அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்வுக்கு விருந்தினராகச் சென்றபோது, அக்கல்லூரியில் சாதனை படைத்த மாணவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். மனம் மகிழ்ந்தேன். அதேவேளையில், சாதனை படைக்கவேண்டிய போதிய ஆற்றலும் வாய்ப்பும் இருந்தும், அதை வேண்டுமென்றே ஒதுக்கி வாழ்க்கையை வீணாக்கும் மாணவர்களைப் பற்றிக் கூறியபோது, மனம் வருந்தியது. இதை மையப்படுத்தி எழுதிக் கொஞ்சம் மன ஆறுதல் அடைவோம் என எழுதுகிறேன்.
சிதறிக்
கிடக்கும் சிற்பங்களைப் பார்க்கும்போது, அது முதலில் ஓர் எதிர்மறை எண்ணத்தை உண்டாக்கலாம். ஆனால், அவை சிதறிப் போனதற்கான காரணங்களை அறிந்துகொண்டால், அந்தச் சிதறல்கள்கூட ஒரு கற்றல் வாய்ப்பை நமக்குத் தரும்.
நமது
வாழ்க்கையும் ஒரு சிற்பத்தைப் போன்றதே. சிற்பி தனது பணியைத் தொடங்கும்போது, அவர் முன் இருக்கும் கல் வடிவமற்றது, கனமானது, சாதாரணமானது. ஆனால், பொறுமை, திறமை, தெளிவு மற்றும் கற்பனைத்திறன் கொண்டு அவர் அதைச் செதுக்கிச் செதுக்கி, இறுதியில் ஓர் அழகிய சிற்பமாக மாற்றுகிறார். அந்தச் சிற்பம் பலராலும் பாராட்டப்படுகிறது. அதன் அழகும், அது தரும் ஈர்ப்பும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அதேபோல், நமது வாழ்க்கையும் நமது கைகளிலேயே உருவாகிறது. சரியான திட்டமிடல், நேர்மை, ஒழுக்கம், சிந்தனைத் தெளிவு ஆகியவற்றோடு வாழ்ந்தால், நம்முடைய வாழ்க்கை பிறருக்குப் பாராட்டத்தக்க சிற்பமாக மாறும். எப்படி ஒரு சிறந்த சிற்பம் அனைவரையும் ஈர்க்கிறதோ, அதேபோல் ஒரு சிறந்த வாழ்க்கையும் எல்லாராலும் விரும்பப்படும்.
சில
நேரங்களில், சிற்பியின் ஒரு தவறான அசைவால், கவனச் சிதறலால் சிற்பம் அது அடையவேண்டிய முழுமையை அடையாமல் கெட்டுப்போகிறது. அதைப் போலவே நாமும் சுயநல ஆசைகள், கோபம், உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள் ஆகியவற்றால் தவறுகளைச் செய்கிறோம். அப்பொழுது நம் வாழ்க்கை எனும் சிற்பத்தில் சில கீறல்கள் விழுகிறது. அந்தக் கீறல்களைச் சீர்செய்வது கடினம். சில முயற்சிகளின் மூலம் சரிசெய்ய முற்படலாம்; ஆனால், பல நேரங்களில் அழிக்க
முடியாதத் தழும்பாக நிரந்தரமாகவே நிற்கும். இருப்பினும், சிதறிக்கிடக்கும் சிற்பங்களைப் போல நம் வாழ்க்கையிலும் ஏற்பட்ட சிதறல்கள் நம்மைத் தடுக்கும் ஒன்றாக அல்ல; கற்றுத்தரும் ஒன்றாக இருக்கமுடியும். அவற்றின்மூலம் நாம் எச்சரிக்கையுடன் வாழக் கற்றுக்கொள்கிறோம். அதனால், சிதறல்கள் எதிர்மறை அல்ல; மாறாக, வாழ்க்கையின் பாடங்களாகவே அதை அமைத்துக்கொள்ளவேண்டும்.
