நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் எனும் சிறிய கிராமத்தை அடுத்த கடற்கரைப் பகுதியில் ஒன்றிய அரசு இரண்டு அணுமின் நிலையங்கள் அமைத்து, மின்சாரம் தயாரித்து வருகின்றது என்பதை நாமெல்லாம் அறிவோம். அணுமின் திட்டங்களால் ஏற்படும் மோசமான பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு அப்போதே பல்வேறு தரப்பினரும் தீவிரமான எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர். தற்போது கூடுதலாக நான்கு அணுமின் நிலையங்கள் எழுப்பப்பட்டு அவை நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில்,
1000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள முதல் அணுமின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்கிற செய்தி நம்மைக் கலங்கடிக்கின்றது. இப்படி அணுமின் திட்டங்களால் அவ்வப்போது எழும் விபத்துகளும், அதனால் உருவாகும் ஆபத்துகளும் எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்க, அணுமின் திட்டங்கள் பயனளிக்கக்கூடியவையா? பாதுகாப்பானவையா? திட்டத்தால் நன்மைகள் விளையுமா? அல்லது தீமைகள்தான் மிஞ்சுமா? என்பதையெல்லாம் அறிவியல் கண்கொண்டு ஆராய்வோம்.
அணுமின்சாரம்
தயாரிப்பது
எப்படி?
அணுமின்
நிலையங்களால் ஆபத்தா? ஆபத்தில்லையா? என ஆராயும்முன், அணுமின்சக்தி
எப்படி உருவாக்கப்படுகிறது? என்பது குறித்து சிறிது தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அணுவில் உள்ள உள்கருவில் நியூட்ரான் மோதினால், அணுக்கருவினுள் அது பல நியூட்ரான்களாகப் பிறப்பெடுக்கும். இவ்வாறு உண்டான
நியூட்ரான்கள் அணுக்கருவில் உள்ள நியூக்ளியஸில் மோதி தொடர் செயல்பாட்டை உருவாக்குகிறது. இத்தொடர் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி மின்சக்தி உருவாக்கப்படுகிறது. கட்டுப்படுத்தவில்லையென்றால்
அதன் விளைவுதான் அணுகுண்டாகும்.
அணுக்கரு
பிளவுபட்டு நியூட்ரான் உண்டாகும்போது அது பெருமளவு சக்தியாக வெளியேறுகிறது. இச்சக்தி வெப்ப சக்தியாக வெளியேறுகிறது. இவ்வெப்பத்தை வெப்பாற்றியாகச் செயல்படும் தண்ணீர் கிரகித்து நீராவியாக மாறுகிறது. நீராவி சக்தி, சக்கரங்களின் ஜெனரேட்டர் துணை கொண்டு மின்சக்தியாக மாறுகிறது.
பல்வேறு வழிகளில்
ஆபத்து
அணுமின்
நிலையத்தில் பல காரணங்களினால் விபத்துகள்
ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக, விபத்துகள் ஏற்படாதவாறு நூற்றுக்கு நூறு பாதுகாப்பான முறையில் அணு உலைகளை உருவாக்குவது இயலாத காரியம் என்று சொல்லப்படுகின்றது. நீர் கொண்டு செல்லப்படும் குழாய்களில் கோளாறு ஏற்பட்டு பேராபத்துகள் நடக்க வாய்ப்புண்டு. ஆலையில் வெடிப்புகள் ஏற்படவும் செய்யலாம். இயக்கும் ஆள்களின் கவனக்குறைவாலும் ஆபத்து ஏற்பட வழியுண்டு. வால்வுகள் சரியாகப் பொருத்தப்படவில்லை என்றாலும் ஆபத்துகள் ஏற்படலாம். தேவையான சக்திபெற, விளைவுத் தொடர்புகளைக் கட்டுப்படுத்தும்போது வெப்பம் அதிகரித்து வெடிக்கவும் செய்யலாம்.
