news-details
சிறப்புக்கட்டுரை
முதல்வரே... மனந்திறந்து பேசிடுங்கள்!

ஓர் அரசியல் தலைவர் எப்படி இருக்கவேண்டும்? ஒரு நல்ல அரசியல் தலைவரின் அடையாளம் என்ன?

அவர் தமிழ்நாடு அறிந்த மூத்த அரசியல் தலைவர். அவர் தன் தொகுதிக்குள் செல்லும்போது, கார் கண்ணாடிகளை இறக்கிவிடுவார்; தெருவில் செல்வோர் அனைவருக்கும் பாகுபாடின்றி முகம் பார்த்துவணக்கம்வைப்பார். வயது மூப்பு காரணமாகச் சில வேளைகளில் ஆள் இல்லாத இடங்களில்கூட கும்பிடுவார். அவரது ஓட்டுநர் கூறுவார்: “தலைவரே, ஆள் இல்லாத இடங்களில் கூட வணக்கம் வைக்கிறீர்கள்எனக் கூறிப் புன்னகை செய்வார்.  “60 வருடமாகப் பழகிப்போச்சு தம்பிஎனக் கூறி தன் இடி சிரிப்பால் நழுவுவார்.

அரசியல் தலைவரின் உறவினர் ஒரு நேர்காணலில் சொல்கிறார்: “ஐயா, எப்பொழுதும் தமது தொகுதி மக்களின் நேரடித் தொடர்பில் இருக்கவேண்டும்என எங்களுக்கு அறிவுறுத்துவார். அவரும் நடந்த சட்டமன்றத் தேர்தல் மாய அலையில் மூழ்கிப்போனார்; தோல்வி அடைந்தார்.

இதற்கு எதிர்மறையாக, புதிய முதல்வர் 30 மாவட்ட மக்களைச் சந்திக்கவில்லை. 200 தொகுதிகளின் காற்றை அவர் சுவாசிக்கவில்லை. ஆயினும், மக்கள் வாக்கு அளித்தார்கள், முதல்வரானார். மக்கள் தீர்ப்பை மதித்து  ஏற்பதே  அறிவுடை மையாகும்.

புதிய முதல்வர் உடல்மொழி, பேச்சுகள், வார்த்தை உச்சரிப்பு என ஒவ்வோர் அசைவும் எட்டுக் கோடி தமிழ் மக்களின் வாழ்வாகும்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் தயாரிக்கப்பட்ட பதில் வருத்தமானதே. திருச்சி  கிழக்கு வாக்காளர் நன்றி அறிவிப்பு  உள்ளரங்கக் கூட்டத்திலும் இது தொடர்கிறது.

பதவிப் பிரமாணமேற்ற மேடையில்கஜானா காலிஎன்ற தப்பித்தலை முன்வைக்கிறார். தான் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், அடுத்த நிமிடமே  மகளிருக்கு மாதம் 2,500; தமிழ் நாடு முழுவதும் மகளிருக்கு இலவசப் பேருந்து; திருமணத்திற்குத் தங்கம், பட்டுச்சேலை, பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம், மாணவர்களுக்கான  உயர்கல்வி கடன் எதையும் தற்போது செய்ய இயலாது என்கிறார். புதிதாகக் கூட்டணி சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சண்முகம் அவர்களும், “தி.மு.. தன் தேர்தல் வாக்குறுதிகளை ஐந்தாவது ஆண்டில்தானே செய்ததுஎன ஆளுங்கட்சிக்கு ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறார்.

முன்பு வழங்கப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரத்தை .வெ.. அரசு  200 யூனிட்டாக உயர்த்தியது. அது விளக்கங்கள், கண்டனங்கள் என ஒரு வார காலம் பேசுபொருளானது. .வெ..வின் விவசாயக் கடன் இரத்து என்ற அறிவிப்பும் விமர்சனங்களைப் பெற்றது.

