news-details
ஞாயிறு மறையுரை
ஜூன் 07, 2026 கிறிஸ்துவின் தூய்மைமிகு திரு உடலும் திரு இரத்தமும் - இச 8:2-3,14-16; 1கொரி 10:16-17; யோவா 6:51-58 (தன்னலமற்ற தியாகத்தின் அடையாளம் நற்கருணை

17-ஆம் நூற்றாண்டில் பிரான்சில் பிறந்து, கனடாவில் பூர்வகுடிகளிடையே நற்செய்திப் பணியாற்றியவர் இயேசு சபைக்குரு புனித ஐசக் ஜோக்ஸ். 1642-ஆம் ஆண்டில் எதிரிப் பழங்குடியினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, 13 மாதங்கள் அடிமையாக நடத்தப்பட்ட இவர் சொல்லொண்ணாச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அந்தக் கொடூரத்தின்போது இவரது கைகளின் விரல்கள் துண்டிக்கப்பட்டன. பின்னர் டச்சு வணிகர்களால் மீட்கப்பட்டு, சிதைக்கப்பட்ட உடலோடு பிரான்சுக்குத் திரும்பியபோதும், கிறிஸ்துவின் பலியை ஒப்புக்கொடுக்கவேண்டும் என்ற இவரது ஆன்மிக ஆர்வம் மட்டும் குறையவே இல்லை.

கத்தோலிக்கத் திரு அவையின் சட்டப்படி திருப்பலி நிறைவேற்றுவதற்குக் கைகளில் விரல்கள் அவசியமாக இருந்ததால், இவர் திருத்தந்தை எட்டாம் அர்பனிடம் சிறப்பு அனுமதி கோரினார். இவரது தியாகத்தைக் கண்டு உருகிய திருத்தந்தை, “இயேசுவின் சிறந்ததொரு சாட்சியாக விளங்கும் இந்த உன்னதக் குரு திருப்பலி நிகழ்த்துவதை யாரால் தடைசெய்ய முடியும்?” என்று கூறி அனுமதியளித்தார். தன் விரல்களற்ற கைகளில் நற்கருணையை ஏந்தி இவர் பலிபீடத்தில் நின்ற காட்சி, இறைப்பிரசன்னத்தின் வலிமையையும் தன்னலமற்ற தியாகத்தின் ஆழத்தையும் உலகிற்கு உணர்த்தியது.

இன்று நாம் கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். மனிதகுலத்தின் மீட்புக்காகத் தம் உடலையும் இரத்தத்தையும் தியாகமாக்கிய இறைவனின் எல்லையற்ற அன்பை ஆராதிக்கும் உன்னத நாள் இது.

தியாகம் என்றால் என்ன? தியாகத்தைப் பற்றி நாம் பொதுவாக என்ன புரிந்து வைத்துள்ளோம்? தியாகம் என்பது ஏதோ ஒன்றை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுப்பது அல்லது நமக்குப் பிடித்தமான எதையாவது இழப்பது என்றுதான் நாம் சாதாரணமாகப் புரிந்து வைத்துள்ளோம். ஏதோ ஓர் இழப்பை மட்டுமே தியாகம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், அதன் உண்மையான ஆன்மிகப் பொருள் இன்னும் உன்னதமானது என்பதை இந்த விழா நமக்கு உணர்த்துகிறது.

உண்மையில், தியாகம் என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் ‘Sacrifice என்று பெயர். இது  ‘Sacrum, ‘Facere ஆகிய இரண்டு இலத்தீன் வார்த்தைகளின் தொகுப்பாகும். ‘Sacrum என்றால் ‘புனிதமான (Holy) என்றும், ‘Facere என்றால் ‘உருவாக்குவது (To make) என்றும் பொருள். அப்படியெனில், தியாகம் என்ற வார்த்தையின் உண்மையான பொருள் ‘ஒன்றைப் புனிதப்படுத்துவது என்பதாகும். தங்கள் பிள்ளைகளுக்காகத் தங்கள் நலனைத் தியாகம் செய்யும் பெற்றோர், சமுதாயம் நலமோடும் வளமோடும் வாழத் தம் பங்களிப்பை வழங்குவோர், பிறரின் உயர்வுக்காகத் தங்களின் சொந்த நலன்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உழைப்போர் அனைவரும் தங்களின் செயல்களால் இவ்வுலகைப் புனிதப்படுத்தும் தியாகமிக்க வாழ்வை வாழ்கின்றனர் என்று அர்த்தம்.

இதனைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ், புனித பேதுரு பெருங்கோவிலில், 2020-ஆம் ஆண்டு புனித வியாழன் திருப்பலியை மக்களின் பங்கேற்பின்றிச் சிறப்பித்த வேளையில், கொரோனா தொற்றுள்ளவர்களுக்குப் பணியாற்றித் தங்கள் உயிரை வழங்கிய அருள்பணியாளர்கள், துறவியர், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்களைச் சிறப்பான முறையில் குறிப்பிட்டு, “அவர்கள் நம்மிடையே உலவிவந்த அடுத்த வீட்டுப் புனிதர்கள் என்று தன் மறையுரையில் போற்றினார். எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், கிறிஸ்துவின் பிரசன்னத்தை இவ்வுலகில் நிலைநாட்டிய, இன்றும் நிலைநாட்டும் இத்தகைய தியாக உள்ளங்கள் இவ்விழாவின் உண்மைப் பொருளை தொடர்ந்து உணர்த்தி வருகின்றனர்.

இந்தத் தியாகத்தின் முழுமையான வடிவமாக விளங்குபவர் இயேசு. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதே அவரது எல்லையற்றத் தியாகத்தின் உன்னத வெளிப்பாடு ஆகும். ஏதோ ஒன்றை இழப்பதற்காக அல்ல; மாறாக, ஒட்டுமொத்த மானுடக் குலத்தையும் பாவக் கறைகளிலிருந்து கழுவி, அவர்களைப் புனிதப்படுத்துவதற்காகவும், இறை வாழ்வில் முழுமைப்படுத்துவதற்காகவும் இயேசு தம் திரு உடலையும் திரு இரத்தத்தையுமே கல்வாரியில் தியாகமாக்கினார். உலகம் அனைத்தும் தமக்குச் சொந்தம் என்றாலும், எதுவுமே இல்லாதவராகத் தம்மை ஆக்கிக் கொண்டார். 

தன்னலமற்ற இந்தத் தியாகத்தின் ஆழத்தை இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள் நமக்கு விளக்குகின்றன. இன்றைய முதல் வாசகத்தில், பாலைவனப் பயணத்தின் கடுமையான சூழலில் இஸ்ரயேல் மக்கள் பசியால் வாடியபோது, இறைவன் வானத்திலிருந்து ‘மன்னா பொழிந்து அவர்களைக் காத்தார் என்பதை மோசே நினைவுபடுத்துகிறார். அந்த மன்னா மனித உழைப்பால் விளைந்தது அல்ல; மாறாக, மக்களின் பசியைப் போக்க இறைவன் தம் பேரன்பினால் பொழிந்த தியாகக் கொடை என்பதை நமக்கு உணர்த்துகிறது.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், நாம் திருவிருந்தில் பங்குகொள்ளும் போது, இயேசுவின் உடலை உண்டு அவரது இரத்தத்தைப் பருகுகிறோம் என்பதை நினைவுபடுத்துகிறார். இதன் வழியாகக் கிறிஸ்துவின் உண்மையான தெய்வீகப் பிரசன்னம் நம் அனைவருக்கும் கொடையாகக் கொடுக்கப்படுகிறது. இந்த உன்னதப் பிரசன்னமே நம்மை, “என்னில் வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் (கலா 2:20) என்று திருத்தூதரைப் போலச் சான்றுபகர வைக்கிறது. கிறிஸ்துவின் இந்த ஒரே பிரசன்னம் நம் எல்லாரிலும் செயல்படுவதால், நாம் அனைவரும் ஒரே உடலாக, ஒரே குடும்பமாக மாறுகிறோம் என பவுல் மிக ஆழமாக எடுத்துரைக்கிறார்.

