)’ போன்ற பல வண்ணமயமான திட்டங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றின் பலன்கள் உண்மையில் எளிய கடைக்கோடி மனிதனைச் சென்றடைகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே!

சிக்கலானஆன்லைன்விண்ணப்பச் செயல்முறைகள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் காரணமாக, உண்மையான சிறு தொழிலதிபர்கள் இத்திட்டங்களின் பலன்களைப் பெறமுடிவதில்லை. வெறும் புள்ளிவிவரக் கணக்குகளைக் காட்டிவளர்ச்சி அடைந்துவிட்டோம்என்று அரசு கூறுவது சுயமரியாதையோடு உழைக்கும் சிறு வணிகர்களைக் கேலி செய்வதாகவே உள்ளது.

இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் மீண்டெழ வேண்டுமானால், அரசு உடனடியாகத் தனது அணுகுமுறையினை மாற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக, சிறு, குறு நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில், பிணையற்றக் கடன்கள் தாமதமின்றிக் கிடைக்க வங்கிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். சிறு வணிகர்களுக்கு ஏற்ற வகையில் ஜி.எஸ்.டி. முறையை மிகவும் எளிமைப்படுத்தவேண்டும்; சிறுதொழில்களுக்கான வரி விகிதங்களைக் குறைக்கவேண்டும்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் மாபெரும் ஆதிக்கத்திலிருந்து உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கச் சிறப்புச் சந்தை மண்டலங்களையும், கொள்முதல் முன்னுரிமைகளையும் அளிக்க வேண்டும். மேலும், பருத்தி, இரும்பு, நெகிழி போன்ற மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, சிறு நிறுவனங்களுக்கு நியாயமான விலையில் மூலப்பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

இறுதியாக, சிறுதொழில் என்பது வெறும் வணிகம் மட்டுமல்ல; அது பல கோடி குடும்பங்களின் நம்பிக்கை, சுயமரியாதை மற்றும் வாழ்வாதாரம். சிறு தொழில்களை நசுக்கிவிட்டு, அம்பானி, அதானி போன்ற ஒருசில பன்னாட்டு நிறுவனங்களை மட்டும் வாழவைக்கும் தொழில் வளர்ச்சி ஒருபோதும் நீடித்த, நிலையான வளர்ச்சியாகாது. தேசிய சிறுதொழில் தினமான இந்த ஆகஸ்டு 30-இல்வெறும் புகழாரங்களோடு நின்றுவிடாமல், சிறுதொழில் முனைவோரின் உண்மையான வலியை உணர்ந்து அரசு செயல்படவேண்டும்.

சிறுதொழில் வாழ்க!’ என்ற முழக்கம் காகிதங்களில் முழங்குவதைவிட, பட்டறைகளின் சத்தத்திலும், தொழிலாளர்களின் இன்முகத்திலும் எதிரொலிக்கவேண்டும். அப்போதுதான் இந்தியாவின் உண்மையான பொருளாதாரம் நிமிர்ந்து நிற்கும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்