news-details
சிறப்புக்கட்டுரை
துயில் எழுப்பத் தூது வரும் ‘நம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழ்’

நாள்தோறும் விடியலின் வெளிச்சமாய், நற்செய்தியின் முழக்கமாய், உண்மையை விளக்கும் அறத்தின் குரலாய்...” காலத்தின் சுவடுகளைத் துல்லியமாகப் பதிப்பித்து, கத்தோலிக்கத் திரு அவையின் இறையாட்சி மதிப்பீடுகளையும் இறையியல் சிந்தனைகளையும் உலகியல் நிகழ்வுகளையும் உடனுக்குடன் மக்கள் கரங்களில் கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியில், ‘நம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழ்(Nam Vazhvu

E-Newspaper) தனது முதலாண்டு நிறைவை இவ்வாண்டு ஆகஸ்டு திங்கள் 15-ஆம் நாள் மகிழ்வோடு கொண்டாடுகிறது.

எண்மத் தொழில்நுட்ப யுகத்தில் ஒரு புதிய தொடக்கத்தைக் கண்டு, ஓராண்டு காலமாகத் தொடர்ந்து தொய்வின்றி வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த நாளிதழ், நவீனத் தமிழ் இதழியலில் ஒரு புதிய வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் உலகம் ஒரு சிறு கிராமமாகச் சுருங்கிவிட்ட சூழலில், தகவல்களை விரைவாகவும், துல்லியமாகவும், அறநெறி சார்ந்தும் பெறவேண்டியது இக்காலகட்டத்தின் கட்டாயமாகும். குறிப்பாக, திரைகளில் தகவல்களைத் தேடும்டிஜிட்டல் தலைமுறை(Digital Natives) மற்றும்ஜென்-சி(Gen-Z) இளைஞர்களுக்கு, அவர்களின் மொழியிலேயே நற்செய்தியையும், நாட்டு நடப்புகளையும், சிந்தனைத் தெளிவையும் வழங்குவது இன்றியமையாத தேவையாக உருவெடுத்தது.

அந்தத் தேவையை உணர்ந்து உதித்ததே இந்தநம் வாழ்வு மின் - நாளிதழ்.’ இது வெறும் மின்னஞ்சல் செய்தித்தாள் மட்டுமல்ல; உறங்கிக்கிடக்கும் சமூக மனச்சாட்சியைதுயில் எழுப்பத் தூது வரும்அறிவு ஒளிவிளக்கு! இந்த மின்னஞ்சல் நாளிதழ் வாசகர்களின் அன்றாட அறிவுப் பசியைத் தீர்க்கும் வண்ணப் பேழையாகத் திகழ்வது இதன் தனிச்சிறப்பு! திருத்தந்தையின் மேய்ப்புப்பணிச் செய்திகள், வத்திக்கானின் அறிவிப்புகள், ஆசிய மற்றும் இந்தியத் திரு அவையின் ஆன்மிக நிகழ்வுகள் போன்றவை உடனுக்குடன் பகிரப்படுகின்றன. இத்துடன், உலக அரசியல் நகர்வுகள், இந்திய மற்றும் தமிழ்நாடு அரசியல் தளங்களில் நிகழும் சமூக-பொருளாதார மாற்றங்கள் குறித்த நடுநிலையான, கூர்மையான பார்வைகள் இடம்பெறுகின்றன.

மேலும், இளம் தலைமுறையின் எதிர்காலத்தை வளப்படுத்தும் தொழில் வழிகாட்டுதல்கள், வேலைவாய்ப்புச் செய்திகள் மற்றும் திறன் மேம்பாட்டுக் குறிப்புகள் முன்னுரிமை பெறுகின்றன. இத்தகைய சிறப்புகளுடன், தமிழ்நாடு தலத் திரு அவையில் இன்றைக்குப் பெருமையுடன் பேசுபொருளாக மாறும் அளவுக்கு, இது அச்சு ஊடகக் கலையை எண்மத் தொழில்நுட்பத் தளத்தில் வெற்றிகரமாக மறுவடிவமைப்பு செய்து, ஓர்எண்மத் தொழில்நுட்ப அச்சுப் புரட்சியை(Digital Printing Revolution) நிகழ்த்தியுள்ளது என்றால் அது மிகையல்ல.

2025-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15-ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த மின்னஞ்சல் நாளிதழ், கடந்த ஓராண்டு காலத்தில் அடைந்துள்ள வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. புள்ளி விவரங்களின்படி, இவ்விதழ் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நேரடியாகச் சென்றடைந்துள்ளதுடன், 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்களின் இதயங்களை வென்றுள்ளது. நாள்தோறும் விடியற்காலையில் மின்னஞ்சல் கலத்தில் புலனம் (WhatsApp) தளத்தை அலங்கரிக்கும் இந்த இதழ், இலட்சக்கணக்கான மக்களின் காலைப் பொழுதை நற்செய்தியோடு தொடங்கும் நற்பழக்கமாக மாற்றியுள்ளது.

இந்த மகத்தானடிஜிட்டல் மறைபரப்புப் பணி(Digital Evangelization)  சாத்தியமாவதற்கு மூலக்காரணமாக விளங்கியதுடன், இத்தகைய நவீன ஊடகப் புரட்சிக்குத் தங்களின் மேலான வழிகாட்டுதலையும், தொடர் ஊக்கத்தையும் வழங்கி வரும் தமிழ்நாடு ஆயர் பேரவைக்கும் (TNBC), அச்சு ஊடகப் பணிக்குழுவின் தலைவர் மேதகு ஆயர் முனைவர் லூர்து ஆனந்தம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்புதிய மின்னஞ்சல் நாளிதழை வடிவமைத்து, வெற்றிகரமாகத் தொடங்குவதற்குத் தலைமை தாங்கி உழைத்த பேராசிரியர் முனைவர் திரு. பெர்னாட் டி சாமி அவர்களுக்கும், ஊடக உலகில் புகழ்பெற்ற வல்லுநரும், எம் அறிவுசார் ஆலோசகருமான, மேனாள் மக்களவை உறுப்பினர் பேராசிரியர் முனைவர் திரு. ரபி பெர்னார்ட் அவர்களுக்கும், எம்மோடு இணைந்து களப்பணியாற்றும் துணை ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள், வடிவைப்பாளர், அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இறுதியாக, ‘விடியலின் ஒளிக்கீற்றாய், உண்மையின் குரலாய்புறப்பட்டு வந்துள்ளநம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழ்தொடர்ந்து தமிழ் கத்தோலிக்கச் சமூகத்தையும் கடந்து, பொதுவெளி குடிமைச் சமூகத்திலும் சிந்தனைத் தளத்தை விரிவுபடுத்தும் என்பதில் ஐயமில்லை. எண்மத் தொழில்நுட்ப உலகின் சவால்களை வென்று, தொடர்ந்து நற்செய்திப் பணியில் புதிய சிகரங்களைத் தொட, ‘நம் வாழ்வு மின்னஞ்சல் நாளிதழுக்குபேராதரவு நல்கிட உங்களை அன்போடு வேண்டுகிறேன்

முதன்மை ஆசிரியர்