சிதறிக்
கிடக்கும் சிற்பங்களைப் பார்க்கும்போது பெரும் மனவேதனையைத் தருகிறது. ஒரு காலத்தில் அழகின் உச்சமாய் விளங்கிய ஒன்றைச் சிதைவுற்ற நிலையில் பார்க்கும்போது, உடைந்து கிடக்கும் சிதறல்களைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். ஆனால், அந்தச் சிதைவின் உள்பொருளை நுண்ணறிவோடு ஆராய்ந்தால், அது வெறும் அழி வல்ல; ஏதோ ஒரு நசுக்கப்பட்ட குரலின் வெளிப்பாடாகத் தோன்றும். ‘அழகு என்றும் நிலைத்திருக் காது; ஆனால், அதன் பயணம், அதன் பாடம் நிலைத்திருக்கும்’ எனக்
கூறுவதுபோல இருக்கும்.
இருப்பினும்,
சிதைவடைந்த சிற்பங்கள்கூட ஒரு புதுக் கண்ணோட்டத்தை நமக்குக் கற்றுத் தருகின்றன. ஆதலால், சிதறிக் கிடக்கும் சிற்பங்கள் எதிர்மறையின் அடையாளமல்ல; அவை வாழ்வின் பயணத்தில் தவறுகளும் காயங்களும் கற்றல்களும் ஒன்றிணைந்து, நம்மை முழுமைப்படுத்தும் ஓர் உவமை.
வாழ்க்கை
என்பதே ஒரு சிற்பம். செதுக்கும் கைகள் நம்மிடமே உள்ளன. வாழ்க்கை எனும் சிற்பம் முழுமை காண்பதும், சிதறுண்டு கிடப்பதும் முழுக்க முழுக்க நம் எண்ணங்களின் அடிப்படையில்தான். ஆராய்ச்சிகளும் நூல்களும் அறிவின் வெளிப்பாடாக அமைகின்றன. அப்படியானால் ஆன்மாவின் வெளிப்பாடு? கலைகள்தான் ஆன்மாவின் வெளிப்பாடு. ஏனென்றால், கலைகள் எப்போதும் மனித உணர்வுகளை நிகழ்கால மற்றும் எதிர்காலத் தலைமுறைக்குக் கடத்தும் ஒரு செயல். தன் ஆழ்மனத்தில் அடங்கிக்கிடக்கும் மனக்குமுறல்களை மனிதர்களிடம் காட்டினால் வம்பு வந்துவிடும். ஆதலால், அதன் ஆற்றாமையைப் போக்க வடிகாலாகப் பயன்படுவது கலைதான். அப்படிப்பட்ட கலையின் வடிவமான சிற்பங்களை மனிதர்கள் அவர்களின் புதையல்களாகக் கருதி வருகின்றனர்.
அரசு
மாறும்போது அல்லது வேறு ஒரு கருத்தாக்கம் கொண்ட கூட்டம் வரும்போது அவர்கள் முதலில் அடித்து நொறுக்குவது இந்தக் கலை வடிவத்தைத்தான். இதுதான் பலநூறு வருடங்களாக அவரவர் கருத்தாக்கத்தை மற்றொரு தலைமுறைக்குக் கடத்தும் ஆற்றல் கொண்டது. இது எதிரிகள் கண்ணை உறுத்தும்; ஆதலால் அவர்கள் பதம் பார்ப்பது கலைச் செல்வத்தைத்தான். ஏனென்றால், கலை என்பது நமது எண்ணங்களின் வெளிப்பாடு.
கலைவடிவம்
கொண்ட சிற்பம் உடையும்போது எப்படி நமக்கு மனத்துயர் வருகிறதோ, அதுபோல நம் வாழ்க்கை எனும் சிற்பத்தைப் பிறர் உடைப்பது ஒருபுறம் இருக்கட்டும்; நாமே உடைப்பது எப்படி நியாயமாகும்? எது எப்படியாயினும், நினைவில் கொள்ளவேண்டியது ஒன்றுதான். வாழ்க்கை மிகப் பெரியது; ஒரு தவறு அல்லது ஒரு தடங்கலால் அது முடிவதில்லை. ஒரு கைதேர்ந்த சிற்பி தனது தவறான அசைவிற்காக அவரது கலைப்பணியைக் கைவிடமாட்டார். மாறாக, அவர் அதைப் பொலிவூட்டி, திருத்தி இன்னும் சிறப்பாக்கப் பாடுபடுவார். அதுபோல நாமும் நமது வாழ்க்கையில் பெரிய கனவு, பெரிய நோக்கம் வைத்திருக்கவேண்டும். அந்தப் பார்வையோடு நாம் தற்காலிகச் சிக்கல்களைச் சின்னாபின்னமாக்கி மேன்மையை அடைய முடியும்.