இன்றைய நற்செய்திப் பகுதி, இயேசுவின் கல்வாரித் தியாகத்தின் உன்னத அன்பையும், நற்கருணையின் தெய்வீக ஆழத்தையும் நம் கண்முன்னே நிறுத்துகிறது.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே! இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் (யோவா 51) என்று இயேசு உருக்கமாகக் கூறுவது, வெறும் வார்த்தையல்ல; அது அளப்பரிய தியாகத்தின் வெளிப்பாடு. இங்கே ‘விண்ணக உணவு என்பது நாம் உள்வாங்கி வாழ்வாக்கவேண்டிய இறைவார்த்தையையும், நமக்காகப் பகிரப்படும் நற்கருணையையும் குறிக்கிறது. இயேசு தம் உடலையே நமக்காகப் பிட்டு, இரத்தத்தைச் சிந்தி, நமக்கு நிலையான வாழ்வை வாக்களிக்கிறார். ஆனால், “நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?” என்று யூதர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் செய்தபோது, அவர்கள் இயேசுவின் தியாக அன்பின் மறைபொருளை உணர்ந்திருக்கவில்லை. “திரு அவையின் உண்மையான பெருமை, கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவூட்டும் நற்கருணையில் அடங்கியுள்ளது என்ற திருத்தந்தை பிரான்சிசின் வார்த்தைக்கேற்ப, இயேசு தம்மைக் கையளிப்பதன் வழியாக நமக்குத் தரும் நிலையான வாழ்வின் ஆழத்தை இவ்வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றன.

இந்தத் தியாகத்தின் தொடர்ச்சியை இயேசு தமது இறுதி இரவு உணவின்போது முழுமையாக அடையாளப்படுத்துகிறார். அவர் அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு சீடர்களுக்குக் கொடுத்து, “இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல், இதை என் நினைவாகச் செய்யுங்கள் (லூக் 22:19) என்று கூறி நற்கருணையை ஏற்படுத்தினார். இதனைத்தான் நாம் அனுதினமும் கல்வாரித் தியாகத்தின் முடிவில்லாத் தொடர்ச்சியாக, புனித திருப்பலியாகக் கொண்டாடி வருகின்றோம். நாம் ஒவ்வொரு முறையும் திருப்பலியில் பங்கேற்று, அப்பத்தை உண்டு இரசத்தைப் பருகும்போதெல்லாம், கிறிஸ்து நமக்காகச் செய்த தியாகம் நிறைந்த வீர மரணத்தையும், அவரது மாட்சிமை பொருந்திய உயிர்ப்பையும் உலகிற்கு அறிவிக்கின்றோம். நற்கருணை நாதரை நம் வாழ்வில் உள்வாங்கும் நாமும், அவரைப் போலப் பிறர் வாழ்வு பெற நம்மையே தியாகத்தோடு கையளிக்க அழைக்கப்படுகிறோம்.

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருவுடல், திரு இரத்தப் பெருவிழா நம் ஆன்மிக வாழ்வை அர்த்த முள்ளதாக்கச் சில முக்கிய வாழ்வியல் சிந்தனைகளை நமக்கு வழங்குகிறது.

முதலாவதாக, இயேசுவின் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகுவது என்பது, அழியாத இறை வார்த்தையாகிய கிறிஸ்துவை நம் வாழ்வில் முழுமையாக உட்கொள்வதைக் குறிக்கிறது. இது இயேசுவுடன் இணைந்திருப்பதையும் கிறிஸ்துவின் உடலோடும் கிறிஸ்துவின் மறையுடலான திரு அவையோடும் எல்லா மக்களோடும் நமது இணைப்பை அதிகமாக்குகிறது. இரண்டாவதாக, நாம் எதை உட்கொள்கிறோமோ, அதுவாகவே மாறுகிறோம் என்பது நற்கருணை இயல். சதையும் இரத்தமுமான இயேசுவை நாம் உட்கொள்ளும் போது இயேசுவின் கொள்கைகள், இலட்சியங்கள் மற்றும் அவரது இரக்கமுள்ள அணுகுமுறைகள் யாவும் நமதாகின்றன. மூன்றாவதாக, இயேசுவின் கல்வாரித் தியாகத்தை நமக்கு நினைவுபடுத்தும் நற்கருணை, அவர் விட்டுச்சென்ற அன்பு, அமைதி, பரிவு, தோழமை போன்ற உன்னத விழுமியங்களை நம் உள்ளத்தில் தாங்கி வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நிறைவாக, “ஆர்வமும் சுய தியாகமும் இல்லாமல் இந்த உலகில் மதிப்பும் மாண்புமிக்க எதையும் நம்மால் சாதிக்க முடியாது என்ற ஆல்பர்ட் ஸ்வைட்சரின் கூற்றுக்கேற்ப, தம் உடலின் ஒவ்வோர் அணுவையும் மக்களுக்கென அர்ப்பணித்த இயேசுவைப் போல், நாமும் பிறரின் நல்வாழ்வுக்காக ஏதோ ஒரு வகையில் நம்மையே வழங்கும் வழிகளை இறை மகன் நமக்குச் சொல்லித்தர வேண்டுமென்று மன்றாடுவோம்.