28.11.2025 அன்று ரிசர்வ் வங்கி விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த வழிகாட்டுதல்களை வழங்கியது. அதைக் கருத்தில் கொள்ளாமல் 16.4.2026-இல் .வெ.. வழங்கிய தேர்தல் வாக்குறுதியில், அனைத்து வகை விவசாயக் கடன்களும் தள்ளுபடி என வாக்குறுதி வழங்கிவிட்டது. .வெ.. அரசின் அறிவிப்பால் பயிர்க்கடன் பெற்ற 10% விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்பதே உண்மையாகும். டெல்டா மாவட்டங்களில் ஆளும் அரசை எதிர்த்த போராட்டங்கள் தொடர் கதையாகிறது.

தமிழ்நாடு அரசிற்கு டாஸ்மாக், பத்திரப் பதிவு, வாகன வரி, கேளிக்கை வரி, கனிமங்கள், சுரங்கங்கள் வகை என மாநில அரசின் தனி வருவாய் மிகக் குறைவாகும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு புதிய முறையால் ஒன்றிய அரசிடம் கையேந்தும் நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். ஒன்றிய அரசிடம் நிதி கேட்க தமிழ்நாடு முதல்வர் தனது பரிவாரங்களுடன் டெல்லி பறக்கிறார். அவருடன் நிதி அமைச்சரோ, நிதித்துறை செயலாளரோ எவரும் செல்லவில்லை.

பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் சந்திக்கிறார். நான்கு நிமிடச் சந்திப்பில் மாலை, மரியாதை, சால்வை, பரஸ்பர நலம் விசாரிப்புகள், மனு அளித்தல் என மரபுகள் பேணப்படுகின்றன. தமிழ் நாடு முதல்வர் மாநில கீதம், மேகதாது, தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை, மாநில நிதி ஒதுக்கீடு என நான்கு கோரிக்கைகளைப் பிரதமரிடம் வைக்கிறார். பிரதமர்நீங்கள் இது குறித்து நிதி அமைச்சரைச் சந்திக்கும்போது பேசுங்கள்என்கிறார்.

ஒன்றிய நிதி அமைச்சரிடம் தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டு இரயில்வே திட்ட நிதி ஒதுக்கீடுகள், மாநில அரசிற்கான நிதிப் பகிர்வுகள் எனக் கோரிக்கை வைத்தார். ஒன்றிய நிதி அமைச்சர், “உங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கி உள்ளோம்; நீங்கள் அதைச் சரியாகச் செலவு செய்யவில்லை; இனிமேலாவது நேர்மையாகச் செலவு செய்யுங்கள்எனக் கூறுகிறார்.

பிரதமரின் சந்திப்புக் குறித்த வழக்கமான தமிழ் நாட்டு முதல்வர்களின் செய்தியாளர் சந்திப்பும் தற்போது நடைபெறவில்லைபிரதமர் மோடியைப் போலவே தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் அவர்களும் செய்தியாளர்களைச் சந்திக்க மறுக்கிறார் என்ற விமர்சனம் எழுகிறது. தமிழ்நாடு அரசு நாளது தேதிவரை, தமிழ்நாடு முதல்வரின் டெல்லி பயணம் குறித்த செய்திக்குறிப்பைக் கூட வெளியிடவில்லை.

வாகன எரிபொருள்களான பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வணிக எரி, உருளை விலை உயர்வு என்பது குறித்து தமிழ்நாடு அரசு மௌனம் சாதிக்கிறது. ஒரு மாதத்தில் மாநில அரசின் வரவு-செலவுத் திட்டம் குறித்த அரசின் அடிப்படைச் செயல்பாடுகள் தொடங்கப்படவில்லை. மானியக் கோரிக்கைள், அது குறித்து அமைச்சர்களின் பதில்கள், அவர்களின் அறிவார்ந்த செயல்பாடுகள் யாவற்றையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் பற்றி எரியும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, குதிரைபேர அரசியல், மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் செயல்பாடுகள் குறித்த .வெ.. அரசின் செயல்பாடுகள் பொதுமக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசின்  காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் காவிமயமாகிவிட்டது என்ற விமர்சனமும் எழுகிறது.

ஆகவே, முதல்வர் அவர்களே, மனந்திறந்து பேசுங்கள். சட்டப்பூர்வ உத்தரவுகளைத் தாமதிக்காமல் இடுங்கள். நீங்களே எட்டுக் கோடி தமிழ் மக்களின் நல்வாழ்வு.