அண்மையில்
மனித வாழ்நிலை குறித்த ஓர் ஆய்வைப் படித்தபோது, மனது சற்று வலித்தது. தற்போதைய சூழலில் பலர் தங்களது வாழ்க்கையை வாழாமலே வாழ்ந்து செல்கின்றனர் என்பதுதான். அவரவர் வாழ்க்கையைப் பொருளுள்ளதாக மாற்றுவது நம் கையில்தான் உள்ளது. மதிப்புமிகு நமது வாழ்க்கையைப் பெரிய பெரிய கனவுகள் கொண்டு செதுக்கிக்கொள்வதன் மூலம், வாழ்க்கையெனும் சிற்பத்தை நிலைநிறுத்தலாம். கருணை மிகுந்த பார்வையுடனும், தெளிவான கனவுடனும் செதுக்கப்பட்ட வாழ்க்கை நமக்கு மட்டும் அல்ல; நம்மைக் காணும் அனைவருக்கும் ஒரு தூண்டுகோலாக மாறும்.
கலையாற்றல்
உள்ளத்தை ஈர்க்கும், கண்ணைக் கவரும். கலைகளின் எண்ணிக்கை 64 என மணிமேகலை கூறுகிறது.
மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. அந்த அழகுக் கலைகள் ஐந்து வகைப்படும் என்கிறார் மயிலை வேங்கடசாமி. அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக் கலை. இதில் சிற்பக் கலைக்கு அதிமுக்கியம் உண்டு; அதுதான் நம் அனைத்து உணர்வுகளையும் எளிதில் புரியவைக்கும். உலகிலேயே புத்தருக்குத்தான் அதிகமான சிற்பங்கள் உள்ளன. அப்படிப்பட்ட அந்தப் புத்த சிலைகள் சில வரலாற்றுப் புனைவுகளாலும் அரசு மாற்றங்களாலும் சிதைக்கப்பட்டன.
சிற்பங்களில்
மனித உணர்வுகளின் பன்முகத்தன்மை வெளிப்படுகிறது. காஜூராஹோவில் காணப்படும் தேவதையின் மெல்லிய புன்னகை, காளியின் கொடிய சாயல், புத்தரின் தியான முக அமைதி... இவை அனைத்தும் சமயச் சின்னங்கள் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் உணர்வுகள் கல்லில் பதியப்பட்ட வடிவங்களே. மனித உணர்வுகள் கண்களுக்குத் தெரியாதவையாய் இருந்தாலும், கலை வழி தொட்டு உணரக்கூடிய வகையில் இருக்கின்றன என்பதற்கு எத்தனையோ சாட்சிகள் உள்ளன.
மனித
உணர்வுகளைத் தொடர்புபடுத்திய சிற்பங்கள் தனிமனிதனுக்கும், உலகளாவிய உணர்வுகளுக்கும் இடையில் ஒரு பாலம் அமைக்கிறது. அவை நமது உள்ளுணர்வுகளை உரசி, எண்ணங்களை அலசி நம்மைப் புடமிடுகிறது.
சிற்பங்கள்
சிறியவையாகவும் சிதறியவையாகவும் இருக்கலாம்; ஆனால், என்றும் அழியாதவையாகவே நிற்கின்றன. என்ன தடைகள் வந்தாலும், ‘இன்றைய நாளை நான் நன்றாகக் கடத்துவேன்; இதுவே என் கவனம். என் மனத்தின் அமைதிக்கு முதல் மருந்து நானேதான்; நான் மட்டும்தான்; நான் எனது வாழ்க்கையை முழுமையாக விரும்புகிறேன்; என் வாழ்வு மதிப்புமிக்கது; எனக்கு எதிராக யார் வந்தாலும், என்னை நானே திடப்படுத்திக்கொள்வேன்’ எனும்
உறுதியான எண்ண அலைகளோடு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்வோம். மௌனமாக நிற்கும் சிலைகள், நம்மை அதிகம் பேசவைக்கின்றன. மௌனம் கலைத்துச் செயலில் இறங்குபவன் அழியாக் கலையாய் போற்றப்படுகிறான். கலைகள் பல கண்டு, நிலைகள்
பல அடைவோம்!