news-details
சிறப்புக்கட்டுரை
அழகு என்பதை அளவிடுவது யார்? (ஏற்றம் தரும் எண்ணங்கள் – 01)

அழகு எனும் வார்த்தையைக் கேட்டதுமே நம் மனத்திற்குள் ஒரு குதூகலம் வந்து விடுகிறது. அப்படி என்னதான் அந்த அழகிற்குள் ஒளிந்து இருக்கிறது? அது எப்போதுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும் உன்னதம் என்பதால், அதைப் பற்றிய தேடலும், அதை ஒட்டிய கவிதைகளும் கற்பனைகளும் கதைகளும் சிந்தனைகளும்... இன்னும் சொல்லப் போனால் தத்துவங்களும் தங்கு தடையின்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி இல்லவே இல்லை.

வெறுங்கல் நமக்குக் கரடுமுரடாகத் தெரிகிறது. அந்தக் கல்லுக்குள் ஒளிந்திருக்கும் சிற்பம் நமக்கு அழகாகத் தெரிகிறது. அந்தச் சிற்பத்தைக் கல்லுக்குள் இருந்து எழுப்பிய மனிதன் அழகுற இல்லையென்றாலும், அவனது எண்ணம் அழகுற இருந்ததால் சிற்பமும் அழகுற அமைந்தது. இதில் ‘எது அழகு?’ எனும் வரையறை மாறிக்கொண்டே இருக்கிறது.

எனக்கு அழகாகத் தோன்றுவது மற்றொருவருக்கு அழகாகத் தோன்றாது. அழகு என்பது கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் ஓர் அபூர்வப் புதையல் போலத் தேடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேடலின் ஆழத்தில் ஒரு கேள்வி மெதுவாய் மிளிர்கிறது. அழகை அளப்பவர் யார்? மேலும், அழகைச் செதுக்குவது யார்? ஒன்றின்மீது வைத்திருக்கும் எண்ணங்களால் அது அழகாகத் தெரிகிறதா? அல்லது அந்த அழகால் நம் எண்ணங்கள் அழகாகிறதா? என்பதுதான்.

முன்னொரு காலத்தில் சில தத்துவஞானிகள், “அழகு என்பது நிலைத்து நிற்கும் அழியாமை; மேன்மையைத் தாண்டி நிற்கும் இலட்சிய வடிவம் என்று கூறினர்.

ஒரு சிலையின் ஒழுங்கான சமநிலை, இசையின் இனிய ஒற்றுமை அல்லது ஒரு கோட்பாட்டின் நயமான அமைப்பு... இதுதான், இப்படித்தான் என்று அழகைக் கணக்கிட்டுக் கூறுவது கடினம். எதையும் அதை நோக்கும் கண்கள் மற்றும் எண்ணங்கள் அடிப்படையில் இந்த அழகு எந்த ஒரு வரைமுறைக்குள்ளும் இல்லாமல் உருமாறிக்கொண்டே இருக்கும் ஒரு வடிவம். ஆனால், வரலாறு வேறு ஒன்றைச் சொல்கிறது. மனித விருப்பங்கள் சில ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கும். அதன் அடிப்படையில் அழகைப் பற்றிய பார்வையும் மாறிக்கொண்டே இருக்கின்றது. ஒரு காலத்தில் அழகாகக் கருதப்பட்டவை பின்னொரு காலத்தில் கண்டுகொள்ளப்படாமலே மாறிவிடுகிறது. மிகச்சிறந்த கலையாக, ஓவியமாகக் கருதப்பட்டவை பின்னொரு காலத்தில் மக்கள் கவனம் பெறாமல் வீணாகிவிடுகிறது. முன்பு உடல் பருமனோடு இருந்தவர்கள் அழகாகத் தெரிந்தார்கள்; தற்போது மெல்லிய தேகம் கொண்டவர்கள்தான் அழகோவியங்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.

