இயற்கை, தன்னைத் தானே தகவமைக்கும் வல்லமை கொண்டது. மரம், செடி, கொடிகள் இயற்கையின் இறைப்படைப்பின் ஆச்சரியங்கள். உதாரணமாக, நாவல் மரங்களின் வேர்கள் பூமியின் வறட்சியை உள்ளுணரும். தண்ணீர் பஞ்சத்தின் அறிகுறிகளை அடையாளம் காணும். ‘தன் மரம் அழியும்; தன் வம்சங்கள் தொடராது’ என நாவல் மரம் அறியும். அதுபோன்ற ஆண்டுகளில், வறட்சிக்கு முன் இயற்கையில் இலை, கிளை வளர்ச்சி நிறுத்தப்பட்டு, நாவல் பழங்களை விதைக்காக அதிக அளவில் உற்பத்தி செய்யும். பழங்கள் கொத்து கொத்தாய் அளவுக்கு அதிகமாகக் காய்க்கும்.
2026-ஆம் ஆண்டில்
நாவல் பழங்கள் தெருக்களில் குவியல் குவியலாக விற்பனைக்கு வந்தன. நாமும் நடைப்பயிற்சியின்போது கவனித்தோம். பருவம் தவறியும் நாவல் பழங்கள் மண்ணில் உதிர்ந்து கிடக்கின்றன; யாரும் கவனியாத ஒன்றையும் கவனித்தோம். பாதாம் மர சிவப்புக் கொட்டைகளும்
அதிக அளவில் தரையில் கொட்டிக் கிடக்கின்றன. நதிகள் கூட ஆயிரம் ஆண்டுகளில் தங்கள் ஓட்டப் பாதையைப் புதிதாக மாற்றும் எனும் அறிவியல் அதிசயம் நம் கற்பனைக்கு எட்டாத ஒன்றாகும்.
திருவிவிலியத்தின்
தொடக்க நூல் 41:6-7 வறட்சியின் அடையாளத்தை, ஒரு கனவு வழி இவ்வாறாக முன்னிறுத்துகிறது. “கீழைக்காற்றினால் தீய்ந்துபோன கதிர்கள் தோன்றின; அந்தப் பதரான கதிர்கள் ஏழும், செழுமையான முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டது.”
ஆம்,
வறட்சியும் செழுமையும் இயற்கையின் இரு பக்கங்கள். தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்பது காவிரிப் படுகை சார்ந்த நெல் விவசாயமாகும். இது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி நதிநீர் பாசனப் பகுதிகளாகும். தமிழர்கள் உலகிற்கே ஆண்டு முழுவதும் விவசாயம் செய்ய முடியும் எனக் கற்பித்தார்கள். தெற்காசிய நாடுகளை விவசாயமயமாக்கியதில் தமிழரின் பங்கு வரலாற்றுச் சிறப்பானதாகும்.
காவிரி
நீரை நம்பிய டெல்டா பகுதி விவசாயம் 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு நெல் விளைச்சல் உற்பத்தியை உள்ளடக்கிய ஒன்றாகும். டெல்டா நெல்
விவசாயம் குறுவை, சம்பா, தாளடி என்ற முப்போக விவசாயமாகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை 105 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை, நடைபெறும் முதல் போக விவசாயம் ‘குறுவை’ விவசாயமாகும். குறுவை நெல் விவசாயம் செய்யவேண்டுமெனில், மேட்டூர் அணைக் கட்டிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடப்படவேண்டும்.
2026 ஜூன் 11-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையில் 120 அடி கொள்ளளவில் 80 அடி அளவே நீர் இருந்தது. மழைப் பொழிவும் சரியாக இல்லாத நிலை உள்ளது. பாசனம் தவிர பல கூட்டுக் குடிநீர்
திட்டங்களுக்கும் அணை நீர் மிகத் தேவையான ஒன்றாகும். இன்று ஜூலை 25 அன்று 75 அடியாக உள்ளது. மேட்டூர் அணை கர்நாடகாவில் திறந்துவிடும் நீரின் அளவைப் பொறுத்தே நிறையும்.
மழைப்பொழிவு இருந்து, அதிக நீரும் இருந்தால் மேட்டூர் அணைக்கு கர்நாடகா அரசு நீர் திறந்துவிடும். இல்லையெனில் ‘எங்களிடமே குடிநீருக்குத்தான் தண்ணீர் உள்ளது’ எனக் கூறி மறுத்துவிடும்.
