அமெரிக்கக் கத்தோலிக்கக் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும் அதிபர்கள் அடங்கிய குழுவினரிடம் வத்திக்கானில் உரையாற்றிய திருத்தந்தை லியோ, ‘கத்தோலிக்கக் கல்வி என்பது வெறும் அறிவை வளர்ப்பதோடு நின்றுவிடாமல், உண்மை (TRUTH) எனும் கிறிஸ்துவின் மீது ஆழமான பற்றை உருவாக்கவேண்டும்’ என்று அறிவுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் மனிதனைப் பாதுகாப்பது குறித்த தனது ‘மகத்தான மானுடம்’ (Magnifica humanitas) எனும் திருத்தூது மடலை அடிப்படையாகக் கொண்டு அவர் இதனை விளக்கினார். இன்றைய கல்வி உலகில் அறிவு சிதறடிக்கப்பட்டுக் காணப்படுகிறது என்றும், குறிப்பிட்ட துறைகளில் நிபுணர்களாக இருப்பவர்கள்கூட வாழ்க்கையின் சரியான திசையைக் கண்டறியவும், உலகளாவிய பார்வையைப் பெறவும் தடுமாறுகிறார்கள் என்றும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.