இந்த மாற்றம் எப்படி? காலமும் மனித எண்ணங்களும் அவ்வப்போது தனது பிடியை, பார்வையை மாற்றிக்கொண்டே இருக்கும். ஒரு சமூகத்தில் தேகம் வெளிர் நிறத்தில் இருப்பது அழகுறக் கொண்டாடப்படும்; மற்றொன்றில், கருகரு கார்மேக நிறம் கவனிக்கப்படும். அதையதை அவரவர் பார்வையிலே கண்டு மகிழ்வதுதான் பேரழகு!

இதில் ஏன் இந்த அளவீடு வந்து உள்ளே புகுந்து சண்டையிடுகிறது? இது போதாதென்று ஊடகங்கள் தங்களின் சில புனைவுகளாலும், திட்டமிட்டத் தரநிலைகளாலும் நம் பார்வையை நம்மை அறியாமலே திருடி, ‘இதுதான் அழகு என்று நம்மை நம்பவைத்து, மனித இனத்தின் பன்முகப் பண்புகளைப் புறக்கணிக்கும் அளவுக்கு அழகின் வரையறையைச் சுருக்குகின்றன. ஆனால், உண்மையான அழகின் அளவுகோல் தனிப்பட்டவர்களின் கருத்துகளில் அல்லாமல், அதை நாம் அனுபவிக்கும் உள்ளார்ந்த எண்ண அதிர்வில்தான் அடங்கியுள்ளதாம்!

  குழந்தையின் அழுகுரல், குளிரில் நடுங்கும் குரல், கடலலை, அந்தக் கடலலை மோதிப் பாறைகள் எழுப்பும் சத்தம், கடற்கரைக் காற்று, வெண்பனி நிலவு, கன்னிப் பெண்ணின் கடைக்கண் பார்வை, நாம் மதிக்கும் ஒருவரின் கரிசனப் பார்வை... இவை எதுவும் அழகு எனும் அளவீட்டில் பொருந்தாது. ஆனால், நம்மை அழகுற அமைதிப்படுத்தி ஆழமாக உணர உதவுகிறது. இவ்வகையில், அழகு என்பது உலகமும், நம் உள்ளமும் நடத்தும் ஓர் இரகசிய உரையாடல். ஒவ்வொரு பார்வையாளருக்கும் அது தனித்துவமானது. இதுதான் - இது மட்டும்தான் அழகு என ஒன்றை நம்முள் திணிக்கும்போது, அதைப்பற்றி நாம் மனத்தில் வைத்துள்ள கொஞ்ச நஞ்ச மதிப்புகூட இல்லாமல் போய்விடும். அழகு என்பது எண்ணமும் உள்ளமும் ஒருசேர இணைந்து இடமளிக்கும் ஓர் அருங்கொடை!

நமக்கெல்லாம் தெரிந்த ‘லைலா-மஜ்னு கதையில், தனது இளவரசன் காதலித்து அனுதினமும் அவளையே நினைத்து உருகும் லைலாவைப் பார்த்தே ஆகவேண்டும் எனச் சொல்லி அவளைப் பார்த்தபோது, அரசருக்கு அவளது தோற்றம் சகிக்கவில்லையாம். அப்போது அவரது அமைச்சர் சொன்ன வார்த்தை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கக்கூடியதாகும். “மன்னரே லைலாவைப் பார்க்க உங்களுக்கு மஜ்னுவின் கண்கள்வேண்டும்.”

இங்கு அழகை யார் மதிப்பிட்டது என்று பார்த்தால், அந்த அமைச்சர்தான். காதலன் - காதலி இடையே அழகு என்பதைத் தாண்டி, ஈர்ப்புதான் அந்த அழகை மெருகூட்டுகிறது. எந்த ஓர் அழகையும் மதிக்கும் அழகு பேரழகாக மாறுகிறது. ஒருவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்துவிட்டால், அவர் திட்டுவதுகூட தித்திப்பாய் இருக்கும்; அடிப்பதுகூட ஆனந்தமாய் இருக்கும்; முறைப்பதுகூட முத்தாய்ப்பாய் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் ஆத்திரப்படுவதுகூட அழகாகத் தெரியும்.