பாதுகாப்பில்லாத
கழிவுச்
சேமிப்பு
அணுமின்
உலைகள் பாதுகாப்பாக இருந்தாலும் கூட அணுமின் நிலையங்களிலிருந்து உண்டாகும் கழிவுப் பொருள்களை ஆபத்தில்லாத முறையில் அகற்றுவதற்கான அறிவியல் இதுவரையில் உலகில் இல்லை. பொதுவாக, அவற்றை ஈயத்தாலான பெரிய டிரம்களில் அடைத்துக் கடலில் போடுவார்கள் அல்லது பூமிக்கடியில் புதைத்து விடுகிறார்கள் அல்லது சிமெண்ட் தொட்டிகளில் மூடி பூமியில் புதைக்கின்றனர். கழிவுப்பொருளில் உள்ள கதிரியக்கம் 20,000 ஆண்டுகளுக்கு மேல் செயலாற்றல் உள்ளது என்று சொல்லப்படுகின்றது. எனவே, கழிவுப் பொருள்களை எதில் அடைத்து கடல், பூமி இவைகளுக்குள்ளே போட்டாலும், எதற்குள் அடைக்கப்பட்டிருக்கிறதோ அவற்றின் ஆயுளைவிட கதிர் இயக்கங்களின் ஆயுள் கூடுதலாகும். பெரும் பணச்செலவில் உருவாக்கப்படும் அணுமின் நிலையங்களிலிருந்து வெறும் 30 ஆண்டுகளுக்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கின்றது. அதற்குப் பின் அதன் கழிவுகளைப் பாதுகாக்க எவ்வளவு காலம் செலவிடவேண்டியுள்ளது?
மனித நலனுக்கு
எதிரி
ஆலைகளில்
விபத்துகள் ஏற்பட்டு கதிர்வீச்சு ஏற்படுமானால் பெருமளவு மரணம் ஏற்படுவதோடு, நுரையீரல் புற்றுநோயும், மரபியல் நோய்களும் உண்டாகும். கருவில் உள்ள சிசுக்களையும் விட்டு வைக்காது இக்கதிர்கள். இக்கதிர்வீச்சு ஏற்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு விவசாயம்
செய்ய முடியாதபடி நிலங்களின் தன்மை மாறி, மயான பூமியாகிவிடும். அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் 30 கிலோமீட்டர் தூரத்திற்குக் குடியிருப்புகள் இருக்க, வாஷிங்டன் மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளில் கதிரியக்க அயோடின் கலந்துவிட்ட புல்வெளிகளில் மேய்ந்த பசுக்களின் பாலைப் பருகியதால் 20,000 குழந்தைகள் மிகையான கதிர் வீச்சினால் தாக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடலில் கொட்டப்படும் அணுமின் நிலையங்களின் கழிவுகளால் கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
அதிகபட்ச செலவு
2007-ஆம் ஆண்டிற்கு
முந்தைய கணக்கீட்டின்படி ஒரு யூனிட் மின்சாரத்தை நீரிலிருந்து உற்பத்தி செய்ய ஆகும் செலவு 15 பைசா என்றால், அதே அளவு மின்சாரத்தை நிலக்கரியால் உற்பத்தி செய்ய 35 பைசா ஆகிறதாம். ஆனால், அதே ஒரு யூனிட் மின்சாரத்தை அணுவில் இருந்து உண்டாக்க ஆகும் செலவு 1 ரூபாய் 12 காசுகள். அதுவும் கூடங்குளத்தில் உற்பத்தி தொடங்கப்பட்ட 2007-ஆம் ஆண்டில் 3 ரூபாய் 8 காசுகள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இப்போது உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்திருக்குமல்லவா!
அப்போதே பிரான்ஸ் நாடு அணுமின் நிலையங்களினால் 4,480 கோடி கடன்பட்டிருந்ததாகத் தெரிய வந்தது. மற்றவற்றைவிட அதிகபட்ச செலவாகும் அணுமின்சக்தியை உருவாக்க உலக நாடுகள் ஏன் மிகுந்த ஆர்வம் காட்டவேண்டும்? ஒருவேளை அணுகுண்டு தயாரிக்கப் பயன்படும் புளூட்டோனியத்தை அதன் கழிவுகளிலிருந்து பெற முடியும் என்பதால்தானோ என்ற சந்தேகம் வருகிறது.
கூடங்குளத்தில்
விபத்து
நேர்ந்தால்...
