news-details
சிறப்புக்கட்டுரை
அப்பா ஓர் அருளடையாளம் (ஜூன் 21: உலக தந்தையர் தினம்)

அங்கீகாரம் பெறாத அப்பாவின் அன்பு?

தாயின் தியாகம் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது, அங்கீகரிக்கப்படுகிறது; பிரதிபலன் கிடைத்து விடுகிறது. ஆனால், பெரும்பாலும் தந்தையின் தியாகம், தாய்க்கு நிகராய் அங்கீகரிக்கப்படுவதில்லைஉலகில் தன் மனைவியின் வயிற்றில் கரு உதயமான நாள் முதற்கொண்டு, ஒரு தந்தை தனது மனத்தில் தனது வாரிசை சுகமாகச் சுமக்க ஆரம்பிக்கிறார்; கருவுற்ற தன் மனைவியையும் சேர்த்துச் சுமக்கிறார்.

தந்தை தன் அன்பை, தியாகத்தை வெளிப்படையாகச் சொல்வதில்லை. தேய்ந்த செருப்பும், தைத்த உடையும், காப்புக்காய்த்த கரங்களும், குழிகளோடு காணப்படும் கன்னங்களும் அங்கீகாரம் பெறாத நம் தந்தையின் தியாகத்தின் அடையாளங்கள்.

அப்பாவின் அன்பு ஒரு மறைபொருள்

தன் குடும்பத்தின் தேவைகளுக்காக அனுதினமும் தன் உடலால் காயப்பட்டு, தாயைப் போலவே தியாகம் செய்பவர். தன் குடும்பத்திற்கு ஏற்படும் கஷ்டங்கள், சிலுவைகள், சவால்கள், அவமானங்கள் போன்றவற்றை முன்னணியில் இருந்து சந்திக்கும் ஒப்பற்றத் தலைவனாகத் திகழ்கிறார். தாயின் தியாகத்திற்குக் குழந்தைகள் தரும் அங்கீகாரத்தையும் பாராட்டையும் சேர்த்து இரசிக்கும் பெருந்தன்மையுள்ள தியாகத் தலைவனாய் திகழ்கிறார். அங்கீகரிக்கப்படாத மறைந்த நிலையில், உண்மையான தன்னலமற்ற பிரதிபலன் எதிர்பார்க்காத தியாக அன்பை வாழ்ந்து காட்டுவதே தந்தையின் அன்பாகும்.

ஏன் வாழ்வில் தந்தையின் அன்பு மறை பொருளாகவே அமைகிறது? அதாவது மறைந்த ஒன்றாக, மறைக்கப்பட்டப் பொருளாக உள்ளது.  

அப்பாவின் அன்பு அதிர்வுகளால் ஆனது                                                                                

தந்தையின் அன்பு, ஆமையின் பாதுகாப்பைப் போன்றது. ஆமை முட்டைகளைக் கரைகளில் புதைத்துவிட்டுக் கடலுக்குச் சென்றுவிடுகிறது. ஆனால், அதன் எண்ணமெல்லாம் அந்த முட்டைகளைப் பற்றிதான் என்று இன்றைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆமைகள் தங்களது முட்டைகளுக்கு ஆபத்து வந்தவுடன், உடனே வந்து அவற்றை எதிர்கொள்கின்றன.

அப்பாவின் ஆதரவும் அன்பும் பாதுகாப்பும் அதிர்வுகளாலும் ஆனது என்று இன்றைய உளவியல் உணர்த்துகிறது. என் அப்பாவின் அன்பை அவர் உயிருடன் இருந்தபோது உணர்ந்திட, அனுபவித்திட, வெளிப்படுத்திட என்னால் முடியவில்லை; தெரியவும் இல்லைஏன், அப்பா உயிருடன் இருந்தபோது அவரிடம் ஆசிர்வாதம் பெற்றுச் சென்ற காரியங்களில், அவர் உடனிருந்து பயணிப்பதாக உணர்ந்தேன். அவர் இறந்தபின் எங்கும் வியாபித்து, நான் செய்திடும் செயல்களில் அன்பு அதிர்வுகளால் என்னோடு பயணிக்கும் ஓர் அருளடையாளமாகவே இருக்கிறார்.

மனமாற்றத்திற்கு வித்திட்ட அப்பாவின் அன்பு அதிர்வுகள்

தன்னைப் பிரிந்து சென்ற ஊதாரி மகன் வரவை எதிர்பார்த்து, அன்பு அதிர்வுகளோடு காத்திருந்த தந்தையாக இயேசு இறைவனின் அதிர்வுகளாலான அன்பைக் காட்டுகிறார். தொலைவில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார் (லூக் 15:20). அவன் மனமாற்றத்திற்கு அப்பாவின் அதிர்வுகளான, அவன் வரவை எதிர்பார்க்கும் அன்பே, ஊதாரி மகனின் மனமாற்ற வாழ்விற்கு வழிவகுக்க முக்கியக் காரணமாக இருந்தது என்பது உளவியல் காட்டும் உண்மை. கடவுளைஅப்பாஎன்று ஆளுமை உறவு பாராட்டுவது, கிறித்தவ இறையியலின் அடிப்படையும் ஆணிவேருமாய் இருக்கிறது

