தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் புதிய பொருளாதார மற்றும் சமூகச் சிக்கல்களை மையமாகக் கொண்டு திருத்தந்தை 13-ஆம் லியோ அவர்களால் வெளிக்கொணரப்பட்ட ‘Rerum novarum’ (Of New Things) எனும் சமூகக் கொள்கை அறிக்கையின் 135-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், திருத்தந்தை 14-ஆம் லியோ தனது முதல் சுற்றுமடலை வெளியிட்டுள்ளார். ‘மாண்புமிகு மானுடம்’ (Magnifica Humanitas) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மடல், ‘செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) காலத்தில் மனித மாண்பைப் பாதுகாத்தல்’ குறித்துப் பேசுகிறது. ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இம்மடலில், தொழில்நுட்பம் என்பது மனிதனுக்கு எதிரானது அல்ல; இருப்பினும், அது ஒருபோதும் நடுநிலையானதுமில்லை எனத் திருத்தந்தை குறிப்பிடுகிறார். மேலும், தொழில்நுட்பம் ஒரு சிலரின் கைகளில் அதிகாரத்தைக் குவிக்கப் பயன்படக்கூடாது என்றும், அது எண்மப் (டிஜிட்டல்) பிளவை அதிகப்படுத்தக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கிறார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்கு உலகளாவிய ‘அறநெறி விதி’ (Ethical Code) உருவாக்கப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். ஏ.ஐ. என்பது இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், தொழிலாளர் கண்ணியம், சமூகநீதி மற்றும் உலகளாவிய பொதுநலனை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும். புலம்பெயர்ந்தோரை நடத்தும் விதம் சமூக நீதியின் ‘உரைகல்’ என்றும், தொழில்நுட்பம் மனித உழைப்பைப் பறிக்காமல் அதற்குத் துணையாக இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ‘தொழில்நுட்ப முன்னேற்றம் மானுடத்தின் பின்னடைவாக அமைந்துவிடக்கூடாது’ என்பதே திருத்தந்தையின் மையச்செய்தியாக உள்ளது.