1,110 மெகாவாட் மின்
உற்பத்தித் திறனுள்ள ஆலை ஒன்றில் விபத்து ஏற்பட்டால் என்ன நிகழும் என்பது குறித்து இங்கிலாந்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் கூடங்குளத்தில் விபத்து நேர்ந்தால் என்ன ஆகும் என்று ஆராய்ந்தால், விபத்திற்குப் பிறகு ஆலையிலிருந்து 115 கி.மீ. தொலைவிற்குட்பட்ட
நாகர்கோவில், பணகுடி, நாங்குநேரி, திருச்செந்தூர், சாயர்புரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் முதலிய ஊர்கள் பெரிய அளவிலும், 140 கி.மீ. தொலைவிற்கு
உட்பட்ட சாயல்குடி, ஒத்தக்காடு, சாத்தூர், வாசுதேவநல்லூர் முதலிய ஊர்கள் ஓரளவிற்கும் கதிர்வீச்சால் பாதிக்கப்படக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சையளிக்க 250 கோடி ரூபாய், வீட்டு வசதிகள் போன்ற புனர்வாழ்வுத் திட்டங்களுக்கு 250 கோடி ரூபாய், விவசாயத் தொழில் நஷ்ட ஈட்டுக்கு 500 கோடி ரூபாய், மற்ற தொழில்களுக்கு நஷ்ட ஈடாக 300 கோடி ரூபாய், புதிய மின் நிலையத்தைக் கட்டி மின்சார வசதியை மீண்டும் ஏற்படுத்தித் தர 1500 கோடி ரூபாய்... ஆக மொத்தம் குறைந்தபட்சம்
4000 கோடி ரூபாய் வீண்செலவாகும் என்று அந்த ஆய்வறிக்கை மேலும் கூறியது. இப்போது கணக்குப் பார்த்தால் இந்த வீண்செலவுகள் பல பத்தாயிரம் கோடிகளைத்
தாண்டும் என்றும் அஞ்சப்படுகிறது.
முன்னெச்சரிக்கையே
பாதுகாப்பு
இரஷ்யாவின்
செர்னோபில் விபத்து, அமெரிக்காவின் திரிமைல் ஐலேண்ட் விபத்து ஆகியவை உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்ட ஆலை விபத்துகளாகும். அணுமின் நிலையங்களால் வரும் ஆபத்தை உணர்ந்தே 1974-ஆம் ஆண்டிற்குப் பின்னால் புதிய அணு உலைகள் அமைப்பதற்கான 140 அனுமதிகள் உலகில் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. ‘இவ்வளவு ஆபத்துகள் நிறைந்த அணுமின் திட்டம் வழியாக மின்சாரம் தயாரிக்க வேண்டுமா?’ என்ற எண்ணம் மக்கள் மனத்தில் எழுவது நியாயமானதே. ஓர் ஆணுக்கு சம்சாரம் எவ்வளவு முக்கியமோ, அதைப்போல மனிதகுலத்திற்கு மின்சாரம் முக்கியம்தான். பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியின் அளவைப் பெருக்கிக் காட்டவேண்டிய அவசியம் அரசிற்கு இருக்கின்றது. அதேசமயம், மக்கள் மனத்தில் எழுந்துள்ள பயத்தைப் போக்கவேண்டிய கடமையும் இருக்கிறது.
மின்சாரம்
அதிக அளவில் தேவைப்படும் இக்காலச் சூழ்நிலையில், அணுமின் திட்டங்களால் கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்ப அனுபவங்களை மனத்தில் வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் கவனமாகவும் முன்னெச்சரிக்கையாகவும் செயல்பட அரசு முன் வந்தால், கூடங்குளம் திட்டத்தை ஏற்கலாம். எந்தத் தீமையும் ஏற்படாத வகையில் திட்டத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாது போனால், அரசு பொதுமக்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
அணுமின்சாரத்
தயாரிப்பை விட்டுவிட்டு காற்றாலை மின்சாரம், கடல்நீர் மின்சாரம், சூரிய சக்தி மின்சாரம் போன்ற மரபுசாரா மின் உற்பத்தியைத் திட்டமிடுவதில் அதிக கவனம் செலுத்தவேண்டும். மனிதகுலத்திற்கு மின்சாரம் முக்கியம்தான்; ஆனால், அந்த மின்சாரம் ‘ஷாக்’ அடித்துவிடக் கூடாதல்லவா!