2026 ஜூலை 22-ஆம்
தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் நடப்பாண்டு ஜூன், ஜூலை மாதங்களுக்கான தமிழ்நாட்டுப் பங்கீட்டு நீரை கர்நாடக அரசு திறந்துவிடவேண்டும் என வலியுறுத்தினர். வழக்கம்போல் கர்நாடக
அரசு ‘எங்களுக்கே வறட்சி’ எனக்கூறி மறுத்துவிட்டது. 2026, ஜூலை 28-ஆம் தேதி அடுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் என அறிவித்து விட்டார்கள்.
காவிரி
நீர் குறித்துப் பேசவேண்டிய அரசியல் நிறைய உள்ளது; ஆனால், பேச வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் குறுவைப் பாசனம் இல்லை என்றாகிவிட்டது. நிலத்தடி நீரும் 300 அடிக்குக் கீழ் சென்று உப்பு நீராகிவிட்டது. ஆடி மாதங்களில் கரைபுரண்டு ஓடும் காவிரி நதி இல்லை. டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிட்டன. கால்நடைகளுக்குக் குடிக்க நீர் தேடும் அவலம் விவசாயிகளின் பெரும் சோகமாகும். வயல்வெளிகள் பாளம் பாளமாக வெடித்து, வறட்சியின் தீவிரம் பேசுகிறது. அரிசி விலை ஜூலை 25 அன்றைய நிலவரப்படி கிலோ ஒன்றுக்கு ரூபாய் 15 உயர்ந்துள்ளது. இவ்வளவு நெருக்கடிகள் இருந்தும், டெல்டாவின் நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூடைகள் (சிப்ப அளவிலானது) அரவைக்குச் செல்லாமல் பல இடங்களில் திறந்தவெளியில்
பாதுகாக்கப்படுகின்றன.
உலகளாவிய
‘உணவுப் பஞ்சம்’ என்ற வல்லுநர்களின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மாற்றாக ‘பூச்சி உணவுகள்’ என்ற கருத்து உருவாக்கம் உலக அளவில் பேசப்படுகிறது. இது குறித்த கட்டுரைகளும் கருத்தரங்குகளும் உலகின் பெரும் கவனம் பெற்றுள்ளது. தேசங்களின் விவசாயமும், மக்களின் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. உலகளாவிய பருவநிலை மாற்றம் என்ற ‘எல் நினோ’ என்பதே இதன் முக்கியக் காரணியாகும். இது ஐந்து ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் பருவநிலையைப் பாதிப்படையச் செய்வதாகும். புவி வெப்பமயமாதலின் பிரதிபலிப்பே ‘எல் நினோ’ என்பதாகும்.
இயற்கையாகவே
கடல், வளி மண்டலச் சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல், உலகின் ஒரு பகுதியில் வெள்ளப்பெருக்காகவும், மறு பகுதியில் வறட்சியாகவும் மாறும். கடல் மட்டமும், பூமியின் வெப்பமும் உயரும். வெப்பமயமாதலால் மனிதர்களுக்கு வித்தியாசமான நோய்களும் புதிதாக ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்தியா
போன்ற நாடுகளில் பல்வேறு பூமி அமைப்புகளும் தட்ப வெப்ப நிலைகளும் காணப்படுகின்றன. வறட்சியும் வெள்ளப்பெருக்கும் ஒரே நாளில் இந்தியத் தேசத்தின் தலைப்புச் செய்திகளாக உள்ளன. பாரதி காலம் முதல் ‘கங்கையையும் காவிரியையும் இணைப்போம்’
என்ற வெற்று முழக்கங்கள் அரசியலில் காணப்படுகிறது. விவசாயத்தின் அடிப்படையே நீர் என்ற உண்மையும் அரசுகளால் மறுக்கப்படுகிறது.
நம்
தேசம் ‘எல் நினோ’வால் பாதிக்கப்படும் ஐந்தாண்டு அபாயம் உள்ளதால், அரசுகள் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். உணவுப் பதுக்கலையும், கள்ளச் சந்தையையும்
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். அரசு உணவுப்பொருள் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, தானிய சேமிப்பில் உறுதித்தன்மை கொண்டிருக்கவேண்டும். அதற்கேற்ப, தன் ஏற்றுமதி, இறக்குமதியில் தேவையான கணக்கீடுகளில், புள்ளி விவரங்களில் தெளிவுவேண்டும். அடிப்படை நேர்மைவேண்டும். தேசத்தில் கையறு நிலையில் உள்ள மக்கள் என்ன செய்ய முடியும்? வாருங்கள், அனைவரும் ஒருங்கிணைந்து, நல்ல பருவங்களுக்காக, நல்ல காலநிலைகளுக்காக, நல்ல பருவமழைக்காக இறைவேண்டல் செய்வோம்.