அப்பாவின் அன்பு ஆளுமை சார்ந்ததுதந்தையின் ஆளுமை நிச்சயமாகத் தன் குழந்தைகளைப் பாதிக்கும் என்பது ஆன்மிக - உளவியல் உண்மையாகும். “தந்தையர் புளித்த திராட்சைப் பழங்களைத் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம் (எரோ 31: 29) என்ற இறைவாக்கின்படி தந்தையர் வாழ்ந்துகாட்டிய நற்பண்புகளும் தீய பழக்கங்களும் குழந்தைகளைப் பாதிக்கும். “முக்கியமானவர்களை அப்படியே பின்பற்றுதல் (imitating the significant or significant others) என்ற கொள்கையை ஆல்பர்ட் பண்டுரா என்ற உளவியலாளர் அழுத்தம் திருத்தமாக விவரிக்கிறார்.

குழந்தைகள் தங்களது தந்தையைப் போலவே, மாதிரி ஆளுமையைப் பெற்றுவிடுகிறார்கள். தந்தையின் மறுபிம்பமாகப் பிறப்பெடுக்கிறார்கள்இவ்வுண்மையை, “நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார் (யோவா 14: 11) என்ற இயேசுவின் வாக்கு மெய்ப்பிக்கிறது. ‘மகன் தந்தையின் பெயரைக் காப்பாற்றுகிறான்என்ற பழமொழி தந்தையின் ஆளுமையைப் பெற்று அவரைப் போல் வாழ்ந்து, அவரது பெயரை நிலைநாட்டுவதையே நம் காலச்சார உண்மை சுட்டிக்காட்டுகிறது. கடவுளின் அன்பு மனுவுருவாகித் தசை வடிவில் கண் காணக்கூடிய ஆளுமைத் தெய்வமே தந்தையாகும்.                   

நம் அப்பா ஓர் அருளடையாளம்

தேய்ந்த செருப்பும், கிழிந்த உடையும், காப்புக் காய்த்த கரங்களும் குழிகள் நிறைந்த கன்னங்களோடும் என் தந்தையைக் காணும்போது, ஏழ்மை வார்த்தைப்பாடு எடுக்காத ஓர் இல்லறத் துறவி என்றே நினைப்பேன். தனக்குக் கிடைத்த சிறிது பூர்விக நிலத்தையும் எனக்காக விற்ற நம் அப்பா ஓர் அருளடையாளம்.

அவர் உழைத்து அலுத்து வரும் நேரத்தில் கூட, அன்புக்காக ஏங்கும் குழந்தைகளிடம் நேரம் செலவழித்து, அவர்களை அரவணைத்துப் பாதுகாக்கும் போதுநம் அப்பா ஓர் அருளடையாளம்.

நான் தவறுசெய்து அவமானத்தில் திளைத்து, மனமாற்றத்திற்காக ஏங்கும்போது மன்னித்து ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் நம் அப்பா ஓர் அருளடையாளமாகிறார்.

அற்ப ஆசைகளை விட்டுவிட்டு, விழுமியங்களின்படி முன்மாதிரியாய் வாழ்ந்துகாட்டிய நம் அப்பா ஓர் அருளடையாளம்.

வாழ்க்கையின் சூறாவளியில் சிக்கிக் குடும்பமே பாதிக்கப்பட்டு, வழியிழந்து நிற்கிறபோது, கடனை வாங்கி, தான் அவமானப்பட்டு நம்பிக்கையூட்டி, வழி நடத்தித் தியாகத் தலைவனாகும்போது நம் அப்பா ஓர் அருளடையாளம்.

தன் குழந்தைகள் வாழ்வின் இலட்சியத்தை அடைந்திடப் போராடித் தவிக்கும்போது, தனது வேலைப் பளுவால் உடனிருக்காவிட்டாலும், தொலைவிலிருந்து அன்பின் அதிர்வுகளை அனுப்பும்  நம் அப்பா ஓர் அருளடையாளம்.

வாழ்ந்த போதும், மரித்த பின்னும் பிள்ளைகளுக்காக இறைவனிடம் பரிந்துபேசி, இறைவரங்களைப் பெற்றுத் தரும் நம் அப்பா ஓர் அருளடையாளம்.

குழந்தைகள் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கி, செய்வது அறியாது திகைத்து நிற்கிறபோது, அவர்களை ஆற்றுப்படுத்தி வழிநடத்தும் நம் அப்பா ஓர் அருளடையாளம்.

அனுதினமும் இறைவார்த்தையை வாசித்து, குடும்ப செபத்தைத் தலைமை ஏற்று நடத்தும் நம் அப்பா ஓர் அருளடையாளம்.