கரடுமுரடாய் நம் கண்ணுக்குத் தெரிந்தாலும், அதன் பயன் அதிகமாய் இருந்தால் அதுவும் நமக்கு அழகாகத்தான் தெரியும்.

பிறகு எப்படித்தான் அழகை அளவிடுவது? தரத்தை அளவிடலாம், அழகை எப்படி? அழகை ஒரு வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. அப்படியா, ஆம்! அது பல எண்ணங்களையும் காரணங்களையும் காரணிகளையும் உள்ளடக்கியது. ஒழுங்கற்ற ஓசை இரைச்சலைத் தருகிறது, ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசை இனிமையான இசையாக மாறுகிறது. இங்கு அழகுக்கு வலு சேர்த்தது ஒழுங்குதான்.

பருவப் பெண்கள் பார்ப்பதற்கு அழகு என்பதைத் தாண்டி, ஏதோ ஓர் ஈர்ப்புதான் அந்த அழகுக்கு அழகு சேர்க்கிறது. ஒருவர் கண்ணுக்கு அழகாகத் தெரிபவர், மற்றொருவர் கண்ணுக்கு அப்படித் தெரிவதில்லை. இங்கு அழகைத் தீர்மானிப்பது ஈர்ப்புதான். இப்படி ஒருசில காரணிகளும் காரணங்களும் ஒருசேர அமையும் போது, அந்த அழகு மேன்மையும் மென்மையும் கொண்ட அழகாக அளவிடப்படுகிறது.

பல நேரங்களில் கட்டுக்கோப்புதான் பேரழகாக உணரப்படுகிறது. எந்த நிகழ்வாக இருந்தாலும், ஒரு கட்டுக்கோப்போடு நடக்கும்போது அது அழகாக அமையும். கட்டுக்கோப்பு கலையும்போது எரிச்சலும், வேண்டாத விளைவுகளும் ஏற்படும். சட்டம்-ஒழுங்கு சீர்கெடும். நேர்த்தியும் ஒழுங்கும் கட்டுக்கோப்பும் ஒருங்கமையும் போது அளவில்லா அழகும் ஆனந்தமும் நிரம்பி வழியும்.

அழகை அளவிடுதல் என்பதன் மிகச் சரியான வழி, அதை வெறும் தோற்றத்தில் மட்டுமே அல்லாமல் அதன் பயன், நோக்கம், குணநலன், ஈர்ப்பு, இசைவு என்பன போன்ற கலவைகள் கொண்ட வரையறையோடு பார்ப்பதுதான் சரியாக அமையும். மனித அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு அதை அவ்வப்போது மாற்றி அமைத்துவிடும். அழகை அளப்பதற்கான உரிமையை யாரும் முழுமையாகக் கொண்டிருக்க முடியாது. அதேநேரத்தில், விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் மாறும்; தரநிலைகள் மாறும்; கலாச்சாரம் மாறும்; பண்பாடு மாறும்; மனித எண்ணங்கள் மாறும். ஆனால், அழகு எப்போதும் இருக்கும். அளக்க முடியாத வகையில் அது உயர உயர வளர்ந்துகொண்டே இருக்கும். பிளக்க முடியாத வகையில் மேலும் மேலும் ஆழமாகச் சென்றுகொண்டே இருக்கும்.

அழகின் உண்மையான அளவுகோல் எது? எதெல்லாம் ஆழமான மற்றும் தனிப்பட்ட முறையில் நம் இதயத்தோடு இணைந்து, ஆழ்மன எண்ண உணர்வோடு இணைகிறதோ அதுதான் அழகு. அது மட்டும்தான் அளக்க முடியாத தன்மையோடு எப்போதும் நிலைத்திருக்கும். உயர்ந்த எண்ணங்கள் தனி அழகு; அதன் செயல்வடிவம் மற்றுமொரு கூடுதல் அழகு! அவரவருக்கு உரிய அழகினை உயரிய அழகென நினைத்துக்கொள்வதில் தவறொன்றும் இல்லை.

(தொடரும்)